பளிச்சிடும் பற்கள், ஆரோக்கியமான ஈறுகள், ஆயுர்வேத மூலிகை பல்பொடியை. நீங்களே தயாரித்து கொள்ளலாம்...

பளிச்சிடும் பற்கள், ஆரோக்கியமான ஈறுகள், ஆயுர்வேத மூலிகை பல்பொடியை. நீங்களே தயாரித்து கொள்ளலாம்...

பற்கள் பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்க பாரம்பரியமான விஷயங்களை கடைப்பிடித்தாலே போதுமானது. பற்களை சுத்தம் செய்ய வீட்டிலேயே பல்பொடி தயாரித்து பயன்படுத்தலாம். ஆயுர்வேத முறையில் பலவிதமான பல்பொடிகள் பரிந்துரைக்கப்படுகிறது.  அப்படி ஒரு மூலிகைப்பொடியை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை தான் இப்போது தெரிந்துகொள்ள போகிறோம்.

பற்கள் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமானது. அதோடு மஞ்சள் பற்கள், கறைபடிந்த பற்கள், ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் சொத்தை, பல் வலி போன்ற பிரச்சினைகளை தடுக்க மூலிகை பல் பொடி பலன் கொடுக்கும். மேலும் பற்கள், ஈறுகள் இரண்டையும் வலுவாக்க பல் சுத்தம் முக்கியம். தினமும் காலை நேரத்திலும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் பல் துலக்குவது நல்லது.

மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை பொருள்களின் தயாரிப்பில் செய்யப்படும் இந்த பல்பொடி உங்கள் பற்களை ஆரோக்கியமாக வலுவாக வைத்திருக்க செய்யும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்த மூலிகை பல்பொடி தயாரிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.

மூலிகை பல்பொடி தயாரிக்க தேவையான பொருள்கள் :

திரிபலா சூரணம் - 25 கிராம்

கருங்காலி பட்டை பொடி - 25 கிராம்

அர்ஜுனா மரப்பட்டை பொடி - 15 கிராம்

பட்டை பொடி - 10 கிராம்

ஏலக்காய் பொடியாக்கியது - 15 கிராம்

இலவங்கம் - 5 கிராம்

திரிகடுகு - 5 கிராம்

ராக் சால்ட் - 5 கிராம்

வேப்பிலை பொடி - 5 கிராம்

இந்த பொருள்கள் அனைத்தும் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். தரமானதை வாங்கி பயன்படுத்தவும். ஏலக்காய், பட்டை, இலவங்கம், வேப்பிலை பொடியை வீட்டில் தயாரித்து கொள்ளலாம்.

மேலும் திரிபலா சூரணம் (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) மற்றும் திரிகடுகு (கருப்பு மிளகு, வால் மிளகு, இஞ்சி ) கூட பலரும் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவது உண்டு. கருங்காலி பட்டை மற்றும் அர்ஜுனா மரப்பட்டைகளை பொடியாக இல்லை எனில் பட்டையாகவும் வாங்கி வீட்டில் பொடித்து கொள்ளலாம்.

மூலிகை பல்பொடி தயாரிப்பது எப்படி?

பொருள்களை வாங்கி அளவை சரியாக எடுத்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக வைக்கவும்.

கருங்காலி பட்டை மற்றும் அர்ஜுனா மரப்பட்டைகளாக வாங்கி இருந்தால் அதை சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துங்கள்.

வீட்டில் ஏலக்காய், இலவங்கம், பட்டை போன்றவற்றை பொடிக்கும் போது கழுவ வேண்டாம். வெயிலில் உலர்த்தவும் வேண்டாம். இது நறுமணம் நிறைந்தவை. அதனால் நறுமணம் நீங்காமல் பயன்படுத்தவேண்டும். தூசி இருப்பதாக நினைத்தால் மெல்லிய சுத்தமான துணியால் துடைத்து பயன்படுத்தலாம்.

இப்போது ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைக்கவும். சில பொருள்கள் கடினமாக இருக்கும். சில பொருள்கள் உடனே அரைப்பட்டுவிடும் என்பதால் தனித்தனியாக பொடிக்கவும். மிக்ஸியில் பொடித்து மெல்லிய துணியில் வடிகட்டி பயன்படுத்தலாம்.

