Migraine எனப்படும் ஓற்றைத் தலைவலி

Migraine எனப்படும் ஓற்றைத் தலைவலி

உலகில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நோய்களில் மூன்றாவது இடமும் ஒருவரை வேலை எதுவும் செய்யமுடியாமல் முடக்கிப்போடும் வியாதிகளில் ஆறாவது இடமும் பிடித்திருக்கிறது.

இந்த ஒற்றைத்தலைவலியால் உலகின் மொத்த மனிதத்தொகையில் பன்னிரண்டு சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு பத்து வினாடிக்கு ஒருவர் ஒற்றைத்தலைவலியால் அவசர சிகிச்சையை நாடுகிறார்கள்.

இதற்கும் மற்ற தலைவலிக்கும் வித்தியாசம் உண்டு. ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் எந்த வேலையும் செய்ய முடியாது. தலையின் ஒரு பக்கம் கடுமையான வலி ஏற்படலாம், தவிர வெளிச்சத்தைக் காண முடியாதது, சத்தத்தைக் கேட்பதற்கு முடியாமை என பாதிப்புகள் நீளும். இதனைத் தொடர்ந்து தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும்.

இது இரண்டு மணி நேரம் முதல் மூன்று நாட்களுக்கு தொடரலாம். சிலருக்கு இது ஒரு வாரத்தில் பலமுறையும் சிலருக்கு வருடத்திற்கு ஒரே ஒரு முறையும் கூட வரலாம். சிலருக்கே இது தாங்கிக்கொள்கிற அளவுக்கு இருக்கும். பெரும்பாலோர்க்கு வலி மண்டையை பிளக்கும். எந்த வேலையும் செய்யமுடியாமல் முடங்கி விடுவர்.

ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் வருகிறது. அதிலும் 15 முதல் 55 வயது வரை உள்ளவர்களை இது அதிகம் தாக்குகிறது.

எதனால் அல்லது எப்படி இந்த ஒற்றைத் தலைவலி வருகிறது?

மூளை இயங்குவதற்கு தேவைப்படும் புரதங்களில் ஒன்று செரோடோனின். இந்தத் திரவத்தின் அளவு குறையும் போது தான் இந்த ஒற்றைத்தலைவலி ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் நடைபெறும்போது விண்விண்ணென்று தெறிப்பது போன்ற வலி ஏற்படுகிறது.

பரம்பரை பரம்பரையாக தொடரும் வியாதிகளில் இதுவும் ஒன்று. ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களில் 90 சதவிகிதம் பேர் பரம்பரையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிக சூரிய வெப்பம், வானிலை மாற்றங்கள், உணவுப்பழக்கங்கள், உறக்கமின்மை, அதிக சத்தம், வெளிச்சம், மனக்கவலை, இறுக்கம், அசதி, பயணங்கள், காபி, டீ, குளிர்பானங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இது தான் காரணம் என்றில்லை. இந்தத் தலைவலி வருவதற்கான காரணம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது

தவிர ஒற்றைத் தலைவலி இதனால் தான் வருகிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடவும் முடியாது; சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் அது வரலாம். ஒரு சமயம் இனிப்பு சாப்பிடும்போது உங்களுக்குத் தலைவலி வரலாம். வேறொரு சமயம் அவ்வாறு வராமல் இருக்கலாம். ஒற்றைத்தலைவலி ஏற்பட்டது இனிப்புடன் நீங்கள் சாப்பிட்ட வேறு ஒரு பொருளாக இருக்கக்கூடும்.

ஒரு வேளை உணவைத் தவிர்த்தல், உறங்கும் போது போர்வையால் முகத்தை மூடி தூங்குதல் போன்றவை கூட காரணம் ஆகலாம். உங்கள் உடல் எடை கூட ஒற்றைத் தலைவலி ஏற்பட ஒரு காரணம் என்று மிகச்சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது.

எப்படித் தவிர்ப்பது?

இந்தத் தலைவலி வருவதற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்கவோ, தவிர்க்கவோ முடியாவிட்டாலும் அடிக்கடி வராதவாறு பார்த்துக்கொள்ள முடியும்.

சரியான திட்டமிடலுடன் உங்கள் நாட்களை அமைத்துக் கொள்ளவும். ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுவது அவற்றில் ஒன்று.
காஃபி, டீ, குளிர்பானங்களை குறைத்துக் கொள்ளவும்.
நேரத்திற்கு சாப்பிடவும். முறையான சமச்சீர் உணவு அவசியம்.
உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
மெல்லிசை கேட்கலாம். மனதை அமைதிப்படுத்தலாம்.
தலைவலியை தூண்டும் காரணிகளை அடையாளம் கண்டு தவிர்க்கலாம்.
இரைச்சல், அதிக வெளிச்சம், வெயிலிலிருந்து ஒதுங்கியே இருக்கவும்.
முக்கியமான ஒன்று, வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள்.
சரி, வந்துவிட்ட தலைவலியை எப்படி சரி செய்வது?

டிரிப்டான் என்ற மருந்து இந்த ஒற்றைத்தலைவலிக்கு காரணமான செரோடோனின் சுரப்பை தூண்டி மட்டுப்படுத்துகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

காசு அதிகம் உள்ளவர்கள் செஃபாலி எனப்படும் மின்சாரத்தால் தூண்டும் கருவியை உபயோகிக்கலாம். இது நெற்றியில் பட்டை போன்று ஓட்டிக்கொள்ளும் ஒரு கருவி. விலை அதிகம்.

இல்லை, நமது நாட்டு வைத்தியம் தான் வேண்டும் என்றால், பூண்டு, மிளகு இரண்டையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெய்யில் காய்ச்சி பின்னர் ஆறிய பிறகு தலையில் தேய்த்துக் குளிக்கவும்.

பசலைக்கீரை இருக்கிறது அல்லவா? அதன் சாறு கால் பங்கு, பீட்ருட் சாறு கால்பங்கு இதன் கூடவே கேரட் சாறு ஒரு பங்கு சேர்த்து குடிக்கலாம். வெள்ளை எள்ளுடன் எருமைப்பால் விட்டு அறைத்து நெற்றியில் பற்று போட்டுக் கொள்ளலாம்.

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். இது உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஒற்றைத் தலைவலியால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. சரியான வாழ்க்கை முறையால் தவிர்க்க முடியும்.