சரும சுருக்கம் வராமல் தடுக்க...

சரும சுருக்கம் வராமல் தடுக்க...

35 வயதை கடக்கும் பெரும்பாலானோரின் சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப் பார்க்க தொடங்கி விடுகிறது. மன அழுத்தமும், நடந்ததையே நினைத்து கவலைப்படுவதும் சரும சுருக்கம் தென்பட முக்கிய காரணமாக இருக்கிறது. 50 வயதை கடந்தவர்கள் சிலரின் கூந்தலில் நரைத்த முடி தென்படும். ஆனால் அவர்களின் சருமம் சுருக்கம் ஏதுமின்றி இளமை ஜொலிப்புடன் காட்சியளிக்கும். அவர் வயதானவர் தானா? என்று சிந்திக்கவும் வைத்து விடும். அதற்கு அவர்கள் சரும பராமரிப்பில் காண்பிக்கும் கூடுதல் அக்கறைதான் காரணம்.

ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்:
அத்துடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது, கடந்தகால, எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலைப்படுவதை தவிர்ப்பது, தியானம் மேற்கொள்வது போன்ற விஷயங்களும் சரும சுருக்கத்திற்கு இடம் கொடுக்காமல் இளமை தோற்றத்தை தக்கவைக்க துணை புரியும். இத்தகைய வாழ்வியல் முறையுடன் கெமிக்கல் அழகு சாதன பொருட்கள் உபயோகிப்பதை தவிர்த்து, வீட்டு உபயோக பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதும் சரும அழகை நிலைத்திருக்க செய்யும்.

ரோஸ் வாட்டரும் தேனும் போதுமானது
வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனையும், ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றலாம். சரும சுருக்கம் வராமலும் தடுக்கலாம். 200 மில்லி ரோஸ் வாட்டருடன், 2 டேபிள்ஸ்பூன் தேன், இரண்டு துளிகள் லாவண்டர் எண்ணெய் கலந்து பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் குளிர வைத்துக்கொள்ளவும். அதனை சருமத்தில் பூசி விட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். தினமும் மூன்று முறை இவ்வாறு செய்து வரலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் சருமம் ஈரப்பதத்துடன் காட்சி அளிக்கும். சுருக்கங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்காது.

முட்டை ஃபேஸ்பேக்
முட்டையையும் பயன்படுத்தலாம். இரண்டு முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை நன்றாக கலக்கி பிரிட்ஜில் குளிரவைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்மையான களிமண் துகளை கலந்து பசைபோல் குழைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் பூசிவிட்டு நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். சருமத்தில் தென்படும் கோடுகள், சுருக்கங்களை குறையச் செய்துவிடும் தன்மை இதற்கு உண்டு.

தேன், தேன்மெழுகு, தேங்காய் எண்ணெய்
தேன் மெழுகும் சரும சுருக்கத்தை தடுக்கும் தன்மை கொண்டது. 50 கிராம் தேன் மெழுகை நன்றாக உருக்கி அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும். அது குளிர்ந்ததும் 2 டேபிள்ஸ்பூன் பிரஷ் கிரீமை கலந்து நன்றாக குழைத்துக் கொள்ளவும். பின்பு அதனை காற்றுப் புகாத பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைக்கவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டது. 10 நாட்கள் வரை இந்த கிரீம் கலவையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.