வல்லாரை கீரையின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வல்லாரை கீரையின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? 

காய்கறிகள், பழங்களுக்கு அடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கீரைகள் பெரிதும் உதவுகின்றன. கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமான மற்றும் சத்தான ஒரு கீரை வல்லாரை கீரை.

பொதுவாக வல்லாரை கீரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று கூறுவார்கள். எனவே படிக்கும் குழந்தைகள் உணவில் வல்லாரை கீரையை அடிக்கடி சேர்ப்பது மிகவும் நல்லது.

வல்லாரை கீரை எந்த ஒரு சுவை மற்றும் மணமும் இல்லாதவை என்றாலும், அதைக் கொண்டு வல்லாரை கீரை கூட்டு, வல்லாரை கீரை துவையல், வல்லாரை கீரை தால், வல்லாரைக் கீரை சட்னி, வல்லாரை கீரை தோசை என்று செய்தால், அட்டகாசமாக இருக்கும். அதோடு தினமும் செய்யும் ரசத்தில் சிறிது வல்லாரை கீரையை சேர்த்தாலே போதும், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.

சரி, வல்லாரை கீரையை அடிக்கடி அல்லது வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதால் எந்த மாதிரியான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று தெரியுமா? கீழே வல்லாரை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வல்லாரை கீரையில் உள்ள சத்துக்கள்: 

வல்லாரை கீரையில் வைட்டமின் சி, டயட்டரி நார்ச்சத்துக்கள், புரோட்டீன்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. இது மட்டுமன்றி இதில் கலோரிகள் குறைவு. முக்கியமாக வல்லாரை கீரையில் பொட்டாசியம் , பாஸ்பரஸ், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

அதோடு, சாப்போனின்கள், ப்ளேவோனாய்டுகள், பாலிஃபீனால்கள், டானின்கள் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்துமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாத சத்துக்களாகும்.

1. மூளை செயல்பாடு மேம்படும் :

வல்லாரை கீரையில் உள்ள பிரம்மோசைடு, பிராமினோசைடு மற்றும் சென்டெல்லோசைடு போன்ற கலவைகள் உள்ளன. இவை நினைவாற்றலை அதிகரிக்க, அறிவுத் திறனை மேம்படுத்த தேவையான சத்துக்களாகும். எனவே வல்லாரை கீரையை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்பியல் கடத்தியின் செயல்பாட்டை தூண்டிவிடுகிறது. இதன் மூலம் மூளையில் இருந்து நரம்பு சிக்னல்கள் உடலின் மற்ற உறுப்புகளுக்கு சீராக கிடைக்கிறது.

2. நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் :

வல்லாரை கீரையை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலுக்கு போதுமான வைட்டமின் சி கிடைக்கும். வைட்டமின் சி-யானது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க இரும்புச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

3. இதய ஆரோக்கியமும் மேம்படும் :

வல்லாரை கீரையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், அது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும் இது இதய தசைகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் கெட்ட கொலஸ்டிரால் அளவை குறைத்து, நல்ல கொலஸ்டிரால் அளவை அதிகரிக்கிறது. முக்கியமாக வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்.

4. தசை பிடிப்புகள் நீங்கும் :

வல்லாரை கீரையில் தசைகளின் செயல்பாட்டிற்கு தேவையான மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது தசைப் பிடிப்புகள், தசைக் காயங்கள் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும். விளையாட்டுக்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரையை உட்கொண்டு வந்தால், அவர்களின் தசைகள் வலுபெறும்.

5. மலச்சிக்கல் நீங்கும் :

வல்லாரை கீரையில் டயட்டரி நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இந்த நார்ச்சத்துக்கள் குடலியக்கத்தை மேம்படுத்தி, அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை போன்றவை ஏற்படாமல் தடுக்கும். அதுவும் ஒருவர் கடுமையான மலச்சிக்கலை சந்தித்து வந்தால், வல்லாரை கீரை சூப் குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

6. எலும்புகளுக்கு நல்லது :

வல்லாரை கீரையில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் அதிகமாக உள்ளன. எலும்பு தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடாதெனில், வல்லாரைக் கீரையை அடிக்கடி சாப்பிடுங்கள்.

7. இரத்த சோகையை குணமாக்கும் :

வைட்டமின் சி மனித உடலில் முக்கியமான பணியை செய்கிறது. அது உண்ணும் உணவில் இருந்து இரும்புச்சத்து உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. இரத்த சோகை என்பது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் ஒரு நிலையாகும்.

உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாத போது உடலின் பிற உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். ஆனால் வல்லாரை கீரையை உட்கொண்டு வந்தால், இரத்த சோகையைத் தடுக்கலாம் மற்றும் இப்பிரச்சினையில் இருந்து விரைவில் குணமாகலாம்.