இட்லியின் வரலாறு....

 இட்லியின் வரலாறு....


இன்றைய மாடர்ன் உலகில் பல சம்பிரதாயங்கள் மறைந்து கொண்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆடை அணிகளிலிருந்து, உணவுப் பழக்கம் வரை அனைத்தும் மாறிவிட்டன. சில உணவுகள் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதே இல்லை. ஆனாலும் கூட பல நூற்றாண்டாக இருந்து வரும் ஒரு உணவு ’இட்லி’. இன்றுவரை அனைவரின் விருப்ப உணவாகவே இருந்து வருகின்றது.

மாதச் சம்பளம் வந்து ஒரு பத்து நாளைக்கு என்னதான் பீட்ஸா, பர்க்கர்னு போனாலும், கையில காசு காலியாகிடுச்சுனா… தெருமுனை பாட்டி கடையில் அக்கவுண்ட் வைச்சு சாப்பிடுகின்ற இட்லிதான் மாத கடைசி வரை பசி கொடுமையை போக்கும்.
இதுதான் ஊர் விட்டு ஊர் வந்து வேலை செய்யும், 80% மக்களின் வாழ்வாதாரம் என்று கூட கூறலாம். 20 ரூபா கொடுத்தா 2 வகை சட்னியோட சாம்பாரும் சேர்த்து, வயிறு நிறைய சாப்பிட்டு நிம்மதியா தூங்கலாம். இப்படிபட்ட இட்லியின் வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
 

இட்லி...

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு வகை. இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி.

வரலாறு:

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம். இட்லி செய்ய அரிசி மட்டும் போதாது. அதில் உளுந்தும் இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. உளுந்தின் தாயகம் இந்தியாதான். குறிப்பாக தமிழகத்தின் தஞ்சை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலும் அதிகம் விளைவிக்கப்படும் பயறு வகையாக இருக்கிறது. இந்த பயிறு வகைகளைப்பற்றி தமிழர்களின் சங்க கால இலக்கியங்களிலேயே குறிப்புகள் இருப்பதாக பேராசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

சங்க கால தமிழ் இலக்கியங்களுக்கு இணையான பழமை வாய்ந்த இலக்கியங்கள் கிடையாது என்பதால், இட்லியை கண்டறிந்த பெருமை தமிழர்களையே சாரும் என்று கூறலாம். அது மட்டுமின்றி ஆவியில் இட்டு அவிக்கும் பண்டங்களான கொழுக்கட்டை வகைகளை கண்டறிந்ததும் தமிழர்கள்தான். இதனால் ஆவியில் வேகவைத்து உருவாக்கப்படும் உணவான இட்லியையும் தமிழர்கள் கண்டுபிடித்ததற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
 

பெயர் எப்படி வந்தது?

ஏழாம் நூற்றாண்டில் இட்லியானது ’இட்டரிக’ என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகின்றது. அதன் பின் 12ஆம் நூற்றாண்டில் ’இட்டு அவி’ எனவும், பின் அது மருவி ‘இட்டலி’ யாகி, ‘இட்லி’ உருவானது என விவரம் தெரிந்தோர் கூறுகின்றனர். ஆனால் நமது சிறுவர்கள் அதனை ‘இக்கிலி’ என்று மழலையாகக் கூறுவதை கேட்டு ரசித்தும் இருக்கின்றோம்.
 

இட்லி வகைகள்:

இன்றைய உலகிற்கு ஏற்ப பல விதமான இட்லிகள் வந்துவிட்டன.
மதுரை இட்லி, செட்டிநாடு இட்லி, தஞ்சாவூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவை இட்லி, ஜவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி, குஷ்பு இட்லி என விதவிதமான இட்லிகள் வந்து விட்டன.
எனினும் இவற்றிற்கு அடிப்படை செயல்முறை அனைத்தும் ஒன்றே சேர்க்கப்படும் பொருட்கள்தான் வித்தியாசப் படுகின்றன. மேலும், இவையனைத்துடனும், தக்காளி சட்னி, கார சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் போன்றவற்றை சேர்த்து சாப்பிடும் போது சுவை அள்ளும். பெரும்பாலும், தேங்காய் சட்னி – சாம்பார் கலவைதான் பயன்படுத்தப் படுகின்றது.
 

இட்லியின் மருத்துவ குணம்:

முன்னோர்கள் கண்டுபிடித்த ஒன்று என்றாலே அதில் நிச்சயம் எதாவது விஷயம் இருக்கும். இட்லி மட்டும் அதற்கு விதி விலக்கல்ல. இதிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இட்லியின் அடிப்படைப் பொருட்களான அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உடலில் செயலாற்றுகின்றன. மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது இட்லி.
 
இட்லிகள் சாப்பிடுவதால் அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோபாட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.