தாம்பூல மகிமை
தாம்பூல மகிமை
தாம்பூலத்தை பற்றிய நினைவு திருமண மண்டபங்களில் மட்டுமே தூண்டப்படும். தற்போது வீடுகளில் தாம்பூலம் தயாரிப்பவர்கள் மிகவும் குறைவு. ஹோட்டல்களிலும் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு பின்னர் aftermint என்று சொல்லப்படுகின்ற இனிப்பு கலந்த பொருட்களை தந்து விடுகிறார்கள். இவற்றில் ஓரளவுக்கு, செரிமானத்தை துரிதப்படுத்தும் தன்மை இருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை பல வருடங்களுக்கு முன்பாக வீடுகளில் தாம்பூலம் உணவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அதாவது அனைத்து உணவிற்கும் பின்னர் இது தரப்படும்.
இதற்காக ஒரு பித்தளை தட்டில், தேவையான அளவு வெற்றிலை வைத்திருப்பார்கள்; அதனருகில் கொட்டை பாக்குகள் மற்றும் ஒரு சிறிய குப்பியில் சுண்ணாம்பு- சில சமயங்களில் நறுமணம் கலந்த சுண்ணாம்பு கூட இருக்கும்.
வயதில் பெரியவர்கள் தாம்பூலம் தரிக்காமல் செல்ல மாட்டார்கள். வெற்றிலையின் காம்பை நீக்கி விட்டு, நரம்பை சமப்படுத்தி அதை நீட்டு வாக்கில் மடித்து, அதன் உள்ளே பாக்கை வைத்து அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து, அப்படியே சுருட்டி, வாய்க்குள் ஒதுக்கி விடுவார்கள். பாக்கை மெல்லமுடியாதவர்கள், அதை வெற்றிலை உரலில் வைத்து இடித்து அதன் தூள்களை சேர்த்துக்கொள்ளுவார்கள். மெதுவாக மெல்லும்போது, இவை மூன்று மற்றும் உமிழ் நீர் கலந்து ஒரு சுவையான உணர்வு நாக்கிற்கு வந்து சேரும். ஐந்து நிமிடங்கள் முடிந்தவரையில் மென்று விட்டு, அதன் சாற்றை மட்டும் உணவுக்குழாயில் இறக்கிவிட்டு, சக்கையை வெளியில் கொட்டிவிடுவார்கள்.
அது சரி - தாம்பூலம் தரிப்பதில் கிடைக்கும் பயன்கள் யாவை?
ஆயுர்வேத மருத்துவம் தெளிவாக சொல்லுகிறது. உடலில் ஏற்படும் நோய்க்கு முக்கிய காரணிகள் - பித்தம், கபம் மற்றும் வாதம் - இவற்றின் சமநிலை தவறுதல் . அதாவது இவை மூன்றும் உடலின் அத்தியாவசிய தேவைகள் . ஆனால் அளவுக்கு மிஞ்சினாலும் அல்லது குறைந்தாலும், ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும். தலைவலி, வயிற்றுக்கோளாறு போன்றவை பித்தம் சமநிலை தவறும் போதும்; சளி, ஆரம்ப கட்ட காய்ச்சல் போன்றவை கபம் சமநிலை தவறும் போதும், உடலில் ஏற்படும் வலி, மூட்டு வலி போன்றவை வாதம் சமநிலை தவறும்போதும், உடல் மருத்துவர் நமக்கு தெரிவிக்கின்ற அறிவிப்புகள். இந்த சமநிலை மாறாதிருந்தால், ஆரோக்கியம் மேம்படும்.
01. வெற்றிலை - இது அதிக மருத்துவ குணம் கொண்டது. தனியாக சவைக்கும்போதே தெரியும். நாக்கில் சுரீர் என்று உரைப்பதை நாம் உணரலாம். கபத்தை சரி செய்யக்கூடியது வெற்றிலை. அதாவது சளி போன்றவை நீங்குவதற்கு வெற்றிலை சாறு பயன்படும்.
02. பாக்கு - இது துவர்ப்பு சக்தி கொண்டது. துவர்ப்பு சக்தி பித்தத்தை சரி செய்யக்கூடியது.
03. சுண்ணாம்பு - கால்சியம் நிறைந்தது. இதில் உள்ள காரச்சத்து வாதத்தை சரி செய்யும் தன்மை கொண்டது. (முக்கியமாக கவனிக்கவேண்டியது - சுண்ணாம்பு மிகவும் குறைந்த அளவில் மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, தொண்டை பகுதிகளை புண் படுத்தும் தன்மை கொண்டது)
தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கூடுதலாக ஏலக்காய் பொடி, கிராம்பு மற்றும் ஜாதிபத்திரி போன்றவற்றையும் கலந்து தருகிறார்கள். இவை வாய்பகுதிகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை.
எனவே தாம்பூலம் தரிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
01. பாக்கு அதிகம் சேர்த்துக்கொள்ளுவதால், பித்தம் கட்டுப்படும்;
02. சுண்ணாம்பு சேர்ப்பதால், வாயுத்தொல்லை நீங்கும்;
03. வெற்றிலை கூடுதலாக சேர்த்துக் கொள்ளுவதால் சளித்தொல்லை நீங்கும்.
தாம்பூலம் தரித்து முடித்தவுடன், நன்றாக வாயை கொப்புளிக்கவேண்டும்.
தாம்பூலம் தரிப்பதால் வாய் புற்று நோய் வரலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
இது முற்றிலும் உண்மையல்ல. அதாவது விடிகாலையிலிருந்து இரவு தூங்கும் வரை, ஒரு சிலர் தாம்பூலம் மற்றும் புகையிலை இன்னும் சிலவற்றை வாய்க்குள் ஒதுக்கிவைத்திருப்பார்கள். இதிலிருந்து கிடைக்கும் போதைத்தன்மைக்கு அடிமையாகி போனதால், அவர்களால் இந்த பழக்கத்தை விட முடியாமல் போகிறது. இது நாளடைவில் புற்று நோய்க்கு வழி வகுக்கிறது.