எப்போதெல்லாம் நீர் அருந்த வேண்டும்?...

 எப்போதெல்லாம் நீர் அருந்த வேண்டும்?...

 

உடலின் நீர் சத்தை பேணவும், உடல் கழிவுகள் வெளியேறவும், உணவு செமிபாடு சிறப்பாக நடைபெறவும், தோல் வளம் பெருகவும் நீர் என்பது மிக மிக அவசியம். இவ்வாறு நீரை அருந்தும் பொழுது உடல் மொழியையும் கவனித்து நீர் அருந்தினால் ஆரோக்கியம் சிறப்பாக மேம்படும். அத்தோடு எப்போது நீர் அருந்தினாலும் சிறிது சூடாக அருந்துவது மிக நல்லது.

 

காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துதல்.

உடலானது நம் உறக்கத்தின் பொழுது கழிவு வெளியேற்றங்களை செய்து கொண்டிருக்கும். அத்தோடு உடலானது நீர் இல்லாமல் நீண்ட நேரம் இருப்பதால் வறட்சி தன்மையை கொண்டிருக்கும். கழிவுகளை முழுமையாக வெளியேற்றவும், உடல் வறட்சியை போக்கவும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மெல்லிய சூடான நீர் இரண்டு கிளாஸ் அளவு அருந்துவது மிக நல்லது. காலையில் நீர் அருந்துவது மூளையின் சிறப்பான செயல் திறனுக்கும் மற்றும் தோல் வளத்துக்கும் மிக நல்லது.

 

உணவுக்கு முன் நீர் அருந்துதல்

உணவு உண்ணும் 30 நிமிடத்துக்கு முன் சூடாக நீர் அருந்துவது மூலம் குடலை சுற்றியுள்ள இரத்தநாளங்கள் விரிவாக்கம் பெற்று உணவு செமிபாட்டை சிறப்பாகும். இதனால் உடல் சத்துக்களை இலகுவாக பெற்றுக்கொள்ள ஏதுவாகும்.

 

உணவுக்கு பின் நீர் அருந்துதல்

நாம் பொதுவாக உணவோடு சேர்த்து நீரை குடிப்பதும் அல்லது உணவு உண்ட பின் நீர் அருந்துவதையும் பழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் இது நம் உடல் மொழிக்கு ஒவ்வாத ஒரு செயல். ஏனெனில் உணவானது முதலில் வாயில் சுரக்கும் நொதியத்தோடு சேர்ந்து செமிபாட்டு தொகுதியை அடையும் பொழுது அங்கும் பலவிதமான நொதியங்கள் உணவை அரைத்து கூழாக்க சுரக்கும். அது ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருக்கும். இந்த செயல் திறனை நாம் உணவுக்கு பின்னரோ அல்லது உணவு வேளையிலோ நீர் அருந்துவது மூலம் இடையூறு செய்கிறோம். இதனால் உணவு செமிபாடு என்பது உடலின் இயல்பு நிலையை மீறி நொதியங்களின் செயல்பாடுகள் இல்லாமல், சரி வர உணவு அரை படாமல் மிக வேகமாக நடந்து முடிந்து விடும். இதனால் உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் சரிவர உறிஞ்சப்படாத நிலை தோன்றி விடும். அத்தோடு நெஞ்செரிவு, அமிலத்தன்மை போன்றன ஏற்படும்.

 

ஆகவே தான் உணவு உண்ணும் 30 நிமிடத்துக்கு முன்னரோ அல்லது உணவு உண்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகோ நீர் அருந்த வேண்டும்.

 

நீராடும் முன் நீர் அருந்துதல்.

குளிக்கச் செல்லும் முன் நீர் அருந்தினால் இரத்த நாளங்கள் விரிவாக்கம் பெற்று இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். உயர் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

 

உறக்கத்துக்கு செல்லும் முன் நீர் அருந்துதல்.

இதனால் உடல் வறட்சியடையாமல் இருப்பதோடு உடல் வலிகளை போக்கும். தூக்கமும் சீராக இருக்கும். உடல் கழிவுகள் வெளியேற்றத்துக்கும், உடல் கொழுப்பு குறையவும் கை கொடுக்கும். ஆனால் வயதானவர்களுக்கு உறக்கத்துக்கு முன் நீர் அருந்துதல் தூக்கத்தை தடை செய்யலாம். அவர்கள் தவிர்ப்பது நல்லது.

 

நீரின்றி அமையாது உலகு... நீரின்றி அமையாது உடல்... ஆகவே நீர் அருந்துதலையும் சீர் செய்து சரியான பலனை பெறுவோம்.