உங்களுக்கு தூக்கத்தில் ஜொள்ளு விடும் பழக்கம் இருக்கா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்..!

உங்களுக்கு தூக்கத்தில் ஜொள்ளு விடும் பழக்கம் இருக்கா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்..!

பொதுவாக குழந்தைகள் தூங்கும் போது ஜொள்ளு விடுவார்கள். ஆனால் பெரியோர்களுக்கும் தூக்கத்தில் ஜொள்ளு விடும் பழக்கம் உள்ளது. இம்மாதிரியான பழக்கம் பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். குழந்தைகளுக்கு தூக்கத்தில் ஜொள்ளு வடிவதற்கு அவர்களின் வாய் மற்றும் புலன்களின் மீது சரியான கட்டுப்பாடு இல்லாததால் ஏற்படுகிறது. ஆனால் பெரியவர்களுக்கு ஏற்பட்டால், நிச்சயம் அதை சரிசெய்ய வேண்டும்.

அதற்கு முதலில் எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு தூக்கத்தில் ஜொள்ளு வழிகிறது என்பதை தெரிந்து கொண்டு, பின் அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகளை அறிந்து முயற்சிக்க வேண்டும். இப்போது இவற்றைக் குறித்து விரிவாக காண்போம்.

தூக்கத்தில் ஜொள்ளு விடுவதற்கு பின்னிருக்கும் காரணங்கள்:

அதிகப்படியான எச்சில் உற்பத்தி
நமக்கு எச்சில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதில் ஏராளமான கனிமச்சத்துக்கள் உள்ளன மற்றும் இவை நம் காயங்களை ஆற்றக்கூடியவை. ஆனால் நாம் ஏதேனும் நோய்த்தொற்று, காயங்கள் அல்லது பிற மருத்துவ பிரச்சினையால் அவதிப்படும் போது, நம் உடல் அதிகளவு எச்சிலை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக தூக்கத்தில் ஜொள்ளு விட நேரிடுகிறது.

தூங்கும் நிலைகள் :

சிலர் குப்புறப்படுத்து தூங்கும் போது வாயை திறந்து கொண்டு தூங்குவார்கள். இம்மாதிரியான நிலையில் தூங்குவது, தூக்கத்தில் ஜொள்ளு விடுவதற்கு வழிவகுக்கும்.

மூக்கடைப்பு :

ஜலதோஷம் காரணமாக மூக்கின் துவாரங்கள் அடைபட்டால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இந்நிலையில் அதிகப்படியான எச்சில் உற்பத்தி செய்யப்படுவதோடு, வாயின் வழியாக சுவாசிக்க நேரிட்டு, தூக்கத்தில் ஜொள்ளு வழிகிறது. இப்போது தூக்கத்தில் ஜொள்ளு வழிவதைத் தடுப்பதற்கான சில இயற்கை வழிகளைக் காண்போம்.

நெல்லிக்காய் பொடி :

உங்களுக்கு தூக்கத்தில் ஜொள்ளு விடும் பழக்கம் இருந்தால், நெல்லிக்காய் பொடி இதிலிருந்து விடுபட உதவும். அதற்கு இரவு உணவு உண்ட பின்னர், வெதுவெதுப்பான நீரில் சிறிது நெல்லிக்காய் பொடியை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ஒரு நல்ல பலனைக் காண்பீர்கள்.

படிகார கல் :

படிகாரம் கூட தூக்கத்தில் ஜொள்ளு விடும் பழக்கத்தை தடுக்க உதவும். சரி, படிகார கல்லை எப்படி பயன்படுத்துவது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு முதலில் படிகார கல் சிறிதை எடுத்து பொடித்து நீரில் கலந்து, அந்நீரால் ஒரு நாளைக்கு 1-2 முறை வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

பட்டை :

பட்டை கூட தூக்கத்தில் ஜொள்ளு விடும் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும். அதற்கு பட்டையைக் கொண்டு டீ தயாரித்து, அத்துடன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சில நாட்களில் இப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

துளசி :

துளசி இலைகளும் தூக்கத்தில் ஜொள்ளு விடும் பழக்கத்தைத் தடுக்க உதவும். அதற்கு தினமும் 2-3 முறை சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இதன் மூலம் விரைவில் தூக்கத்தில் ஜொள்ளு விடும் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.