சத்துக்கள் நிறைந்த அவல்...

சத்துக்கள் நிறைந்த அவல்...

அவல் வகைகள்

அவல்களில் சிறிய அவல், மெல்லிய அவல், கெட்டி அவல், சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல்வேறு வகைகள் உள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துகள் குறித்து பார்ப்போம்...

பாரம்பரிய உணவு

பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை சத்துள்ள உணவாக உண்ணப்பட்டு வருவது அவல் என்றால் அது மிகையாகாது.

பரவலாக இந்தியா முழுவதும் உண்ணப்படுகிறது

நெல்லிலிருந்து தயாரிக்கப்படும் அவலானது இந்தியாவின் வட மாநிலங்களில் போஹா என்றும், ஒரிசாவில் சிவ்டா என்றும், ஆந்திராவில் அத்குலு என்றும், கர்நாடகாவில் அவலக்கி என்றும் அழைக்கப்படுகின்றது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விளைகின்ற அரிசியைக் கொண்டு பல வகையான அவல்கள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகா மற்றும் கேரளாவில் சிவப்பு அவல் என்பது மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது.

சிறு தானியங்களிலும் அவல்...

அரிசியில் மட்டுமல்லாது சிறு தானியங்களிலும் அவலானது உற்பத்தி செய்யப்படுகின்றது. தினை அவல், கம்பு அவல், சோள அவல், ராகி அவல் போன்றவை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடிய உணவாக மாறி வருகின்றது.

உற்பத்தி முறை 

பல வருடங்களுக்கு முன்பு வரை நெல்லை சுத்தப்படுத்தி, ஊறவைத்து வெயிலில் உலர்த்தி கைகளால் இடித்து கைக்குத்தல் முறையில் அவலானது தயாரிக்கப்பட்டு வந்தது.

இப்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் எளிதாகவும், விரைவாகவும் அதிக அளவிலும் அவலானது உற்பத்தி செய்யப்படுகின்றன.

கல் மற்றும் மண்ணானது பிரிக்கப்படும் இயந்திரத்தில் நெல்லிலிருக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு பின்னர் தண்ணீர் உள்ள தொட்டியில் நெல்லானது கொட்டப்பட்டு மேலே மிதக்கும் தேவையற்ற கருக்கா நெல்லானது அகற்றப்பட்டு குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கப்படுகின்றது.

பின்பு மற்றொரு இயந்திரத்தில் ஊறவைத்து உலர்த்தப்பட்ட நெல்லானது கொட்டி வறுக்கப்படுகின்றது.

வறுக்கப்பட்ட நெல்லானது நெல்லை அழுத்தி அவலாக மாற்றும் இயந்திரத்தில் கொட்டப்பட்டு அவலாக வெளியே எடுக்கப்படுகின்றது.

அந்த அவலானது பெரிய சல்லடைகளில் சலிக்கப்பட்டு தவிடு, உமி நீக்கப்பட்டு சுத்தமான அவலாகக் கிடைக்கின்றது.

அவல் அளவானது இயந்திரத்தில் தரப்படும் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகின்றது.

அவல் சாப்பிடுவதால் மருத்துவ நன்மைகள்

அவல் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

மாவுச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், குறைந்த நிறைவுற்ற கொழுப்புகள் மட்டுமல்லாது சிறிதளவு சர்க்கரை ஆகியவற்றையும் கொண்டிருக்கும் ஒரு தானியம் அவலாகும்.

அவலை சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். எந்தவித பண்டிகைகளிலும் அவல் என்பது இறைவனுக்கு படைக்கப்படும் உணவுப் பொருளாக உள்ளது.

அவல் உடல் சூட்டைத் தணித்து நல்ல புத்துணர்ச்சியைத் தருவதோடு உடல் இளைப்பதற்கு ஏற்ற உணவாக உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவல் பெரிதும் உதவுகின்றது.

உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய சிவப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிவப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம் மற்றும் புட்டு போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

கம்பு அவல் கிச்சடி, உப்புமா மட்டுமல்லாது இனிப்பு வகைகள் செய்வதற்கும் ஏற்றதாக உள்ளது.

சுவைமிக்க தினை அவல், சோள அவல் மற்றும் கேழ்வரகு அவல் போன்றவற்றையும் மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ளார்கள்.

அவலை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.

அவலை தண்ணீர், பால் அல்லது மோரில் ஊற வைத்துச் சாப்பிடலாம். அல்லது வெல்லம் மற்றும் தேங்காய் மற்றும் நெய் சேர்த்தும் சாப்பிடலாம்.

எப்போதாவது பண்டிகைக்கு வாங்கிப் பயன்படுத்தும் ஒன்றாக இல்லாமல் அன்றாட உணவில் அவலைச் சேர்த்துக் கொண்டோமானால் அதை உட்கொள்வதால் ஏற்படும் பல்வேறு நன்மைகளையும் முழுமையாகப் பெறலாம்.