பாதிப்படைந்த நரம்புகளை பலப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்...
பாதிப்படைந்த நரம்புகளை பலப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்...
நமது உடலில் உள்ள நரம்புகளானது மூளைக்கும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையே மின் தூண்டுதல்களை கொண்டு செல்லும் கேபிள்களை போன்றதாகும். இந்த தூண்டுதல்கள் மூலம் தான் நம்மால் ஒன்றை உணர முடிவுகிறது, மற்றும் தசைகளை நகர்த்த முடிகிறது. மேலும் நரம்புகளானது சுவாசிப்பது, வியர்ப்பது அல்லது உணவுகளை செரிப்பது போன்ற தன்னிச்சையான செயல்பாடுகளையும் பராமரிக்கின்றன. நரம்பு செல்கள் தான் நியூரான்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட நரம்புகள் பலவழிகளில் சேதமடைகின்றன. அதில் விபத்துக்கள், அளவுக்கு அதிகமான அழுத்தம், விளையாடும் போது அல்லது எதிர்பாராவிதமாக கீழே விழும் போது ஏற்படும் காயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர சர்க்கரை நோய், குய்லின்-பார் சிண்ட்ரோம் மற்றும் கார்பல் டன்னல் நோய்க்குறி போன்ற மருத்துவ நிலைமைகள் மற்றும் லூபஸ், முடக்கு வாதம் போன்ற ஆட்டோ இம்யூன் நோய்கள் போன்றவைகளும் அடங்கும்.
ஆனால் சேதமடைந்த நரம்புகள் குணமாக நீண்ட நாட்கள் எடுக்கும். மேலும் சேதமடைந்த நரம்புகளை சரிசெய்ய வெறும் மருந்து மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டால் போதாது, நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். இப்போது சேதமடைந்த நரம்புகளை சரிசெய்ய உதவும் சில உணவுகளைக் காண்போம்.
செலரி :
சேதமடைந்த நரம்புகளானது கடுமையான வலியை உண்டாக்கும். இந்நிலையில் செலரியை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அதில் உள்ள நெர்வைன் என்னும் பொருளானது நரம்புகளை அமைதியடையச் செய்து, நரம்புகளை இயல்பான நிலைக்கு கொண்டு வர உதவும். அதுவும் செலரியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, கேரட் ஜூஸ் உடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், கடுமையான நரம்பு வலியில் இருந்து விடுபடலாம்.
ஓட்ஸ் :
ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, நரம்புகளில் ஏற்படும் வலியைக் குறைக்கவும் உதவும். எனவே நரம்பு வலியை சந்திப்பவர்கள் காலையில் ஒரு கப் ஓட்ஸ் உட்கொண்டால், உடலுக்கு வேண்டிய மெக்னீசியத்தில் 20 சதவீதம் கிடைத்து, நரம்புகளின் செயல்பாடு மேம்படுவதோடு, சேதமடைந்த நரம்புகளும் விரைவில் சரியாகும்.
தேன் மற்றும் சோயா பால் :
சோயா பாலில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளன. அந்த சோயா பாலை தேனுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, சேதமடைந்த நரம்புகளால் ஏற்படும் கடுமையான வலியில் இருந்து விரைவில் விடுபடலாம். அதுவும் சிறப்பான பலனை விரைவில் காண தினமும் மூன்று வேளை தேன் கலந்த சோயா பாலைக் குடித்து வர வேண்டும்.
பூண்டு பால் :
பூண்டு பாலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் நிறைந்துள்ளன. இவை நரம்பு வலிகளில் இருந்து நல்ல தீர்வை அளிக்கும். அதற்கு 2 பூண்டு பற்களைத் தட்டி, 1/2 கப் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த பாலை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், 2 பூண்டு பற்களைத் தட்டி, வெதுவெதுப்பான கடுகு எண்ணெயில் சேர்த்து, அந்த எண்ணெய்யால் வலிமிக்க பகுதியில் தடவி மசாஜ் செய்து வந்தால், சேதமடைந்த நரம்புகளால் ஏற்பட்ட வலி குறைவதோடு, விரைவில் நரம்புகளும் குணமாகும்.
வைட்டமின் பி12 உணவுகள் :
நரம்பு செல்களைப் பராமரிக்கவும், சேதமடைந்த நரம்புகளை சரிசெய்யவும் வைட்டமின் பி12 சத்து முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே நரம்பு வலியால் அவதிப்படுபவர்கள் வைட்டமின் பி12 உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வர வேண்டும். இந்த வைட்டமின் பி12 சத்தானது ஈரல், மத்தி, இறால், சால்மன் மீன் போன்றவற்றில் அதிகம் காணப்படுகின்றன.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகள் :
ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் நரம்பு சேதத்தை தடுக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகின்றன. எனவே நரம்பு தொடர்பான பிரச்சினைகளைக் கொண்டவர்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளான ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, தக்காளி, சிவப்பு திராட்சை, பூண்டு, பசலைக்கீரை, கேரட், மாதுளை, டார்க் சாக்லேட், க்ரீன் டீ, ப்ளாக் பெர்ரி மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை தங்களின் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நரம்பு பிரச்சினைகளை சரியாவதோடு, புற்றுநோயின் அபாயமும் குறையும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் :
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆளி விதை, வால்நட்ஸ், சோயா பீன்ஸ், இறால், மீன்கள், டோஃபு போன்றவற்றில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் இவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால், இவை நரம்பு சேதங்களை உண்டாக்கும் அழற்சியைக் குறைக்கின்றன. ஆகவே நரம்பு தொடர்பான பிரச்சினைகளை கொண்டவர்கள் இந்த உணவுகளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.