இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்...
இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்
நாய்களுக்கு ஏன் வாழ்நாளானது வெறும் 10-12 வருடம் என்பது தெரியுமா?
ஏனெனில் நாய்களின் இதயத் துடிப்பானது மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத் துடிப்பு மனிதர்களுக்கு வந்தால், அது மிகவும் ஆபத்தானது.
அதிலும் எப்போது ஒருவரின் நாடித் துடிப்பானது அதிகமாகவோ அல்லது முறையற்றதாகவோ இருந்தால், அதற்கு இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். மேலும் இதயத் துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால் தான் படபடப்பு ஏற்படுகிறது.
பொதுவாக இதயம் ஒரு இயந்திரம் போன்றது. அந்த இயந்திரமானது குறிப்பிட்ட அசைவை மேற்கொண்டால் தான், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதைவிட்டு, அது வேகமாக இயங்கினால், அது நாளடைவில் பழுதடைந்து தூக்கிப் போட வேண்டிய நிலையில் தான் இருக்கும்.
ஆகவே இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதிலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்வதன் மூலம், இதயத் துடிப்பின் அளவை சீராக வைக்கலாம்.
இதயத் துடிப்பு வேகமாவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம்.
மேலும் உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இதயத் துடிப்பின் அளவு அதிகரிக்கும்.
எனவே இத்தகைய பிரச்சனையைப் போக்கும் வகையிலும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
தயிர்
தயிருக்கு இதயப் படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனில் இதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியச் சத்தானது மூளை மற்றும் இதயம் தொடர்பு கொள்ள உதவும் ஒரு முக்கியமான சத்தாகும். எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இதயத் துடிப்பின் வேகத்தை குறைக்க முடியும்.
பூண்டு
அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டுகளில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் உள்ளது.
உப்பு
அதிகமான இதயத் துடிப்பு மட்டும் பிரச்சினையை ஏற்படுத்துவதில்லை. சிலசமயங்களில் மிகவும் குறைவான இதயத் துடிப்பு இருந்தாலும், பிரச்சினையை சந்திக்க நேரிடும். எனவே இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், உப்புள்ள உணவுகளை சாப்பிட்டால், சீராக வைக்கலாம். ஆனால், அதிகமான இதயத் துடிப்பு உள்ளவர்கள், உப்பை சேர்க்கவே கூடாது.
நட்ஸ்
நட்ஸில் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை பலவீனமான இதயம் உள்ளவர்கள் சாப்பிட்டால், இதயம் வலிமையாவதோடு, இதயத் துடிப்பும் சீராக இருக்கும்.
டோஃபு
டோஃபுவில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய டோஃபு இதய படபடப்பை போக்குவதில் மிகவும் சிறந்தது. மேலும் இந்த உணவுப் பொருளில் கெட்ட கொலஸ்ட்ரால் இல்லாததால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது.
மீன்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இவை இதயத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு உணவுப் பொருளாகும். எனவே இதனை உட்கொண்டால், இதயத் துடிப்பு முறையாக இயங்கி, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
உலர் திராட்சை
உலர் திராட்சையிலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுவதன் மூலம், வேகமான இதயத் துடிப்பின் அளவானது குறையும்.
ஓட்ஸ்
ஓட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், தமனிகளில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்திருப்பதால், இது இதயத்தின் துடிப்பை சீராக வைக்கும்.
புதினா
புதினா, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளில் முதன்மையானதாக இல்லாவிட்டாலும், மருத்துவக்குணம் அதிகம் கொண்டது. அதிலும் இதனை சாப்பிட்டால், இதய தசைகள் வலிமையாவதுடன், இதயத்தில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்.
பூசணிக்காய்
பூசணிக்காயில் மக்னீசியம் என்னும் இதயத் துடிப்பை சீராக வைக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது