நீரிழிவை கச்சிதமாக கட்டுப்படுத்தும் மருதம்பட்டையை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

 நீரிழிவை கச்சிதமாக கட்டுப்படுத்தும் மருதம்பட்டையை

 எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

 

மருதமரத்தின் பட்டைகள் துவர்ப்பு சுவையை கொண்டவை துவர்ப்பு நிறைந்த உணவுகள் மாதவிடாய் கோளாறுகளையும் சரி செய்யக் கூடியவை. மருதம்பட்டை குடல் தொடர்பான நோய்களுக்கும் நன்மருந்தாக செயல்படுகிறது. இதன் பட்டையை நீரில் ஊறவைத்து குடிக்கலாம். குறிப்பாக கோடைக்காலங்களில் உடல் உஷ்ணம் தவிர்க்க இது உதவுகிறது.

மருதம் இதயத்துக்கு சிறந்த பாதுகாவலனாக செயல்படக்கூடியது. இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதை கட்டுப்படுத்த முடியாத போது மருதம் மரத்தின் பட்டையை பொடித்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால் அடைப்பு உண்டாகும் அபாயம் உண்டு. இந்த கொழுப்பை கரைத்து அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மூச்சுவிடும் போது திணறல், காய்ச்சலோடு இருக்கும் காலத்தில் மருதமரத்தின் பட்டையை கொண்டு கஷாயம் செய்து குடித்துவரலாம்.

 

மருதம்பட்டை கஷாயம்:

மருதம் பட்டையில் லிப்பிட் பெர் ஆக்சிடேஷன் உள்ளது இது இரத்த உறைதலை தடுப்பதால் இது இதயத்தசைகளை வலுவாக்கும். இதனோடு செம்பருத்தி கலந்து கசாயம் செய்து சாப்பிட்டால் இதயக் கோளாறுகள் நீங்கி இதயம் வலுவாக இருக்கும்.

மருதம் மரத்துப்பட்டையுடன் 10 கிராம் அளவுக்கு எடுத்து அதை நறுக்கி திப்பிலி சிற்றரத்தை சுக்கு மூன்றையும் சம அளவு எடுத்து (தலா 3 கிராம் வீதம்) ஒன்றாக சட்டியில் இட்டு ஒரு டம்ளர் வீதம் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். இந்த நீரை மூன்று வேளை குடித்துவந்தால் காய்ச்சல், சுவாச காசம் குணமாக கூடும்.

மூட்டு வலி, இடுப்பு வலி உபாதை இருக்கும் போது நல்லெண்ணெயை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு மருதம்பட்டை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதை இறக்கி ஆறவிட்டு மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற இடத்தில் தடவி இலேசாக மசாஜ் செய்தால் போதும். முடக்கு வாதம், பக்கவாதம் இருப்பவர்களுக்கும் பலன் கொடுக்கும்.

உடலில் காயங்களோ ரணமோ ஆகும் போது மருந்துகளை நாடுவதுண்டு. அப்போது இரத்தபோக்கும் இருந்தால் காயம் பட்ட இடத்தை சுத்தமான நீரில் கழுவி அங்கு மருதம் பட்டை பொடியை வைத்து கட்டு போட்டால் காயம் அதிகமாகாது. வேகமாக ஆறவும் கூடும். இந்த கஷாயத்தால் புண்களை கழுவினால் ரணம் ஆகாமால் தடுக்கலாம். மருதம் பழத்தையும் புண்களில் வைக்கலாம். புண்கள் ஆறக்கூடும்.

சளி, இருமல், ஆஸ்துமா போன்ற தொந்தரவு இருக்கும் போது மருதம் மரத்தின் பட்டையை பொடியாக்கி வைத்துகொண்டு தினமும் 5 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நோய் தீவிரம் கட்டுப்படும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு உபாதை குறையக்கூடும்.

 

மருதம்பட்டை நன்மைகள் :

சிலருக்கு இருமும் போது இரத்தம் வந்தால் அது மோசமான நுரையீரலின் அறிகுறியாக இருக்கலாம். இவர்கள் மருதமரத்தின் பட்டையை எடுத்து வெயிலில் காயவைத்து உரலில் இட்டு இடித்து சல்லடையில் சலித்து எடுக்கவும். இதை அரைத்தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஆடாதோடை சாறை கலந்து குழைத்து கொடுத்து வந்தால் நுரையீரல் படிபடியாக குணம் ஆகும்.

இப்போது கட்டுப்படுத்த முடியாத நோயாக இருக்கும் நீரிழிவை எப்போதும் கட்டுக்குள் வைக்க மருதம் பட்டை கஷாயத்தை குடிக்கலாம். மருதமரம் போன்று நாவல் மரம் நீரிழிவுக்கு சிறந்த மருந்து. மருதமரத்தின் பட்டையுடன் நாவல் மரத்தின் பட்டையும் தலா 10 கிராம் அளவு எடுக்கவும். இதில் சிறு சுண்டுவிரல் போன்று ஆலமரத்தின் நுனியை வெட்டி அனைத்தையும் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது ஒரு டம்ளராக ஆகும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி இலேசாக மத்தில் கடைந்து வடிகட்டவும். இதை காலை வெறும் வயிற்றிலும். மாலை நேரத்தில் எதுவும் உண்ணாமல் வயிறு காலியாக இருக்கும் போதும் இதை அரை டம்ளர் வீதம் குடித்துவர வேண்டும்.

தொடர்ந்து 41 நாட்கள் வரை இதை குடிக்கலாம். இதை குடிப்பதற்கு முன்பு இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்வது அவசியம். இடையில் 20 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் இரத்த சர்க்கரை அளவு பரிசோதிக்கவும். ஏனெனில் இவை நிரீழிவை முழுவதுமாக கட்டுப்படுத்தக் கூடியவை என்பதால் நீரிழிவு வேகமாக குறைந்து விடும் அபாயம் உண்டு.

நீரிழிவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்கள் மாத்திரைகளோடு மருதம்பட்டை சேர்த்த கஷாயமும் குடிக்கலாம். எப்போதும் போன்று உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டாம். ஆனால் அவ்வபோது இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனையும் அவசியம். அதே போன்று மருத்துவரின் ஆலோசனையோடு இதை மருந்தாக எடுத்துகொண்டால் நீரிழிவு குறைபாட்டில் நிச்சய பலன் உண்டு.