விளக்கெண்ணெய் என்ற அருமருந்து...!!

விளக்கெண்ணெய் என்ற அருமருந்து...!!

பொதுவாகவே விளக்கெண்ணெய் என்றாலே ஒரு மட்டமான வஸ்து என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் ஒருவர் தெளிவு இல்லாமல் பேசினால், 'விளக்கெண்ணெய்' என்று கூறுவார்கள்.  முகத்தை இறுக்கமாக வைத்திருந்தால், 'ஏன்  விளக்கெண்ணையை குடிச்ச மாதிரி  இருக்கே? 'என்று கிண்டல் செய்வார்கள். 

ஆனால், விளக்கெண்ணெய் ஒரு மாமருந்து. பல குறைகளையும், நோய்களையும் களையும் அற்புத சக்தி அதற்கு உண்டு என்று எத்தனை பேர் அறிவார்கள்? முந்திய தலைமுறையில், மாதத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது, குடித்தவர்கள் வயிறு சுத்தமான பின்தான், வீட்டார்கள் அவர்களுக்கு பத்திய சாப்பாட்டினை கண்ணிலே காட்டுவார்கள்.  வயிற்றினுள் கழிவு இல்லாமல் இருந்ததால், அன்று வியாதியும் குறைவாக இருந்தது. 

சத்துக்கள் 

இப்பொழுது விளக்கெண்ணெய்க்கு குட் பை சொல்லி விட்டு, வியாதிகளை வரவேற்கிறோம். விளக்கெண்ணெயில் வைட்டமின் E, ப்ரோடீன், மினரல்கள் அடங்கியுள்ளன.  

ஆர்த்தரைடீஸ் பிரச்சனையா? 

கொஞ்சம் விளக்கெண்ணையுடன், சிறிது மஞ்சள் பொடியைச் சேர்த்து, பேஸ்ட் போல குழைத்து, மூட்டு வலி இருக்கும் இடத்தில் நன்றாகத் தடவி உருவி விட வேண்டும். காய்ந்தபின், மிதமான வெந்நீரில் கழுவவும். 

இள வழுக்கைக்கு

இளவயதில் தலையில் சிறிய அளவில் சொட்டை போல் வழுக்கை இருந்தால், விரல் நுனியில்  சிறிது எண்ணையை எடுத்துக் கொண்டு வழுக்கை இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு  ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் வழுக்கையில் கறுப்போடுவதை கண்கூடாகக் காணலாம். 

புருவங்கள் அடர்த்தியாக 

அதே போல் கண் புருவங்கள் அடர்த்தியாக இருக்க எண்ணையை புருவங்களின் மேல் ஒரு நாளைக்கு இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து  வந்தால், கரிய அடர்ந்த புருவங்கள் உண்டாகும். 

மலச்சிக்கலே வராது

ஒவ்வொரு நாள் காலையிலும், ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எண்ணையைக்  கலந்து குடித்து வர மலச்சிக்கலே இருக்காது. மலச்சிக்கலினால் உண்டாகும் நோய்களும் அண்டாது. 

தழும்பு நீங்க

பாலுண்ணி, மரு, பரு வந்த இடங்களில் அந்தத் தழும்பு நீங்க, எண்ணையை தழும்பு உள்ள இடத்தில் சில வாரங்கள் தடவி வர நல்ல குணம் தெரியும். 

முழங்கை காய்ப்பு, கருப்பு மறைய

சிலருக்கு, முழங்கை முழங்கால் போன்ற இடங்களில் காய்ப்பு இருக்கும். சில சொட்டு எண்ணையை காய்ப்பு, ஆணி இருக்கும் இடங்களில் தடவி வந்தால், ஆணியினால் ஏற்படும் வீக்கம், காய்ப்பு ஆகியவை விரைவில் காணாமல் போய் விடும்.  

Birth Marks மறைய

கருவுற்ற பெண்கள் வயிற்றில் இந்த எண்ணையைத்  தடவி வர, வயிற்றுப பகுதி தோலுக்கு மீள் திறன் [Elasticity] அதிகமாகும். பிள்ளை பெற்றவர்களுக்கு, வயிற்றினில் தழும்புகள் காணப்படும். எண்ணையை அப்பகுதிகளில் தடவி வந்தால் தழும்புகள் மறைந்து போகும். 

சுளுக்கு குணமாக 

சுளுக்கு விழுந்த இடத்தினில் எண்ணையைத் தடவி, அழுத்தம் இல்லாமல் நீவி கொடுக்க சுளுக்கு விட்டு விடும். 

காலில் பித்த வெடிப்புகள் குணமாக

காலில் வெடிப்புக்கள் இருந்தால், வெடித்த பாகத்தில் எண்ணையைத் தடவவும். இரவு நேரத்தில் தடவிக்கொண்டு படுத்தால் நல்லது. (ஏனென்றால் பகலில் தடவினால் நடக்கும் பொழுது வழுக்கும்). நடக்க வேண்டிய அவசியம் வந்தால், காலைத் துடைத்துக் கொண்டு நடக்கவும். 

இரவில் படுத்தவுடன் தூக்கம் வர மறுக்கிறதா? கண் இமைகளில் லேசாக எண்ணையைத் தடவிக் கொள்ளுங்கள். கண்ணுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நித்ரா தேவி ஓடோடி வந்து உங்களை அணைத்துக் கொள்வாள். 

கண்ணைச் சுற்றிய கருப்பு மறைய

கண்ணைச் சுற்றி உள்ள கருப்பு நீங்க, நிறம் மாறிய இடங்களில், எண்ணையைத் தடவுங்கள். பிறகு சில நாட்களில் கருப்பு நிறம் மறைந்த அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள்.