வெல்லத்தில் அதிகரிக்கும் கலப்படம்

வெல்லத்தில் அதிகரிக்கும் கலப்படம்
 

சர்க்கரை என்றால் இனிப்புச் சுவை என்ற அர்த்தம் மாறி, நீரிழிவு நோயை குறிப்பிடும் சொல்லாக மாறிவிட்டது. இந்த அச்சத்தினால் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதை மக்கள் குறைக்கத் தொடங்கி விட்டனர். அதனால், எல்லோரும் மாற்றுப் பொருளை தேட முற்பட்டபோது, நாம் கைவிட்ட, நம் தாத்தா, பாட்டி காலத்து வெல்லம் தான் நினைவுக்கு வந்தது.

வெல்லத்தில் உள்ள ஆரோக்கியம் பற்றி தெரியாமல் இருந்தவர்கள் கூகுளை தட்டிப் பார்த்தபோது, அட வெல்லத்தில் இவ்வளவு சத்துக்களா? என்று ஆச்சர்யப்பட்டனர்.

100 கிராம் வெல்லத்தில் 383 கலோரி சக்தி, புரதம் 0.4 கிராம், கொழுப்பு 0.1 கிராம், தாது உப்புக்கள் 0.6 கிராம், மாவுச்சத்து (carbohydrates) 95 கிராம், சுண்ணாம்புச் சத்து (calcium) 80 மில்லி கிராம், எரியம் (phosphorus) 40 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.64 மில்லி கிராம் இருப்பதை அறிந்தவர்கள், “நாங்க வெல்லத்துக்கு மாறிவிட்டோம்” என்று பெருமையுடன் கூற, வெல்லத்துக்கு டிமாண்ட் அதிகரித்தது. இதுதான் சமயம் என பார்த்த உற்பத்தியாளர்கள் சிலர், அதிக லாபத்தை ஈட்டும் நோக்கத்துடன் கலப்படத்தை புகுத்த ஆரம்பித்தனர். வெல்லத்தில் அப்படியென்ன கலப்படம் செய்துவிட முடியும் என்று நினைக்கலாம். ஆனால், வெல்லம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிலர் கூறியதைக் கேட்டால் அதிர்ச்சி ஏற்படுகிறது.

வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியது:

கரும்புப் பாகில் இருந்து தயாரிப்பதை வெல்லம் என்றும், பனை மரத்தில் எடுக்கப்படும் பதநீர் கொண்டு தயாரிக்கப்படுவதை கருப்பட்டி என்றும் கூறுவர். பனை வெல்லம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்புப் பாகில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லமானது, தமிழகம் முழுவதும் பரவலாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில், கரும்புப் பாகு வெல்லத்தில் தான் தற்போது அதிகளவு கலப்படம் நடைபெறுகிறது. காரணம், கருப்பட்டியின் பெயரிலேயே கருப்பு இருப்பதால், அதனை வெள்ளையாக்கி காட்டினால், கலப்படம் என்பது வெளிப்படையாக தெரிந்துவிடும். ஆனால், வெல்லத்தில் அப்படியில்லை. உருண்டை மற்றும் அச்சு வெல்லங்களில் வெள்ளை அச்சு வெல்லம், வெள்ளை உருண்டை வெல்லம் என்று தனித்தே விற்பனை செய்கின்றனர்.

ஆனால், இயல்பாக கரும்புப் பாகில் தயாரிக்கப்படும் வெல்லமும் அடர் பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். எனினும், அழுக்கு நிறத்தில் இருப்பதால், அது சுத்தம் இல்லாத வெல்லம் என்று சிலர் நினைக்கின்றனர்.

முன்பெல்லாம், வெல்லம் காய்ச்சும்போது, வெல்லப்பாகில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சுண்ணாம்பை கலந்துவிடுவர். இது, வெல்லப்பாகில் உள்ள அழுக்கை வெளியேற்றுவதுடன், சுண்ணாம்புச் சத்தாகவும் வெல்லத்தில் கலந்து ஆரோக்கியத்தைக் கொடுத்தது.

ஆனால், இப்போது, வெல்லத்தின் இயல்பான நிறமான பழுப்பு நிறத்தை போக்கு வதற்கு சோடியம் ஹைட்ரோ சல்பேட், சூப்பர் பாஸ்பேட், கேசரிப்பவுடர், மைதா மாவு ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை நாம் பயன்படுத்தினால் உடலில் குடல் இயக்கம் சீராக இருக்கும். நார்சத்துக்கள் அதிகம் என்பதால் சர்க்கரைநோய் வராது. உடலில் கல்லீரல்,  சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும்.

