வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி...

வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி...

வெயில் ஒரு வரம்

வெயில் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம்…

உண்மையில் வெயில் காலம் என்பது ஒரு வரப்பிரசாதம் தான்...

நம்மைப் போன்ற வெப்பமண்டல நாடுகளில் வெயில் நமக்கு பழகிய பருவம் தான். ஆனாலும் சமீபத்திய பருவநிலை மாற்றங்கள் கொஞ்சம் பயமுறுத்தவே செய்கிறது. வந்தேவிட்டது வெயில். இன்னும் 3-4 மாதங்களேனும் இந்த வெயிலின் தாக்கம் இருக்கும்.

வெயில் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன செய்யலாம்..

கோடையில் வரும் நோய்களை எப்படி சமாளிக்கலாம்?

நாம் என்ன செய்யவேண்டும்?

 என்ன செய்யக் கூடாது!

சூரிய வெளிச்சம் ஒரு வரம்

வெயிலில் இருந்து நமது உடம்பே தயாரிக்கும் மிக முக்கிய சத்து விட்டமின் டி. இதை நமது உடம்பே விட்டமின் டி3 ஆகவும் செய்து கொள்ளும். இந்த சத்து சுண்ணாம்பு சத்தை உடம்பில் கிரகிக்க, தக்க வைக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் எலும்பு வளர்ச்சி, எலும்பு தேய்மானம் போன்றவற்றில் இதன் அவசியத்தை உணரலாம்.

காலை அல்லது மாலை இளம் வெயிலில் தினம் 10 நிமிட வெயில் பட்டாலே நமக்கெல்லாம் போதுமானது. 
விட்டமின் டி எலும்பு மட்டுமல்லாமல்…… 

*ஆஸ்துமா, 

*சர்க்கரை நோய், 

*புற்றுநோய் 

என்று பல பிணிகளை வளர விடாமல் காக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி மூளை நரம்பியல் மணடலத்திற்கும் வலுசேர்க்கிறதாம்.

இவ்வளவு பயன்கள் இருந்தும் , வெப்ப மண்டல இந்தியாவில் கூட இந்த சத்து குறைபாடு அதிகரித்து வருகிறதாம். முக்கியமாக பெருநகரங்களில். 
ஏன்? வேறென்னவாக இருக்க முடியும்? வெயிலை தவிர்ப்பது தான்!

காலை மாலை இளம் வெயிலை கூட எவரும் விரும்புவதில்லை. படுக்கையறை முதல் வாகனம், பள்ளி, அலுவலகம், வீடு என்று எங்கும் எதிலும் வெயில் தெரியாமல் இருக்க ஏஸி வந்து விட்டதே!

குழந்தைகள் வெயிலில் விளையாடுவதில்லை. 
அப்படியே வெளியே போகவேண்டுமா போடு சன்ஸ்கீரீன் லோசன். அல்லது கூல் கூல் பவுடர். ஆண் பெண் குழந்தை பெரியவர்கள் என்ற பாகுபாடு இன்றி இதை இப்போது உபயோகிக்கிறார்கள். கொடுமை.  அப்புறம் எங்கிருந்து கிடைக்கும் விட்டமின் டி?

வெயில் மிக குறைவாக கிடைக்கும் இடங்களில் வாழ்பவர்கள், ஆஸ்துமா, சிலவகை புற்றுநோய், தோல் பிரச்சினை என பல நோய்களுக்கு தீர்வாக வெயில் குளியல் விரும்புகிறார்கள். அங்கு வெளிரிய தோல் கொஞ்சம் கருத்தால் அழகாகவே பார்க்கப்படுகிறது.

உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த விட்டமின் டி சத்து குறைபாடு அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணம் நமது நுகர்வு மாற்றம் தான். பெருநகரங்களில் வாழும் வயதானவர்கள் முக்கியமாக வெயில் மறைவிலேயே வாழும் அவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கண்ணாடி மறைவில் வெயில் படுவது அவ்வளவு நல்லதல்ல. உதாரணம். கண்ணாடி ஜன்னல், வாகன ஜன்னல்கள், இவற்றின் மூலம் வடிகட்டப்பட்ட வெயில் ஆபத்து. புற்றுநோய் இங்குதான் வெயிலினால் அதிகமாகலாம். இப்படிப்படட் வடிகட்டிய வெயிலை தவிர்த்தலே நல்லது.

தோலின் நிறம் கருப்பதையும் ஒரு காரணமாக பலர் வெயிலை தவிர்க்கின்றனர். இது மிகப்பெரிய சமூக மற்றும் மன ரீதியான பிற்போக்கு சிந்தனை.இந்த சிந்தனையை ஆதி அடிமை புத்தியிலிருந்து இன்று வெள்ளை தோலுக்கான லோசன் விற்கவும் சன்ஸ்கீரீன் லோசன் விற்கவும் வணிக உலகம் மிகச்சரியாக வளர்த்து வருகிறது. கவனம்.

இப்படி எளிமையான சூரிய ஒளியில் கிடைக்க வேண்டிய சத்தை தவிர்த்து விட்டு , இதையும் விலை கொடுத்து வாங்க மக்களை வணிக உலகம் மெல்ல மூளைச்சலவை செய்ய ஆரம்பித்துள்ளது. விளையாட ஆற்றல் வேண்டுமானால் விட்டமின் டி நிறைந்த எண்ணெயில் பொரித்த முறுக்கு சாப்பிடணுமாம். மூட்டு பிரச்சினை, சோர்வின்மைக்கு இந்த எண்ணையில் பொரித்த வடை சாப்பிட வேண்டுமாம். அடேய்! ஏமாற்றுவதற்கும் ஒரு அளவில்லையா?
 மக்கள் கோமாளிகள் ஆனால் வணிகனுக்கு கொண்டாட்டம் போல.

இவ்வளவு சொல்லியும் மிக எளிதாக கிடைக்கும் இந்த சத்தை எண்ணைக்கும், மருந்துக்கும், மசாஜ் சென்டருக்கும் செலவழித்து தான் பெறுவேன் என்பவர்கள் அப்படிக்கா சென்று விடவும்.

இனி வெயில் காலத்தில் குழந்தைகளை சம்மர் கேம்ப்புக்கு அனுப்பாமல் வெளியில் வெயிலில் விளையாட அனுப்புங்கள். காலை மாலை மட்டுமாவது. 

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து காலை இளம் வெயிலில் இருந்து குளிப்பார்கள் முன்னர். 
குறைந்தது வாரம் ஒருமுறையேனும் என்று இந்த பழக்கத்தை மீட்டெடுப்போமா?

பெரியவர்கள், முக்கியமாக படுக்கையில் விழுந்துவிட்டவர்களை தினமும் இளம் வெயிலில் 10 நிமிடமாவது உட்கார வையுங்கள். 
பெருநகரங்களில் பால்கனியில் கூட இதை செய்யலாம்.
முக்கியமாக முதியோர் இல்லங்கள் இதை பின்பற்ற வேண்டும். 

வெளியே போகும்போது உச்சிவெயில், உக்கிரவெயில் இல்லாத போது முழுக்க மூடிய ஆடை, குடை பயன்படுத்தாமல் கொஞ்ச நேரம் வெயில் படும்படி தான் நடப்போமே.

இப்படி வெயிலுடனான நமது உறவை மீட்டெடுப்போம்.