வெரிகோஸ் வெயினை இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி குணமாக்குவது எப்படி?

வெரிகோஸ் வெயினை இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி குணமாக்குவது எப்படி? 

வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டல் பாதிப்புகள், நடுத்தர வயதுடையோர் மற்றும் வயது முதிர்ந்தோரிடம் அதிகம் காணப்படும் ஒரு வியாதி. ஆண்களைவிட பெண்களே, இந்த வியாதியால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாக நீண்ட நேரம் நிற்பதால், கால்களில் உள்ள நரம்புகள் சுருண்டு, இரத்த ஓட்டம் தடைபட்டு, இடுப்பிலிருந்து கால் பாதம் வரை, விண்ணென்று வலி ஏறும், இதுவே நாளடைவில், நரம்பு மற்றும் இதய பாதிப்புகளையும் உண்டாக்கிவிடும் தன்மைகள் நிரம்பியதாக காணப்படுகிறது.

நரம்புச் சுருட்டல் என்றால் என்ன?

உடலில் உள்ள இயல்பான இரத்த ஓட்டம் கால்களில், சீரற்ற நிலையில் தடைபட்டு இயங்குவதே, இந்த வியாதிக்கு மூல காரணமாக அமைகிறது.

இரத்த நாளங்களில் உள்ள சுரப்பிகளின் தளர்ச்சிகளால், இரத்தம் பின்னேறி, ஒரு நிலையில், அதிக இரத்த தேக்கம் காரணமாக, எதிர் திசையில் பயணித்து, இரத்த நாளங்கள் உப்பிவிடுகின்றன.. இதுவே, வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டல் வியாதியாக அறியப்படுகிறது.

இந்த நரம்புச் சுருட்டல் பாதிப்புகள் நாம் கண்களால் காணும் அளவுக்கு, இரத்த பாதிப்புள்ள தடித்த இரத்த நாளங்கள், சுருண்டு, வலைப்பின்னல்கள் போல, இடுப்பின் கீழ் பின்புறத்தில் இருந்து பாதம் வரை, காணப்படும். சிலருக்கு பாதிப்புகள் வெளித்தோற்றத்தில் காண இயலாத வண்ணம், மெலிதாகவும் இருக்கும்.

நரம்புச் சுருட்டலுக்கு காரணம்.

வெரிகோஸ் வெயின் பரம்பரை வியாதியாக அறியப்பட்டாலும், நரம்புச்சுருட்டலுக்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள், நாவிதர்கள், சலவைத் தொழிலாளர்கள், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வோர், காவலாளிகள், சீருடைப்பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய வேலைகளில் இருப்பவர்களை அதிகம் பாதிக்கிறது.

பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் காணப்படும் நரம்புச்சுருட்டல், மகப்பேறுக்கு பின்னர் இயல்பாக மறைந்துவிடுகிறது.

அரிதாக சிலருக்கு, உடலில் அடிபட்டாலோ அல்லது இரத்த காயங்களாலோ வர வாய்ப்பிருக்கிறது. மேலும், நாள்பட்ட மலச்சிக்கலும், காரணமாக இருக்கிறது.

வெளியில் காண இயலாத நரம்புச் சுருட்டலை எவ்வாறு அறிவது?

தொடைப்பகுதிகளில், நரம்புகள் சுருண்டு, கட்டிகள் போல காணப்படும். சிலருக்கு, பாதம் மரத்து போகும், கால்களில் வலி, கணுக்கால் மற்றும் கால்கள் வீங்கும் நிலை உண்டாகும். சமயங்களில், இரத்த நாளங்களின் வெடிப்பில் இரத்த கசிவு ஏற்பட்டு அதனால், வலிகள் உண்டாகலாம். மேலும், சிலருக்கு சரும வியாதிகள் ஏற்படக்கூடும்.

நரம்புச் சுருட்டல் பாதிப்புகள்:

இரத்த நாளங்களின் வெடிப்பால், இரத்தம் உறைந்து கட்டியாகி, அப்பகுதிகளில் வலி மற்றும் சருமம் சிவந்து காணப்படும்.

மிக நுண்ணிய அளவில் காணப்படும் உறைந்த இரத்தத் துளிகள், இரத்தத்தோடு கலந்து உடலில் பரவும்போது, உடலில் பல்வேறு முக்கியமான உடல் உறுப்புகளில், இரத்த அடைப்பை உண்டாக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இவற்றை ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே மூலம் மட்டுமே, அறிய முடியும்.

