ஜாதிக்காய்

ஜாதிக்காய்...

நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை, ஜாதிக்காய். அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் எண்ணற்றவை! 

உலகம் எங்கும் விரும்பப்படுகிறது

மலேஷியாவில் பினாங்கிலும், நம் நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது ஜாதிக்காய். உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் ஜாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம். இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தார்களாம். 

செரிமானத்திற்கு சிறந்த ஜாதிக்காய் ஊறுகாய் 

ஜாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும், இதன் உள்ளே இருக்கும் விதைதான் ஜாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் ஜாதிபத்திரி. இதில் விதையும் ஜாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக் குணமும் கொண்டவை. 

Sperm Count-ற்கு சிறந்த மருந்து 

`தாதுநட்டம்’ எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, `சுவாசகாசம்’ எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது. ஆனாலும் இது அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்திற்கும் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான். 

நரம்பு மண்டலத்திற்கு வலுவூட்டும் 

ஜாதிக்காயில் நம்மை அடிமைப்படுத்தும் போதைப்பொருள், அதன் சத்துக்களில் உள்ளதோ என்கிற சந்தேகம்கூட இடையில் வந்தது. ஆனால், பல ஆய்வுகளைச் செய்து, அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் வஸ்து அல்ல எனக் கண்டறிந்தனர். 

சாதனை படைக்கும் ஜாதிக்காய்! 

நரம்பு மண்டலத்தில் நற்பணி ஆற்றுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்’ என்கிறது இன்றைய அறிவியல். 

இரத்தக் கொழுப்பைக் குறைக்க 

இரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள். 

வாயுத்தொல்லை, அஜீரணத்திற்கு

ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். மேலும், வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து. 

என்றும் இளமையுடன் இருக்க

இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்துதான் காரணம். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள். 

நல்ல அமைதியான தூக்கத்திற்கு

ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சாப்பிடுவது, மனஅழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், சீரான தூக்கத்தையும் தரும். 

உடலுறவில் விருப்பத்தை உண்டாக்க

குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள். 

மாதவிடாய், சூதக வலி

ஜாதிக்காய், சணல் விதை, ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், வெண்கொடிவேலி வேர் (அத்தனையையும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்) சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றை நன்கு நுண்ணியமாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதை வயிற்றுவலி, மாதவிடாய் தீவிர வலி, மைக்ரேன் தலைவலி ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம். இவற்றுக்கு இந்த மருந்து உடனடி வலி நிவாரணி!