உடம்பிலிருந்து வேர்வை வாடை வராமல் இருக்க. கடுக்காய், மகிழம்பூவை போட்டு குளித்து பாருங்க!!!

உடம்பிலிருந்து வேர்வை வாடை வராமல் இருக்க. கடுக்காய், மகிழம்பூவை போட்டு குளித்து பாருங்க!!!

இப்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. ஆண்கள் பெண்கள் எல்லோருமே வீட்டை விட்டு வெளியே கிளம்பிய உடன் வேர்வை ஊற்ற தொடங்கி விடும். வேலை செய்பவர்களுக்கு வியர்க்கத்தான் செய்யும். அந்த வேர்வையை தவறு என்று சொல்லி விட முடியாது. ஆனால் அதீத வேர்வையும், அதீத வேர்வை நாற்றமும் நமக்கு பெரிய சங்கடத்தை கொடுக்கும். நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில் இந்த துர்நாற்றத்துடன் நம்மால் நிற்க முடியாது. நம் பக்கத்தில் யாராவது வந்தால் முகம் சுழிக்கும் அளவுக்கு வேர்வை நாற்றம் இருந்தால், அது நமக்கு தர்ம சங்கடத்தை தரும். அது மட்டும் இல்லாமல் அதிக வியர்வை அழுக்கு சேரும் போது நம்முடைய உடம்பில் கிருமி தொற்று ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. அதீத வேர்வை வியர்த்து வடிந்தால் கூட நம்முடைய சருமம் வாசமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் எப்படி குளிக்க வேண்டும்.

வேர்வை துர்நாற்றத்தை தடுக்க குளிக்கும் முறை :

இந்த குளியலுக்கு நாம் பயன்படுத்த போகும் இரண்டு பொருள். இயற்கையாக நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள்தான். மகிழம்பூ, கடுக்காய் பொடி. மகிழம்பூ காய்ந்த மகிழம் பூக்களாகவே நாட்டு மருந்து கடைகளில் விற்கிறது. அதை வாங்கி மிக்ஸியில் லேசாக ஓட விட்டு பொடி செய்து கொள்ளுங்கள். பிறகு கடுக்காய் பொடியை இந்த மகிழும்பூ பொடியோடு கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் சூப்பரான வாசம் நிறைந்த பொடி தயார். இரண்டு பொருட்களையும் சம அளவுகளில் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பொடியை தேவையான அளவு ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கலந்தால் பேஸ்ட் போல உங்களுக்கு கிடைத்துவிடும் அல்லவா. இதை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கலாம். குறிப்பாக துர்நாற்றம் வீசக்கூடிய அக்குள் பகுதி, தொடை பகுதி, அந்தரங்க பகுதி போன்ற இடங்களில் எல்லாம் இந்த பொடியை தேய்த்து குளிக்கும்போது அந்த இடத்தில் வரக்கூடிய துர்நாற்றமானது படிப்படியாக குறைய தொடங்கி விடும்.

நிறைய பேருக்கு இப்படி துர்நாற்றம் வீசக்கூடிய பிரச்சினை இருக்கும். ஆனால் அவர்கள் வெளியில் சொல்லுவதற்கு கூச்சப்படுவார்கள். இதற்கு தீர்வு தேட முடியாமல் தவிர்த்து வருபவர்களுக்கு, இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும். 13 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் எல்லோருமே இந்த பொடியை தாராளமாக பயன்படுத்தலாம். எந்த ஒரு தவறும் கிடையாது.

இவ்வளவு கஷ்டப்படுவதற்கு குளித்துவிட்டு சென்ட் அடித்துக் கொண்டு செல்லலாமே என்று சில பேர் யோசிக்கலாம். ஆனால் செண்ட் வாசனை நிரந்தரமாக உங்களுக்கு நறுமணத்தை தராது. அதுமட்டுமல்லாமல் சென்ட் வாசனையும், வியர்வை வாசனையும் சேர்ந்தால் அதில் ஒரு குமட்டல் வரும் பாருங்கள். அது உங்களுக்கு தெரியாது. பக்கத்தில் நிற்பவர்களுக்கு தான் தெரியும். சென்ட் என்றைக்குமே நிரந்தர தீர்வை கொடுக்காது.

இந்த இரண்டு பொடியை தண்ணீர் ஊற்றி கலந்து உடல் முழுவதும் லேசாக பூசி மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து குளித்தால் அவ்வளவு நறுமணமாக இருக்கும். சோப்பு போட்டு குளித்துவிட்டு அதன் பிறகு இந்த இரண்டு பொருட்களை போட்டு தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த குறிப்பு தேவைப்பட்டால் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் உண்டு. எளிமையான இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உடல் துர்நாற்றத்தால் அவதிப்படும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் குறிப்பை பகிரலாம்.