ஆனால் மஞ்சள் நிற கலப்பட வெல்லத்தை பயன்படுத்தினால் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளது..

எனவே நிறத்தில் கவனம் செலுத்தாமல்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்...

தமிழக மக்கள் வெளிர் மஞ்சள் நிற வெல்லத்தையும், ஆந்திர மாநில மக்கள் சற்றுபழுப்பு நிறமுடைய வெல்லத்தையும், கேரள
மக்கள் அடர் பழுப்பு நிற (இயல்பான நிறம்) வெல்லத்தையும் வாங்குகின்றனர். எனவே, நிறம் தேவைப்படுபவர்களுக்கு கேசரிப் பவுடரை கலந்து, வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. மைதா மாவு வெல்லத்தை கெட்டி உருண்டையாக்கப் பயன்படுகிறது.
 
இது ஒருபுறம் இருக்க, சர்க்கரையே வேண்டாம்...பாரம்பரிய வெல்லமே போதும் என நீரிழிவு நோய்க்கு அஞ்சி ஒதுங்கி வந்துள்ள மக்களுக்கு, சீனி, அஸ்கா எனப்படும் வெள்ளை சர்க்கரையை கலப்படம் செய்து, வெல்லம் என்ற பெயரில் சிலர் விற்பனை செய்கின்றனர்.

உதாரணமாக, வெல்லம் உற்பத்திக்கு ஒரு கொப்பரையில் வெல்லப்பாகு காய்ச்சுவதற்கு 1.25 டன் கரும்பு வேண்டும். இதன் மூலம் 70 முதல் 90 கிலோ வரை வெல்லம் கிடைக்கும். ஆனால், தற்போது வெல்லத்தின் விலையை விட, சர்க்கரையின் விலை மலிவாக கிடைப்பதால், ஒரு பங்கு வெல்லப்பாகு, 3 பங்கு சர்க்கரைப் பாகு கலந்து வெல்லம் தயாரித்து விடுகின்றனர்.இதனால் உற்பத்தி செலவு குறைந்து, லாபம் கூடுதலாகிறது. அது மட்டுமல்ல, வெல்லத்தின் நிறம் கூடுதல் வெள்ளையாக பளபளப்பாக இருப்பதால், இந்த ரக வெல்லத்தை விற்பனை செய்வதும் எளிதாகிறது.

இதில், இன்னொரு அதிர்ச்சியான விஷயம், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் சர்க்கரையைக் கூட, பெரும்பாலானவர்கள் 3-ம் தர சர்க்கரையாகவே வாங்குகின்றனர். இதனால், வெல்லம் சாப்பிடுவதாக நினைத்து, மக்களில் பலர் வெள்ளை சர்க்கரை கலந்த வெல்லத்தை சாப்பிட்டு, பழையபடியே சொந்தக் காசில் சூனியம் வைத்து, உடல் நலனைக் கெடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது.

கலப்பட வெல்லத்தால் பாதிக்கப்படுவது நுகர்வோர் மட்டுமல்ல, கரும்பு விவசாயிகளும் தான். தரமான வெல்லம் உற்பத்திக்கு 100 சதவீதம் கரும்பு பயன்படுத்தும்போது, விவசாயிகள் பயிரிட்ட கரும்புக்கு, தேவை அதிகமாக இருக்கும். மாறாக, கலப்படத்தால், 30 சதவீத கரும்பு கூட தேவையில்லை என்ற நிலை ஏற்படுவதால், விளைவித்த கரும்புகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்’ என்றனர்.

வெல்லம் வெள்ளையாக இருந்தால் சுத்தமாக இருக்கும் என்று நினைக்கக் கூடாது. வெல்லத்தில் இயல்பான நிறம் அடர் பழுப்பு. கலப்படம் செய்பவர்கள், இந்த பழுப்பு நிறத்தை நீக்கி, வெல்லத்தை வெளிர் மஞ்சள் நிறத்துக்கு கொண்டு வரவே வேதிப்பொருட்களை கலப்படம் செய்கின்றனர். எனவே, நிறத்தைப் பார்த்து வெல்லத்தை வாங்க வேண்டும். அடுத்து, சர்க்கரை கலந்த வெல்லம், பொறபொறப்பாகவும், எளிதில் உடைவதாவும், அதன் மீது பனித்துளி போல சர்க்கரை துளி படர்ந்திருப்பதையும் காண முடியும்.