தொப்புள் குடலிறக்கம் ...
தொப்புள் குடலிறக்கம் ...
குழந்தைகள் ஊதி விளையாடும் பலூனில் காற்றை ஊதும்போது, அது நல்ல பலூனாக இருந்தால், ஒரே சீராக விரிவடையும். ஆனால், சிலவற்றில் சில இடங்களில் தனியாகப் புடைத்துப் போவதையும் பார்த்திருப்பீர்கள்.
பலூனில் வலுக் குறைந்த பகுதிகளில் காற்றின் அழுத்தம் அதிகமாகும்போது அம்மாதிரியான புடைப்புகள் உண்டாகின்றன. இதுபோலவே நம் உடலிலும் புடைப்புகள் உண்டாகின்றன. முக்கியமாக, வயிற்றில் பலவீனமாக உள்ள தசைத் துளைகள் வழியாகப் புடைப்புகள் ஏற்படுகின்றன. இதைத்தான் ‘குடலிறக்கம்’ (Hernia) என்கிறோம். பொதுவாக இது தொடையும் அடிவயிறும் இணையும் இடம், மேல் தொடை, தொப்புள் ஆகிய இடங்களில் ஏற்படுகிறது. இது தவிர, வயிற்றில் அறுவைத் தழும்பு உள்ள இடத்திலும் குடலிறக்கம் ஏற்படுகிறது.
தொப்புள் குடலிறக்கம் என்றால் என்ன?
தொப்புளிலிருந்தும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலிருந்தும் குடல் வெளியில் பிதுங்கித் தெரிவதைத் ‘தொப்புள் குடலிறக்கம்’ (Umbilical hernia) என்கிறோம். இது ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் பிரச்சினை. என்றாலும், பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. இது குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வரலாம்; நாற்பது வயதிலும் வரலாம்; முதுமையிலும் வரலாம்.
இது குழந்தைக்கு வர என்ன காரணம்? இதனால் பயமில்லையா?
அம்மாவின் கருப்பையில் குழந்தை வளரும்போது, முன் வயிற்றுச்சுவர் முழுவதுமாக வளர்ச்சி அடையும்வரை அதன் வயிற்றுக்குள் இருக்க வேண்டிய பல உறுப்புகள் வயிற்றுக்கு வெளியில் உள்ள ஒரு பையில்தான் இருக்கும். இந்தப் பையும் குழந்தையின் வயிறும் குழந்தையின் தொப்புள் துளை வழியாக இணைந்திருக்கும். குழந்தை வளர வளர பையில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாகக் குழந்தையின் வயிற்றுக்குள் சென்றுவிடும். இப்படிக் குழந்தை பிறப்பதற்கு முன்பே எல்லா உறுப்புகளும் உள்ளே சென்றுவிடும். அம்மாவின் கருப்பையில் நஞ்சுவோடு இணைந்த தொப்புள்கொடி மட்டும் குழந்தையின் வயிற்றுக்கு வெளியில் இருக்கும். குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடி அகற்றப்படும். தொப்புள் துளை மூடிவிடும்.
சில குழந்தைகளுக்குக் குடலின் சிறு பகுதியோ குடல் மொத்தமாகவோ உள்ளே போகாமல் இருந்துவிடும். பிறவியிலேயே குழந்தையின் முன்வயிற்றுச் சுவர் பலவீனமாக இருந்தாலோ வயிற்றுச் சுவரே இல்லாமல் இருந்தாலோ இம்மாதிரி நடக்கும். மிகக் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் குறைப்பிரசவக் குழந்தைகளுக்கும் இது ஏற்படுவதுண்டு. தொப்புளில் அடிக்கடி தொற்று ஏற்பட்டால் அங்கே குடலிறக்கம் வருவதுண்டு. இது பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கே அதிகம் வரும்.
குழந்தையின் தொப்புளுக்குள் உள்ள துளை இரண்டு செ.மீ.க்குள் இருந்தால், குழந்தை பிறந்த மூன்று வருடங்களுக்குள் தொப்புளை ஒட்டியவாறு வயிற்றிலிருந்து வெளியில் வந்திருக்கும் பகுதிகள் மறுபடியும் வயிற்றுக்குள் சென்றுவிடும். அப்போது தொப்புள் பிதுக்கமும் மறைந்துவிடும்.
100-ல் 90 குழந்தைகளுக்கு இப்படித் தானாகவே சரியாகிவிடும். மீதிப் பேருக்குத்தான் சிகிச்சை தேவைப்படும்.
