இடியாப்பம், சிக்கல் தராத உணவு

இடியாப்பம், சிக்கல் தராத உணவு

பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மோகத்தின் பிடியிலிருந்து கொஞ்சம் தமிழர்களாவது தப்பித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம், தமிழகத்தின் பெருநகரங்களில் இன்றைக்கும் ஒலிக்கும் ‘இடியாப்போம்...’ என்கிற குரல். சிக்கல் நிறைந்த இடியாப்பம், உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது என்பதால் இன்றைக்கு தமிழ்நாட்டில் இடியாப்பம் பெரும்பாலான ஹோட்டல்களில் கிடைக்கின்றன. ஆனால், அத்தனை உணவகங்களும் தாங்களே இதைத் தயாரிப்பதில்லை. இதற்குக் கூடுதல் செலவாகும் என்பதால் மொத்தமாகத் தயாரிக்கும் இடங்களில் வாங்கி விற்கிறார்கள். இடியாப்பத்தை நம் வீட்டிலேயே செய்வதுதான் ஆரோக்கியமானது.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - தேவையான அளவு

உப்பு, எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

பச்சரிசியைத் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து சுத்தம் செய்து மெஷினில் கொடுத்து மாவாக்கிக் கொள்ளவும். அல்லது சுத்தமான பச்சரிசியை இடித்தும் மாவு தயாரிக்கலாம். இந்த அரிசி மாவில் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஊற்றவும். அத்துடன் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். சூடான இட்லிச் சட்டியில் இட்லித் தட்டுகளுக்கு மேல் ஒரு துணியை வைத்து, அதன் மீது இடியாப்பக் குழலில் மாவைப் பிழிந்து வேகவைத்து எடுத்தால் சுவையான இடியாப்பம் ரெடி!

என்ன பலன்?

அவரவர் சுவைக்கேற்ப தேங்காய்ப் பால், வடகறி, மீன் குழம்பு, பாயா இவற்றுடன் சாப்பிடலாம் என்றாலும்...

ஜுரத்துக்கு இடியாப்பத்தை இளஞ்சூடான நீருடனும் வயிற்றுப் போக்குக்கு மோர் மற்றும் கல் உப்புடன் சேர்த்துத் தரலாம். குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. ஓர் இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன. ஆயுர்வேத மருத்துவமுறையில், இது வாதத்தையும் பித்தத்தையும் சமநிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள். இதை இளஞ்சூடாகச் சாப்பிடுவதே நல்லது.