செரிமான பிரச்சினைகளை சீராக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

செரிமான பிரச்சினைகளை சீராக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

செரிமான பிரச்சனைகளுக்கு சுக்கு, மிளகு, ஏலம், சீரகம் போன்றவை மருந்தாகிறது.  நேரம் தவறி சாப்பிடுவது, எண்ணெய் பலகாரங்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடுவதாலும், முறையற்ற உணவுப்பழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் புளிஏப்பம், வயிறு பொருமல், செரியாமை போன்றவை ஏற்படுகிறது.

சுக்கு, மிளகு போன்றவற்றை கொண்டு புளிஏப்பத்துக்கான மருந்து தயாரிக்கலாம். செய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் ஆகியவற்றை பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். உணவு சாப்பிட்ட அரை மணிநேரத்துக்கு பின்னர் குடித்துவர புளிஏப்பம் இல்லாமல் போகும். செரிமானம் சீர்படும். வயிறு பொருமல், உப்புசம் ஆகியவை சரியாகும்.

நெல்லிக்காய், இஞ்சியை பயன்படுத்தி புளிஏப்பம், வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். 

செய்முறை: 
நெல்லிக்காயை பசையாக அரைத்து, அதிலிருந்து சாறு எடுக்கவும். இதனுடன் இஞ்சி சாறு, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து பாகுபதத்தில் எடுக்கவும். இதை ஆறவைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பாகு ஒரு பங்குக்கும், 3 பங்கு நீரும் சேர்த்து குடித்துவர செரியாமை, புளிஏப்பம், வயிற்று உப்புசம் ஆகியவை குணமாகும். பசி தூண்டப்படும்.

புளிஏப்பம், உப்புசம் போன்றவற்றால் சாப்பிட்ட உணவு வீணாகி, போதிய சத்து கிடைக்காமல் உடல் சோர்வு அடையும். உடல் நலமுடன் இருக்க வயிறு முறையாக இயங்குவது அவசியம். 

சோற்றுகற்றாழையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், சோற்றுக்கற்றாழை, வெள்ளை வெங்காயம், சீரகம்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன் வெள்ளை வெங்காயத்தின் பசை, சோற்றுக்கற்றாழையின் தோலை சீவி எடுக்கப்பட்ட பசை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடித்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். 

உணவுப்பாதையில் ஏற்படும் உபாதைகளான அல்சர், வாயு தொல்லை போன்றவை சரியாகும். செரிமானம் தூண்டப்படும். வயிற்று உப்புசம், புளிஏப்பம் சரியாகும். இதனால் உடல் நலம் பெறும். நாம் தேவையற்ற உணவை சாப்பிட கூடாது. நன்றாக பசித்த பின்னர் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் செரிமான பிரச்சினை ஏற்படும். எனவே, சீரான உணவு எடுத்துகொள்வது மிகவும் அவசியம்.