நல்லாரையும் மிஞ்சும் வல்லாரை.

நல்லாரையும் மிஞ்சும் வல்லாரை.


பல்வேறுபட்ட மூலிகைகள் மருந்துகளுக்கு பயன்பட்டாலும் ஒரு மூலிகையே பல்வேறுபட்ட நோய்களைக் குணமாக்கும் என்பதும் அனைவரும் தெரிந்ததே. 

ஆனால் இந்த வல்லாரை மட்டும் நோயை தீர்க்கவும் வந்த நோயை நீக்கிய பின்பு கொடுத்தால் மீண்டும் அந்நோய் வராமல் தடுக்கும். நோயில்லா உடலில் இந்த வல்லாரையை உண்ணும் போது ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான பசி, ஆரோக்கியமான செரிமானம், ஆரோக்கியமான மனவளர்ச்சி, ஆரோக்கியமான மூளை வளர்ச்சி, ஞாபக சக்தி இவை அனைத்தும் சித்தியாகும். இதை காயசித்தி என்கிறோம். இதோடு இல்லாமல் உடலிலுள்ள மஜ்ஜையை (எலும்புசோறு) அதிகரிக்கச் செய்து உடலில் வன்மையை உண்டாக்குவதோடு கல்ப நிலையை உண்டாக்கும். கல்ப நிலை என்றால் ஒரு மனிதன் உடலில் வயதுக்கு ஏற்றாற்போல் உடல் தளர்ச்சி, உயிர் தளர்ச்சி, ஆண்மை தளர்ச்சி, நரம்பு தளர்ச்சி, கண் மங்கல், காது மந்தம், கிரந்த மந்தம், பல் விழுதல் அமைகிறது. 

இந்த வல்லாரையானது ஒரு மனிதன் தான் 16 வயதில் பால் பருவம் மாறும்போது இந்த வல்லாரையை தினம் காலை வெறும் வயிற்றில் நான்கு இலை வல்லாரையும் ஒரு மிளகையும் வைத்து தொடர்ந்து 48 நாள் உண்டால் அவன் பாலபருவத்தில் இருக்கும் நிலை அப்படியே 26 வயது வரைக்கும் இருக்கும். இந்த 26 வயது வரை எந்த நோயும் வராது. இதுவே நோய் தடுப்பு முறையாகும். 

பால பருவம் என்றால் உடலளவில் உள்ள மாற்றமே தவிர விந்துவில் அல்ல. விந்துவில் உரிய காலத்தில் உரிய உற்பத்தி இருக்கும். மீண்டும் 26 வயது முடியும் போது தினம் காலையில் நான்கு வல்லாரை இலையும் இரண்டு மிளகையும் சேர்த்து 48 நாள் தொடர்ந்து வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். அப்படி உண்டால் 33 வயதில் வளர்ச்சி திசுக்கள், வளர்ச்சி அடைவது வளர்ச்சியாகவே இருக்கும். அதுமட்டுமல்ல இரத்த விருத்தி வீரிய விருத்தி இதிலே இருக்கும். 

எனவே 33 வயதில் மீண்டும் ஒரு முறை 4 இலையும் இரண்டு மிளகும் சேர்த்து 48 நாள் உண்டு வந்தால் 50 வயது வரை கண்மங்கல் ஏற்படாது. கண் புகைச்சல் ஏற்படாது. காது மந்தம் இருக்காது. முடி நரைக்காது, முகம் சுருங்காது, உடல் சுருங்காது. உடலில் தளர்ச்சி ஏற்படாது. மீண்டும் 50 வயதில் இதேபோல் 48 நாள் சாப்பிட்டால் 70 வயது வரை நோய் வராமல் தடுக்கும். உயிருடன் இருக்கும் வரையும் நோய் வராமல் தடுக்கக்கூடியது. இதுவே யோக முறை. மருத்துவத்திலும் இதுவே காயகல்ப மருத்துவ முறை என்று சொல்வதால் யோக கல்பம் என்றும் யோக சித்தி மூலிகை என்றும் காயசித்தி மூலிகை என்றும் இது அழைக்கப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் சென்ட்டல்லா அசியாட்டிகா.

இது தவிர வர்ம மருத்துவம் என்று கூறும்போது வல்லாரை தைலமும் வல்லாரை சூரணமும் வல்லாரை லேகியம் வல்லாரை மாத்திரையும் இல்லாமல் இருக்காது.

வல்லாரை எனும் சொல்லை நம்மில் பலர் அறிந்திருக்கிறோம். இது ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. நரம்புகளை வலுப்படுத்துகிறது. தற்பொழுது இவை மாத்திரை வடிவிலும் லேகிய வடிவிலும் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது.

இதுகொத்து வல்லாரை, கொடி வல்லாரை என இரண்டு வகைப்படும். கொத்து வல்லாரையானது பூமிக்கு அடியில் உள்ள வேர்களில் கிழங்குகளை உற்பத்தி செய்கிறது. இதன் மேற்பகுதியில் கொத்து கொத்தாக இலைகள் காணப்படும். இந்தக் கிழங்கை வயல்களில் உள்ள நீர்க்கால்வாய் ஓரங்களில் பதித்து விட்டால் அந்தக் கால்வாய் முழுவதும் வேர்கள் பரவி அவற்றில் கிழங்குகள் உற்பத்தியாகும்.

கொடி வல்லாரை என்பது கணுக்கால் பயிர் என்றும் அழைக்கப்படும். இந்த வகை வல்லாரையில் கிழங்குகள் காணப்படாது. செடியில் உள்ள ஒவ்வொரு கணுக்கால் பகுதியில் இருந்தும் காம்புகள் உற்பத்தியாகி கொடி போல் வளர்ந்து செல்லும். இச்செடியினை நீர் செல்லும் கால்வாய் ஓரங்களில் பதித்து விட்டால் அந்த ஓடை முழுவதும் கொடியாக வளர்ந்து விடும்.