வயிற்று வலி, வாயு தொல்லை… இன்ஸ்டன்ட் நிவாரணம் தரும் பூண்டு கஞ்சி!!
வயிற்று வலி, வாயு தொல்லை… இன்ஸ்டன்ட் நிவாரணம் தரும் பூண்டு கஞ்சி!!
இந்திய உணவு வகைகளில் ஈடுசெய்ய முடியாத ஒரு பொருளாக பூண்டு உள்ளது. இவை காய்கறிகள், கறி மற்றும் பருப்புகளில் சேர்க்கப்படுகிறது. மேலும், நாம் தயார் செய்யும் டிஷுக்கு சரியான சுவையையும் நறுமணத்தையும் கொடுக்க ஒரு சில பூண்டு பற்கள் போதும்.
உணவுகளில் சுவையைத் தூண்டுவதைத் தவிர, பூண்டு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. அந்த வகையில், இவை ஒரு அற்புதமான ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், எடை குறைக்கும் செயலுக்கும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை உறுதிப்படுத்த பூண்டு உதவுகிறது.
இந்த அற்புத பூண்டில் நாம் இன்று தயார் செய்யவுள்ள பூண்டு கஞ்சி வயிற்று வலி, வாயு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு உடனடி நிவாரணம் தருகிறது. இப்போது அவற்றுக்கான ஈஸி செய்முறையை இங்கு பார்க்கலாம்.
பூண்டு கஞ்சி செய்யத் தேவையான பொருட்கள் :
பச்சரிசி – அரை கப்
பூண்டு – 75 கிராம்
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கு
காய்ச்சிய பால் – 1 கப்
பூண்டு கஞ்சி எளிதான செய்முறை :
முதலில் அரிசியை நன்றாக கழுவி சிறிது நேரம் ஊறவைத்து நீரை வடித்து கொள்ளவும்.
பின்னர் பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
தொடர்ந்து குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்த பின்னர் பூண்டை சேர்த்து வதக்கவும்.
பூண்டு நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்கவும்.
குக்கர் விசில் போனதும் மூடியை திறந்து சாதத்தை நன்றாக மசித்து விட்டு பால் கலந்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் சுவையான பூண்டு கஞ்சி தயார்.