பால் சுரப்பை அதிகப்படுத்தும் இயற்கை வைத்தியங்கள்...

 பால் சுரப்பை அதிகப்படுத்தும் இயற்கை வைத்தியங்கள்...

 

வெந்தயம்

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 2 கப் தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு ஒரு கப் அளவு சுண்டவிட்டு குடிக்கவும். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை முளை கட்டியோ அல்லது பொடியாக அரைத்து தண்ணீரில் கலந்தோ சாப்பிடலாம். வெந்தயத்துக்கு பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை உண்டு.

 

கற்பூரவல்லி இலை...

பாலூட்டும் அம்மாக்கள், தினமும் ஒன்று அல்லது இரண்டு கற்பூரவல்லி இலைகளைச் சாப்பிட்டு வந்தால், பிறந்த குழந்தைக்குச் சளிப் பிடிக்காது. எதிர்ப்புசக்தி அதிகமாகி நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படும். பாலும் நன்கு சுரக்கும். 

 

முருங்கைக் காய்

ஒரு பிஞ்சு முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கி, சாறு பிழிந்து கால் கப் சாப்பிடலாம். இதனால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் அதிகமாகி, பால் சுரப்பிகள் தூண்டப்படும். சாற்றை அப்படியே குடிக்கப் பிடிக்காதவர்கள், இந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம் அல்லது, சமைத்தும் சாப்பிடலாம். 

 

சோம்பு

ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடியுங்கள். இது, ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகளை அதிகப்படுத்தி, நன்கு பாலூறச் செய்யும். 

 

வெள்ளைப்பூண்டு

ஒரு நாளைக்குக் குழம்பில் போட்டோ அல்லது, நல்லெண்ணெய்யில் வதக்கியோ 5 பூண்டு பல் தவறாமல் சாப்பிடவும். பால் சுரப்பில் கண்கண்ட மருந்து இது.  

 

கம்பு, கேப்பை

கம்பு, கேழ்வரகு இரண்டையும் முளை கட்டிச் சாப்பிடவும். இவற்றில் இருக்கும் அதிகப்படியான புரதம், பால் சுரப்பைத் தூண்டும்.

 

பசலைக்கீரை

வீட்டிலேயே தயாரித்த பாதாம் பால், பசலை, முருங்கை மற்றும் வெந்தயக்கீரை ஆகியவை பால் சுரப்பை ஊக்குவிக்கும் உணவுகள். நிறையத் தண்ணீர் குடிப்பதும் பால் சுரப்புக்கு அவசியம்.

 

அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை மைய அரைத்து அல்லது பூக்களை நேரடியாக பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி பருக தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனை காலை மாலை என இரண்டு வேளை அருந்த வேண்டும். மேலும் பனங்கற்கண்டு சேர்த்து அருந்துவதால் உடலுக்கு நல்ல பலமும் தெம்பும் கிடைக்கும்.

 

ஏதாவது ஒரு எளிய மருத்துவ முறையை பயன்படுத்தி பயனடையவும்.