மண்பானை சமையலே ஆரோக்கியம் நிறைந்தது....

 மண்பானை சமையலே ஆரோக்கியம் நிறைந்தது....

 

இன்று தமிழர்கள் தவறவிட்ட சிறப்பான விஷயங்களில் ஒன்று மண்பாண்ட சமையல். அனைவரும் நான்ஸ்டிக் என்ற தவறான கலாச்சாரத்துக்கு தன்னை உட்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் அல்லாதவர்கள் ஆரோக்கியமாக வாழ உணவுகளை மண் சட்டிகளில் வகை வகையாக செய்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். நம் நாடுகளில் இருந்து மண்பானைகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்க்கவும் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் நம் மக்களோ புற்று நோயை உண்டாக்கும் பிற நாட்டு குப்பைகளை கொண்டு சமைக்க தொடங்கி விட்டனர்.

 

இயற்கை மூலக்கூறான களிமண்ணினால் செய்த மண்பானை சமையல்களால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொண்டு உங்கள் சமையலை சிறப்பாக்குங்கள்.

 

மண்பானைகளில் சமைக்கும் உணவுகள் கால்சியம், இரும்பு சத்துக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்ததாக இருக்கும்.

மண்பானைகளில் சமைப்பதுவும் கூட நீராவி சமையலை ஒத்தது என்பதால் உணவின் சத்துக்கள் அழிவதில்லை.

உணவின் சுவையும், வாசனையும் சிறப்பாக இருக்கும்.

 

மண்பானைகளில் சமைக்கும் உணவுகள் எளிதில் ஜீரணமாகும். ஏனெனில் மண்பானைகள் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரித்துக் கொடுக்கும்.

உணவுகள் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். உணவில் உள்ள அமிலத்தன்மையை சமநிலைப் படுத்தும் தன்மை கொண்டது

மண்பானைகளை சுத்தம் செய்வதுவும் மிக எளிது. அளவான எண்ணெய்யே போதுமானது. இதே போல் மண்பானைகளில் ஊற்றி வைக்கும் நீரும் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும். சில நேரங்களில் ஜலதோஷம் போன்ற பிரச்சினை தோன்றலாம். ஆனால் உடலுக்கு பழக்கப்படுத்தி விட்டால் நாளடைவில் சரியாகி விடும்.

அது மட்டுமன்றி மண்பானைகளில் ஊற்றி வைக்கும் தயிரும் கூட சீக்கிரமே புளிக்காது.

 

மண்பானைகளை பராமரிப்பது எப்படி?

புது பானைகளை உடனைடியாக சமையலுக்கு உபயோகிக்காமல் 48 மணி நேரம் ஒரு வாளி தண்ணீரில் மூழ்க வைத்திருக்க வேண்டும். பிறகு எடுத்து காய வைத்து உபயோகிக்கலாம்.

 

சுத்தம் செய்வதற்கு சோப் மற்றும் பாத்திரம் கழுவும் ரசாயனங்களை உபயோகித்தல் கூடாது. ஏனெனில் மண்பானைகள் உறிஞ்சும் தன்மை கொண்டதால் இவற்றையும் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். வெறும் நீரில் தும்பினால் நன்றாக கழுவி விட்டு காய வைத்து விட்டால் போதும். எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் பேக்கிங் சோடா கொஞ்சம் போட்டு கழுவி விடலாம். அல்லது விறகு கறித்தூள் உபயோகிக்கலாம். இறைச்சி, மீன் போன்றவை சமைக்க தனியான மண் சட்டிகளை வைத்துக் கொள்வது நல்லது. தினமும் மண் பானைகளில் சமைக்க சமைக்க அதுவும் கூட ஒரு சிறந்த நான்ஸ்டிக் போல் ஆகி விடும். சமைப்பதற்கும் சுலபமாக இருக்கும். அது தவிர மலிவு விலையில் எங்கும் கிடைக்கும் ஒரு பொக்கிஷம். அவசியம் உபயோகித்து பயன் பெறுங்கள்.