குழந்தை பெற்ற பிறகு தாய்மார்களுக்கான பால் சுரக்கும் அதிசய மருந்துக்குழம்பு !!!
குழந்தை பெற்ற பிறகு தாய்மார்களுக்கான பால் சுரக்கும் அதிசய மருந்துக்குழம்பு !!!
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்துக் குழம்பு கொடுப்பார்கள். தாய்க்கு கர்ப்பப்பை குணமடையவும், குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் வராமலும் இருக்க, இந்தக் குழம்பு உதவும்.
வாருங்கள் செய்முறையை பார்க்கலாம்.
மருந்துக்குழம்பு செய்ய தேவையானவை:
1.பூண்டு - 10 பல்
2.சீலா கருவாடு (அ) சீலா மீன் -
5 சின்ன துண்டுகள்
3.நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
4.முட்டை - ஒன்று (நாட்டுக்கோழி முட்டை எனில் மிகவும் நல்லது)
5.தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
6.உப்பு - தேவையான அளவு
மருந்து குழம்புப் பொடி செய்ய:
7.சுக்கு - 100 கிராம்
மிளகு - 25 கிராம்
8.திப்பிலி - 10 கிராம்
9.ஓமம் - 50 கிராம்
10.கருஞ்சீரகம் - 25 கிராம்
11.பெருங்காயம் - ஒரு புளியங்கொட்டை அளவு
12.கடுகு - 50 கிராம்
13.சீரகம் - 25 கிராம்
மருந்து குழம்புப் பொடி செய்யும் முறை:
சுக்கை அம்மியில் நன்கு தட்டி, பின்னர் மிக்ஸில் பொடிக்கவும் (சுக்கு மிகவும் கடினமாக இருக்கும், நேரடியாக அரைத்தால் மிக்ஸி பிளேடு உடைந்துவிடும்).
மீதமுள்ள பொருட்களையும் லேசாக அம்மியில் தட்டி பின்னர் மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்து, வேண்டுமானால் சலித்துக் கொள்ளவும்.
இந்த மருந்து குழம்பு பொடியை சுத்தமான காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு, அவ்வப்போது எடுத்து குழம்பு வைத்துக்கொள்ளலாம்.
குழம்பு வைக்கும் முறை:
கருவாட்டை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து நன்கு கழுவவும். அதில் இருக்கும் அதிக உப்பை இது எடுத்துவிடும். தேங்காயுடன் இரண்டு பூண்டு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், 2 டேபிள்ஸ்பூன் மருந்து குழம்புப் பொடி சேர்த்துக் கரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மீதமிருக்கும் பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கரைசலை சேர்க்கவும். குழம்பு ஓரளவு கொதித்தவுடன் கழுவி வைத்துள்ள கருவாட்டைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். (கருவாட்டில் ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால், ருசித்துப் பார்த்து தேவையெனில் உப்பு சேர்த்துக்கொள்ளவும். )
குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, முட்டையை குழம்பில் உடைத்து ஊற்றி மூடிவைத்து மிதமான தீயில் வேகவிடவும். முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சுடச்சுட சாதத்துடன் சாப்பிடவும். தொட்டுக்கொள்ள குழம்பில் இருக்கும் கருவாடும், முட்டையும் போதுமானது, சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.
குறிப்பு:
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்கள் மீன் மற்றும் கருவாடு உணவுகளை முதல் 20 நாட்களுக்குத் தவிர்க்கச் சொல்வார்கள். மருந்து குழம்பு பொடி, நாட்டுமருந்துக் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கும். வாங்கி, எளிய முறையில் குழம்பு செய்யலாம். தாய்க்கு கர்ப்பப்பை குணமடையவும், குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் வராமலும் இருக்க, இந்தக் குழம்பு உதவும்.
வாரம் இரு முறை வைத்துச் சாப்பிட்டால் பால் சுரப்பு சீராகும், தேவையில்லாத கழிவுகள் உடம்பிலிருந்து வெளியேறும். முதல் மாதம் அவசியம் சாப்பிட வேண்டிய குழம்பு இது.
சைவ உணவுக்காரர்களில், இதே குழம்பில் கருவாட்டுக்குப் பதில் மணத்தக்காளி வற்றல் சேர்த்துச் செய்யலாம். பூண்டு வதக்கும்போதே மணத்தக்காளியையும் சேர்த்து வதக்கிவிடவும்.
.