கொடுக்காய்ப்புளி – மன அழுத்தம் போக்கும் மருந்து :

கொடுக்காய்ப்புளி – மன அழுத்தம் போக்கும் மருந்து :

கொடுக்காய்ப்புளி என்றவுடன் பள்ளிப்பருவத்தில் விடுமுறை நாட்களில் கொடிக்காய் மரத்தில் ஏறி கொடிக்காயைப் பறித்து உண்டதே என் நினைவிற்கு வருகிறது.

இது கொடிக்காய், கொடுக்காய்ப்புளி, சுரட்டிக்காய், கோணக்காய் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

அன்றைக்கு எளிதாக விலையில்லாமல் கிடைத்த இக்காய் இன்றைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதற்கு காரணம் இதனுடைய உடல்நல மேம்பாட்டு நன்மைகள் மற்றும் இக்காயைச் சந்தைப்படுத்துதல் ஆகியவை ஆகும்.

கொடி போன்று சுருண்டு காணப்படுவதால் கொடிக்காய் என்றும், புளியைப் போன்று விதையைச் சுற்றிலும் சதைப்பகுதியைக் கொண்டிருப்பதால் கொடுக்காய்ப்புளி என்றும் அழைக்கப்படுகிறது.

சுரட்டியைக் கொண்டு பறிக்கப்படுவதால் இது சுரட்டிக்காய் என்றும், கோணலாக வளைந்து நெளிந்து காணப்படுவதால் கோணக்காய் என்றும் வழங்கப்படுகிறது.

கொடுக்காய்ப்புளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :

கொடுக்காய்ப்புளியில் விட்டமின் ஏ,சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி6 (நியாசின்) ஆகியவை உள்ளன.

மேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

இக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன.

கொடுக்காய்ப்புளி – மருத்துவப் பண்புகள் :

கொடுக்காய்ப்புளியின் சதைப்பகுதி, இலை, பட்டை, பூ ஆகியவை மருந்துப் பொருளாக உயோகிக்கப்படுகின்றன.

மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற
இக்காயில் உள்ள விட்டமின் பி1(தயாமின்)-னானது மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்து அவை நன்கு செயல்பட உதவுகின்றன.

மேலும் விட்டமின் பி1-னானது மனஅழுத்தம் ஏற்படாமலும் நம்மைப் பாதுகாக்கிறது. எனவே இதனை உண்டு மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

சரும, கேசப் பராமரிப்பிற்கு :

இதில் உள்ள விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்) சருமம், கேசம், நகங்கள் நன்கு வளரவும், அவற்றை ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

மேலும் இதில் உள்ள விட்டமின் சி-யானது சருமத்தை விரைவில் முதுமை அடையாமல் பாதுகாக்கிறது. எனவே இக்காயினை உண்டு சருமம், கேசம், நகங்களின் அழகினைப் பாதுகாக்கலாம்.

நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற :

இதில் உள்ள விட்டமின் சி-யானது ஆன்டிஆக்ஸிஜென்டாகச் செயல்படுவதுடன் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலையும் வழங்குகிறது. எனவே இப்பழத்தினை உண்டு நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு :

இப்பழத்தில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளை சேதமுறாமல் பாதுகாத்து அவற்றை வலுவாக்குகின்றன. மேலும் இம்மரத்தின் பூவானது பல்வலி, ஈறுகளின் பிரச்சினைக்கும் இது தீர்வளிக்கிறது.

கல்லீரல் பாதுகாப்பிற்கு :

இப்பழத்தினை உண்ணும்போது இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கல்லீரல் பாதிப்படையாமல் பாதுகாப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு கல்லீரல் பாதுகாப்பைப் பெறலாம்.

செரிமானத்திற்கு :

இப்பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சவும் இவை உதவுகின்றன.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், அல்சர் போன்ற செரிமானம் சம்பந்தமான நோய்களையும் நார்ச்சத்து ஏற்படாமல் தடுக்கிறது.

கொடுக்காய்ப்புளியினை மூன்று நாட்கள் அறையின் வெப்பநிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தி சட்னி, சூப்புகள், சாலட் உள்ளிட்டவை தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த மன அழுத்தம் போக்கும் கொடுக்காய்ப்புளியினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.