தொப்புள் பிதுங்கிய நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குத் ‘தொப்புளில் காற்று ஏறிவிட்டது’ என்று வீட்டில் சொல்வார்கள். உண்மையில் காற்று ஏறிக்கொள்வதில்லை. குடலின் ஒரு பகுதியே அதில் ஏறிக்கொள்கிறது. குழந்தை அழும்போதெல்லாமோ இருமும் போதெல்லாமோ வயிற்றுக்குள்ளிருந்து குடல் தொப்புளுக்கு வந்துபோவதால், தொப்புள் புடைப்பு பெரிதாகி பிறகு மறையும். இப்படிப் பெரிதானாலும் பல குழந்தைகளுக்கு அது தொந்தரவு எதுவும் செய்யாது. அவர்களுக்கு சிகிச்சையும் தேவையில்லை. பயப்படவும் தேவையில்லை. பெற்றோர்தான் பதற்றத்துடன் காணப்படுவார்கள். அவர்களைச் சமாதானப்படுத்துவதுதான் மருத்துவர்களின் வேலையாக இருக்கும். நான்கு வயதுக்குப் பிறகும் தொப்புள் வீக்கம் குறையவில்லை அல்லது இருமும்போது தொப்புளில் வலி எடுக்கிறது என்றால் அறுவைசிகிச்சை செய்து சரிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நடுத்தர வயதில் இது ஏன் வருகிறது?
நடுத்தர வயதிலும் தொப்புள் குடலிறக்கம் வருவதுண்டு. இது பெரும்பாலும் பெண்களுக்கே அதிகம். வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிப்பது இதற்கு அடிப்படைக் காரணம். உடற்பருமன் உள்ளவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள், பலமுறை கர்ப்பமானவர்கள், ஒரே நேரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட கருக்களைச் சுமப்பவர்கள், நுரையீரல் பாதிப்பால் தொடர்ந்து இருமிக் கொண்டிருப்பவர்கள், அதிக கனமான பொருட்களைத் தூக்கும் சுமை கூலிகள், கல்லீரல் பாதிப்பால் வயிற்றில் நீர் கோத்திருப்பவர்கள் ஆகியோருக்கு நடுத்தர வயதில் தொப்புள் குடலிறக்கம் வருவது இப்படித்தான்.
வயிற்றில் அழுத்தம் அதிகமாகும்போது வயிற்றின் முன் தசைகள் தளர்ந்துவிடும். நாளடைவில் அவை விரிவடைய ஆரம்பிக்கும். அப்போது அந்த இடத்தில் ஓர் இடைவெளி உருவாகும். அந்த இடைவெளி வழியாக வயிற்றிலிருந்து குடலோ, கொழுப்போ வெளியில் வந்து தொப்புளின் மேல் பக்கத்தில் அல்லது கீழ்ப்பக்கத்தில் பிதுங்கித் தெரியும். இருமும்போது இந்தப் பிதுக்கம் பெரிதாகும். இன்னும் சிலருக்கு வயிற்றில் வெவ்வேறு காரணங்களுக்காக அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். அந்த அறுவைத் தழும்பில் தசைகள் வலுவிழந்து போனாலும் அந்த இடத்தில் குடலிறக்கம் ஏற்படுவதுண்டு (Incisional hernia).
இவர்கள் இருமும்போது தொப்புளில் பிதுக்கம் பெரிதாகும். விரலால் அதை உள்ளே தள்ளிவிட்டால் பிதுக்கம் மறைந்துவிடும். ஆரம்பத்தில் அதில் வலி இருக்காது. போகப்போக வலிக்கும். சில நேரத்தில் தொப்புள் துளைக்குள் குடல் சிக்கிக்கொள்ளும். அதைச் சுற்றி ஒட்டிணைவுத் தசைகள் (Adhesions) ஒட்டிக்கொள்ளும். அப்போது அதை உள்ளே தள்ளினாலும் போகாது. அங்கு வலி அதிகமாகும். இப்படிக் குடல் வெளியில் மாட்டிக்கொள்வதாலும் முறுக்கிக்கொள்வதாலும் அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து அல்லது முழுவதுமாகத் தடைப்பட்டு குடல் அழுகிவிடும். அப்போது வாந்தியும் வரும். குடலிறக்கத்தில் மிகுந்த வலியும் அதன் தொடர்ச்சியாக வாந்தியும் வந்தால் அவை ஆபத்தான அறிகுறிகள். உடனே கவனிக்க வேண்டும்.
லேப்பராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்லதா?
தொப்புள் குடலிறக்கத்துக்கு இரண்டு வகை அறுவை சிகிச்சைகள் உள்ளன. துளை சிறிய அளவில் இருந்தால் லேப்பராஸ்கோப்பி எனும் நுண்துளை அறுவை சிகிச்சையும், துளை பெரிய அளவில் இருந்தால் அல்லது குடல் சிக்கி அழுகியிருந்தால் திறப்பு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். குடலிறக்கத்தைத் தொடக்கத்திலேயே கவனித்துவிட்டால், சிகிச்சை முழு வெற்றி பெறும். இல்லாவிட்டால், மறுபடியும் அந்த இடத்தில் குடலிறக்கம் ஏற்பட சாத்தியம் உண்டு. திறப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் குறைந்தது ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும். நுண்துளை அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு ஒரு வார ஓய்வு போதும். உடற்பருமனைத் தவிர்ப்பதும் கனமான பொருட்களைத் தூக்காமல் இருப்பதும் அடிக்கடி இருமல் வராமல் பார்த்துக்கொள்வதும் குடலிறக்கத்தைத் தவிர்க்க உதவும் வழிகள்.