தசைப்பிடிப்பு அல்லது தசை இறுக்கம்...

தசைப்பிடிப்பு அல்லது தசை இறுக்கம் ..

கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும்போதோ அல்லது விளையாடும்போதோ திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்து விடும். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்னை தசைப்பிடிப்பு. சில நேரங்களில், இரவில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட, தசைகள் பிடித்து பிரச்னை உருவாகும். 
எழுந்து நடக்க முடியாத அளவுக்கு தசை பிடிப்பு இருக்கும். சில நேரங்களில், தாங்க முடியாத வலியை கூட ஏற்படுத்தும். 

மனிதனின் இயக்கத்துக்கு, தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த தசைகள் சுருங்கி, தளரும் தன்மை கொண்டவை. இவை, இயற்கைக்கு மாறாக சுருங்கி வலியை ஏற்படுத்துவது தசைபிடிப்பு. 
உடலில் அதிக வறட்சியின் காரணமாக, திடீரென தசைகளில் நீர்க்குறைவு ஏற்படுவதாலும், மிகவும் சோர்வு அடையும்போது தாது உப்புகளின் அளவு குறைவதாலும், தசைப்பிடிப்பு ஏற்படும். கை, கால் போன்ற இடங்களில் அடிபடுவதாலும், தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

அதிக அழுத்தம் வேண்டாம்: 

உடற்பயிற்சி செய்யும் முன், முன்பயிற்சி செய்யாவிடில், உடலில் ஏற்படும் திடீர் வெப்ப இழப்பை தாங்காமல் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. அதிகத் தூரம் பயணம் மேற்கொள்ளும்போது, ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்து இருப்பதால், தசைப் பிடிப்பு ஏற்படும். உதாரணத்திற்கு அடிகுழாயில் தொடர்ந்து தண்ணீர் அடிக்கும்போது, கையில் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.

வாழைக்காய், உருளை போன்ற வாயு நிறைந்த உணவுப்பொருட்கள், உடலில் வாயுவை அதிகரிக்கும். இதன் காரணமாகவும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். நெஞ்சு எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய அதிகக் காரம், மசாலா வகைகளை தொடர்ந்து உண்பதால், நாளடைவில் தசைப்பிடிப்பு எளிதில் ஏற்படும். 

தசைப்பிடிப்பு ஏற்படும்போது, நாமே கை, கால்களை முறுக்கி, தசைப்பிடிப்பை சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது. தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில், அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க கூடாது. அந்த இடத்தில் தசை, பலவீனம் அடைந்து இருக்கும். எனவே, அதிக அழுத்தம் கொடுத்து தேய்ப்பதால், உள்காயம் ஏற்படும்.

வெந்நீர் ஒத்தடம்: 

குளிர்ந்த நீரையோ அல்லது குளிர்பானங்களையோ அருந்த கூடாது. தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது. தசைப்பிடிப்பு ஏற்பட்டால் முதலில் ஓய்வு எடுக்க வேண்டும். சூடாக சுக்கு மல்லி காபி குடிக்கலாம். சுக்கு, வலியைப் போக்கும் தன்மை உடையது. 
வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 
நல்லெண்ணெயில் உப்பு கலந்து தேய்த்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியை வியர்க்க செய்ய வேண்டும். குணமாகும் வரை இப்படி ஒரு நாளைக்கு இருமுறை செய்யலாம். 

அடிபட்டு, தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் தசை பலவீனமாகி, ரத்த ஓட்டம் நடைபெறாமல் தடைப்பட்டு இருக்கும். எனவே, அடிபட்ட இடத்தில் எண்ணெயை ஊற்றி, மிதமாக அல்லது மெதுவாகத் தேய்துவிட வேண்டும்.
கற்பூராதி தைலம், முறிவு எண்ணெய், காயத்ரி மேனி தைலம் ஆகியவற்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம். ஆமணக்கு, நொச்சி, கல்யாண முருங்கை, முருங்கை இலை, புங்கன் இலை, புளி இலை, எருக்கம் இலை, ஊமத்தம் இலை இதனுடன் வாதநாராயண இலை ஆகியவற்றை சேர்த்து, வதக்கி ஒரு துணியில் கட்டி, தினமும் இருமுறை ஒத்தடம் கொடுத்தால், தசைப்பிடிப்பு குணம் அடையும்