அனைத்தையும் ஈரம் இல்லாத அகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்து விடவும்.

இதை சுத்தமான ஈரம் இல்லாத கண்ணாடி அல்லது உயர்தர பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

மூலிகை பல் பொடியின் நன்மைகள் :

திரிபலா :
இது சுவையாக இருக்காது. ஆனால் இதன் ஆஸ்ட்ரிஜெண்ட் குணங்கள் பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கில் உள்ள நச்சுக்களை அகற்றும். மருத்துவ ஆய்வுகள் திரிபலா பற்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறது.

அர்ஜூனா மரப்பட்டை :
இயற்கை நற்குணங்கள் அடங்கியுள்ளது இது. இதை வெறுமனே அரைத்து நல்லெண்ணெய் சேர்த்து பற்களில் தேய்த்துவந்தால் பல் சொத்தை உபாதை குறையும். ஈறுகள் பிரச்சனை குணமாகும்.

ராக் சால்ட் :
பல்வலியை குறைக்கும். இது பல் துவாரங்களை தடுக்கும். உப்பில் உள்ள மருத்துவ குணங்கள் குழியை உண்டாக்கும் புண்களுடன் போராடுகின்றன.

இலவங்கப்பட்டை :
இது ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடக்கூடியது. வாயில் இருக்கும் தொற்றை தடுக்க இலவங்கப்பட்டை உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.

இலவங்கம் :
இதில் யூஜெனால் என்ற செயலில் உள்ள மூலப்பொருள் உள்ளது. இது இயற்கை மயக்க மருந்து பல் வலியை குறைக்க செய்கிறது. மேலும் இது இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது வீக்கம் எரிச்சலை குறைக்கலாம்.

வேப்பிலை :
இது கசப்பு சுவையை சேர்க்கும். காரத்தன்மை குறைக்கும். பல்லில் சொத்தை வராமல் தடுக்கும்.

ஏலக்காய் :
வாய் துர்நாற்றம் இல்லாமல் புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது.

மூலிகை பல்பொடியால் தீரும் பல் பிரச்சினைகள் என்னென்ன?

மூலிகை பல்பொடி பயன்படுத்துவதால் பற்கள் பலமாகும். பல் சிப்பியை பாதுகாக்கும். பற்களில் கறைபடியாமல் காக்கும். மேலும் பற்களின் மேல்பரப்பில் பிளேக் உருவாவதை தடுக்கும். பல் சிதைவு சிகிச்சை மற்றும் தடுப்புக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

மூலிகை பல் பொடி பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்வதன் மூலம் ஈறு அழற்சி, தடுக்கப்படும். பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

மூலிகை பல்பொடியை எப்படி பயன்படுத்துவது?

உள்ளங்கையில் ஒரு டீஸ்பூன் அளவு பல் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் பதத்துக்கு குழையுங்கள். குழந்தைகளுக்கு தரும் போது தேன் கலந்து குழைக்கலாம்.

இந்த பொடியை உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது தடவி கொள்ளவும்.

உங்கள் ஆட்காட்டி விரலால் 3 முதல் 5 நிமிடங்கள் வரை மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பற்களுக்கு பிரஷ்தான் என்பவர்கள் குழைத்த பல் பொடியை பேஸ்ட்டில் தொட்டு பல் தேய்க்கலாம். ஆனால் ஈறுகளுக்கு ஆள்காட்டி விரலை மென்மையான மசாஜ் செய்ய பயன்படுத்த வேண்டும். பிறகு வாய் கொப்புளித்து சுத்தம் செய்யலாம்.

தினமும் எத்தனை முறை பல் தேய்க்க வேண்டும்?

காலை எழுந்ததும், இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பும் பல் தேய்க்க வேண்டும்.

பற்களை ஆரோக்கியமாக பராமரித்தால் வயதான காலத்திலும் பற்கள் உதிர்வதற்கான வாய்ப்புகள் குறைவே என்று சொல்லலாம்.