வெரிகோஸ் வெயினை குணமாக்குவது எப்படி?

மேலை மருத்துவ முறைகளில், பாதிக்கப்பட்ட கால்களில், நீண்ட காலுறை போன்ற கவசத்தை அணிய, பரிந்துரைக்கிறார்கள்.

தொடைப்பகுதியில் நரம்புகள் சுருண்டு காணப்பட்டால், அறுவை சிகிச்சையின் மூலமும், பாதிக்கப்பட்ட இரத்த நாளத்தை, உடலிலிருந்து இருந்து அகற்றுவதன் மூலமும் தீர்வு கிடைக்கிறது. ஆயினும் மீண்டும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

சித்த மருத்துவ தீர்வுகள் :

இரத்தத்தை சுத்திகரிக்கும் மூலிகைகளான குப்பைமேனி, வில்வம், நெருஞ்சில், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் நரம்புச்சுருட்டலுக்கு தீர்வாகின்றன.

நரம்புச் சுருட்டலுக்கு மேல் பூச்சாக, மஞ்சள், துளசி, வசம்பு இவற்றை சேர்த்து, சோற்றுக்கற்றாழை ஜெல்லில் நன்கு அரைத்து, தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் பூசிவர, நரம்புச்சுருட்டல் வலி குறைந்து பலன்கள் தெரியும்.

புங்க எண்ணை அல்லது புங்கன்கொட்டை, விளக்கெண்ணை இவற்றுடன் தேன் கலந்து, இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

அத்திப்பாலை தினமும், நரம்புச்சுருட்டல்களுக்கு மேல் தடவிவர, வலி குறையும்.

ஆயினும், நரம்புச்சுருட்டலுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக விளங்குவது, தண்ணீர்விட்டான் கிழங்குகளே!.

தனிப்பெரும் சிறப்புமிக்க தண்ணீர்விட்டான் கிழங்குகளை நன்கு இடித்து சாறெடுத்து, தினமும் பருகிவர, நரம்புச்சுருட்டல் பாதிப்புகள் யாவும் விலகி, உடல் நலம் பெறும்.

கடைபிடிக்கவேண்டிய செயல்கள் :

நடுத்தர வயதுடையோர் மற்றும் பெண்கள் அதிக நேரம் நிற்கவும் கூடாது, அமர்ந்திருக்கவும் கூடாது.

உடலை இறுக்கும் ஆடைகளை அணிவதை, முற்றிலும் தவிர்க்கவேண்டும். குதிகால் உயர்ந்த ஹை ஹீல்ஸ் காலணிகளை, பயன்படுத்தக்கூடாது.

அதிக உடல் எடை, நரம்புச் சுருட்டல் உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் வரவைக்கும், எனவே, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க வேண்டும்.

முறையான உடற்பயிற்சிகள் செய்து வரவேண்டும், இல்லாவிட்டால், தினமும் இருபது அல்லது முப்பது தோப்புக்கரணம் போட்டு வரலாம்,

சூப்பர் பிரைன் யோகா என மேலைநாடுகளில் அழைக்கப்படும் தோப்புக்கரணம், உடற்பயிற்சிகளைக் காட்டிலும் உயர்வானது, உடல் நலத்தோடு, மன நலத்தையும் சரி செய்யக் கூடியது.

பெண்கள் பேறுகாலத்தில், நீண்ட நேரம் நடப்பதையும், உட்காருவதையும் தவிர்த்துவர, பாதிப்புகள் விலகும்.

தவிர்க்க வேண்டியவை :

எண்ணையில் பொரித்த பலகாரங்கள், வறுத்த உணவுவகைகள் மற்றும் துரித உணவுவகைகளை, முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், இனிப்புகள், மற்றும் தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நலம், உணவில் நன்கு நீராக்கிய நீர்மோர் சேர்த்துக்கொள்ளலாம்.

ஊறுகாய் மற்றும் அசைவ உணவுகளை, கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

தண்ணீர்விட்டான் கிழங்கு சாற்றை மருந்தாக எடுத்துக்கொள்ளும் காலங்களில், மேற்கண்ட குறிப்புகளை முழுமையாக கடைபிடித்துவர, விரைவில் வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டல் வியாதி குணமடைந்து, உடல்நலம் பெறலாம்.