ஆப்பாயில் முட்டை சாப்பிடலாமா ?

ஆப்பாயில் முட்டை சாப்பிடலாமா ?

முட்டை என்பது நாம் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு வகைகளில் ஒன்று. இதில் பலவிதமான சத்துக்களான வைட்டமின் டி, காப்பர், செலினியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மினரல் சத்துகள், இரும்பு சத்து, புரதச்சத்து, அமினோ ஆசிட், ஒமேகா3 கொழுப்பு அமிலம் போன்ற சத்துகள் உள்ளன.

இவ்வளவு சத்துக்கள் முட்டையில் இருப்பதால் தினமும் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

அப்படி நாம் கொடுக்கும் போது குழந்தைகள் ஒரே சுவையை விரும்புவதில்லை என்று சொல்லி விதவிதமாக சமைத்து கொடுக்கிறோம்.

இப்படி நாம் சமைக்கும் முறையில் ஒன்று தான் ஆப்பாயில். இதனை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இப்படி ஆப்பாயில் முறையில் முட்டை சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும் தெரியுமா? இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முட்டையை வேக வைக்காமல், பச்சையாக பயன்படுத்தினால் உடலுக்கு அதிகச் சத்து கிடைப்பதாக நம்பி பலரும் பச்சை முட்டையைக் பயன்படுத்துகின்றனர்.

இது ஆபத்தானது. ஏனென்றால் பச்சை முட்டையின் வெள்ளைக்கருவில் அவிடின் எனும் புரதச்சத்து உள்ளது.

இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் சத்ததுடன் சேரும் போது பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடைப்படுகிறது.

ஆனால் முட்டையை வேக வைக்கும் போது இந்த அவிடின் சத்து அழிந்துவிடும். இதனால் முட்டையில் உள்ள பயாட்டின் முழுமையாக நமக்கு கிடைத்துவிடும்.

அவிடின் சத்தைவிட பயாட்டின் சத்து தான் நமக்கு கிடைக்க வேண்டியது. இந்த சத்து தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.  ஆகவே, வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவதே சிறந்தது.

மேலும் பச்சை முட்டை, பால் , இறைச்சி போன்ற சமைக்க படாத உணவுகளில் சால்மோனல்லா போன்ற பாக்டீரியா கிருமிகள் இருக்கும்.

இதனால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சில நேரங்களில் டைபாய்டு போன்ற தீவிரமான காய்ச்சலையும் ஏற்படுத்தும். இதனால் நன்கு வேக வைத்து சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது.
 
அதே போல் ஆப்பாயில் போட்டு முட்டையை சாப்பிடும் போது சால்மோனல்லா போன்ற பாக்டீரியா கிருமிகள் அழிந்து விடாது. இதனால் உடல் நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும். ஆகவே நன்கு வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது.