முகம் தங்கம் போல மின்ன வேண்டுமா?

முகம் தங்கம் போல மின்ன வேண்டுமா? 
இனி இதை ட்ரை பண்ணுங்க..!
 
முகத்தை பராமரிப்பதில் பெண்கள் பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர். முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், தங்கம் போல மினுமினுப்பாக இருக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அதை அடைவதற்கு பலரும் கிரீம்கள் தடவுவது, பேஷியல் செய்வது என்று பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். இயற்கையான பொலிவை பெறுவதற்கு எளிமையாக வீட்டிலேயே தங்கம் போல முகத்தை ஜொலிக்க வைக்க முடியும். அதற்கு என்ன செய்யலாம் என்று இன்று தெரிந்து கொள்ளலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

முள்ளங்கி (பாதியளவு) :
 
முள்ளங்கியிலுள்ள நீர் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரித்து தோல் சுருக்கங்களைத் தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பராமரிக்க முதன்மையாக பயன்படுகின்றன.

உருளைக்கிழங்கு (பாதியளவு) :

முகம் மற்றும் சருமத்திற்கு பல வகைகளில் பேருதவியாக உருளைக்கிழங்கு இருக்கிறது. நமது சருமம் கடினமாக மாறுவதை தடுத்து ஈரப்பத தன்மையுடனும், மிருதுவாகவும் இருக்குமாறு செய்கிறது.

தயிர் (1 டேபிள் ஸ்பூன்) :

தயிர் ஆரோக்கியமான உணவுப்பொருளாக மட்டுமில்லாமல் சரும பராமரிப்பிற்கும் அதிகளவு பயனுள்ளதாக இருக்கிறது. இது குளிர்ச்சி தன்மையுடையது. தயிரை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு முக பிரச்சினைகளை சரி செய்யலாம்.

சிவப்பு சந்தன பொடி (1 டேபிள் ஸ்பூன்) :

இது இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக  இருப்பவர்கள் சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். பருக்களின் தழும்பை போக்கவல்லது.

செய்முறை :

முதலில் பாதியளவுள்ள முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கை நன்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொண்டு அதனை மிக்சியில் மைய அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இந்த கலவையில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சிவப்பு சந்தன பொடியை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் வரை காயவிடுங்கள். பின்னர் முகத்தை தூய்மையான நீரால் கழுவுங்கள். இது போன்று செய்வதன் மூலம் முகம் தங்கம் போல் ஜொலிக்க செய்யும்.