வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
 
பன்னீர் மரங்கள், உயரமாக வளரும் இந்த மரங்கள், பரந்து விரிந்த கிளைகளுடன், கரும் பச்சை நிறத்தில் சற்றே அகன்ற இலைகளுடன், உருவத்தில் நாதஸ்வரத்தை ஒத்த, நீண்ட நறுமணமுடைய வெள்ளை நிறத்தில் எழிலுடன் விளங்கும் மலர்களுடன், காட்சியளிக்கும். தமிழகத்தில் காண்பதற்கு மிக அரிதாகி விட்ட பன்னீர் மரங்கள், இலை, பூக்கள், மற்றும் மரம், வேர் இவற்றின் மூலம், மனிதர்களுக்கு பல பலன்கள் தருபவை. பன்னீர் மரத்தை அதன் தோற்றத்தைக் கொண்டு அடையாளம் காண முடியாத மனிதர்கள் கூட, பன்னீர் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில், அவ்விடங்களில் பரவும், அவற்றின் வசீகர நறுமணத்தின் மூலம், வெகு எளிதாக, அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வெள்ளை நிறத்தில், அளவில் சற்றே நீண்ட மலர்கள், தரும் வாசனை, மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் அளிக்கும். பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர் மறை எண்ணங்கள் விலகி, மனதில் தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும். பன்னீர் மலர்கள் உடலுக்கும் மனதுக்கும் சக்தியை அளிக்கும்.

பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள். மேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், பன்னீர் மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம். தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, பன்னீர் மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். பன்னீர் மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் பன்னீர் மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.

பித்தம் தணியும் : 
பன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும். இரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.

சுவாச பாதிப்புகள் நீங்கும் : 
காய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர். பன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதியில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.

வயிற்றுப் போக்கு குணமாகும் : 
பன்னீர் மரப் பட்டைகளை நீரிலிட்டு, மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் சுண்டியதும் பருகி வர, பேதி எனும் வயிற்றுக் கழிச்சல் பாதிப்பு குணமாகும். பன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது. கும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.

கட்டி வீக்கம் : 
பன்னீர் இலை காண்பதற்கு, முருகனின் வேல் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும், பன்னீர் இலை மருத்துவ வகையிலும், உடலுக்கு நன்மைகள் அளிக்கக்கூடியது. உடல் வியாதிகள் தீர, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்றை உட்கொண்டு, பன்னீர் இலைகளையும் உட்கொள்வர். ஆன்மீகத்தில் சிறந்த இலையாக விளங்கும் பன்னீர் இலைகள், சித்த மருத்துவத்தில், உடலில் உள்ள வீக்கங்களை போக்கக் கூடியவையாக, அறியப்படுகின்றன. வீக்கங்களின் மேல் பன்னீர் இலைகளை வைத்து கட்டி வர, வீக்கங்கள் அகலும்.

பன்னீர் திரவியம் எதிலிருந்து கிடைக்கிறது? கடைகளில் கிடைக்கும் பன்னீர் எனும் வாசனை திரவியம், நறுமணத்திற்காக சந்தனத்தோடு கலந்து பயன்படுத்தப்படுகிறது. கோவில்களில், சமய சடங்குகளில், அபிசேகங்களுக்கு பயன்படுகிறது. அந்த பன்னீர், இந்த பன்னீர் மரத்திலிருந்தோ அல்லது பன்னீர் பூக்களிலிருந்தோ எடுக்கப்படுவதில்லை, மாறாக, அவை ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்படுபவை ஆகும்.