நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டம்ளர் இந்த பானம் குடிங்க...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டம்ளர் இந்த பானம் குடிங்க...



கோடைக்கால நோய்கள் என்பதை தாண்டி வைரஸ் தொற்று தீவிரமாகிவருகிறது. இதை எதிர்கொள்ள உடலுக்கு வலு தேவை 

கோடைக்காலத்தில் அம்மை நோய்கள் மழைக்கு பிறகு பரவுவது போன்று வைரஸ் தொற்றும் பரவலாம். அதிலும் சிறு மழைக்கு பிறகு இந்த வைரல் தொற்று இன்னும் தீவிரமாக இருக்கவும் பரவல் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.

 உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தும் வகையில் உணவுமுறையும் வாழ்வியல் முறையும் இருக்க வேண்டும். காய்ச்சல் அல்லாத வறட்டு இருமலும் சளியும் இருக்கும் போது இந்த பானம் குணப்படுத்த உதவும் மேலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அப்படியான பானம் ஒன்றை இப்போது பார்க்கலாம்.

உடலுக்கு எதிர்ப்பு சக்தி வழங்கும் சூப்பர் பானம்​ :

ஒருவருக்கு வேண்டிய அளவு :

தேவையான பொருட்கள் :

அதிமதுரம் - கால் டீஸ்பூன்
இலவங்கம் - 1
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகுத்தூள் - 2 சிட்டிகை
காய்ச்சிய பால் - 1 டம்ளர் ( தண்ணீர் கூட போதுமானது)
பனங்கற்கண்டு - இனிப்புக்கேற்ப

எப்படி செய்வது?

வெதுப்பான பாலில் அதிமதுரம் கால்டீஸ்பூன் அளவு கலந்து அதில் இலவங்கத்தை சேர்த்து சில நிமிடங்கள் கழித்து மஞ்சள் தூள், மிளகுத்தூள், சேர்த்து கலக்கவும். தேவையெனில் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வரலாம்.

எப்போது சாப்பிட வேண்டும்?

வறட்டு இருமல் சளி கொண்டிருப்பவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் பலன் விரைவில் தெரியும். காலை உணவுக்கு பிறகும், மாலையில் இரவு உணவுக்கு முன்பும் எடுத்து வர வேண்டும்.

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அல்லது மிளகுத்தூள் மஞ்சள் தூள் மட்டும் கலந்து கொடுக்கலாம். இது உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். நன்மைகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரம் :

அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உடலில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்க செய்யும். உடல் பலவீனம் மற்றும் சோர்வை எதிர்கொள்பவர்கள் இந்த அதிமதுரம் சேர்க்கும் போது உடல் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்யலாம். மேலும் இது உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது.

அதிமதுர வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி வந்தும் தினசரி தேநீரில் கலந்து குடிப்பது பாதுகாப்பானது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இலவங்கம்​ :

இலவங்கம் பாக்டீரியாவை கொல்லக் கூடியது. கிராம்புகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை நிறுத்தும்.

சோதனைக் குழாய் ஆய்வில் கிராம்பு அத்தியாவசிய எண்ணெய் மூன்று பொதுவான வகை பாக்டீரியாக்களை அழித்தது. அதில் ஈ கோலையும் ஒன்று. இவை தான் உணவு நச்சாக காரணம். இலவங்கத்தின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் தூள்​ :

மஞ்சளில் குர்குமின் என்றழைக்கப்படும் கலவை உள்ளது. இந்த மஞ்சள் மசாலாவின் ஆற்றல் மிக்க ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணம் இதில் இருக்கும் குர்குமின் ஆகும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகுத்தூள்​ :

கருப்பு மிளகு எளிதாக வீட்டில் கிடைக்கும் பொருள் இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதோடு சிறந்த மசாலாவாகவும் இருக்கும். உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு இது சிறந்த வழியும் கூட. இது செரிமானத்தை மேம்படுத்த செய்கிறது.

வைட்டமின் சி என்னும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களில் இவை ஒன்றாகும். உடல் ஊட்டச்சத்தை உறிஞ்சவும் உடலில் இருந்து நச்சுக்கள் நீங்கவும் கருப்பு மிளகு உதவும்.

எளிதாக வீட்டில் எப்போதும் இருக்க கூடிய இந்த பொருள்களை கொண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடமுடியும். வைரஸ் தொற்று, காய்ச்சல் தவிர்க்கவும் உடலுக்கு எதிப்பு சக்தி அளிக்கவும் இந்த பானம் உதவும்.