அகத்தை சீராக்க சீரகத்தை பயன்படுத்துங்கள்...

சீரகம் கலந்த நீரை எந்த நோய்க்கு எவ்வாறு பயன்படுத்தலாம்? 

வீட்டு சமையலறையிலும் இருக்கும் நறுமணமிக்க மசாலாப் பொருள் தான் சீரகம். இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் சமையலில் சேர்த்து வரும் ஓர் பொதுவான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது பார்ப்பதற்கு ஓமம் போன்று தான் காணப்படும். ஆனால் இதன் நறுமணம் மற்றும் சுவை வேறுபடும். இந்த சீரகம் உணவிற்கு மணத்தையும், சுவையையும் அளிப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது.

சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள், மயக்க பண்புகள், ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் உள்ளன. அதோடு இதில் டயட்டரி நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, காப்பர், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், ஜிங்க், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல்வேறு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் உள்ளன.

இத்தகைய சீரகத்தை ஒருவர் அப்படியே அல்லது பொடியாக தயாரித்து, உண்ணும் உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து பொடியாக செய்தால், அதனை சாலட், தயிர், ஸ்மூத்தி, ஜூஸ்கள் போன்றவற்றுடன் கலந்து உட்கொள்ளலாம்.

ஆயுர்வேதத்திற்கு செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, அஜீரண கோளாறு, வயிற்றுப் போக்கு, வாய்வுத் தொல்லை, குமட்டல் போன்றவற்றிற்கு சீரகம் பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு 1 டீஸ்பூன் வறுத்த சீரக பொடியை 1 டம்ளர் நீரில் சேர்த்து கலந்து தினமும் 1-2 முறை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், 1/4 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, தினமும் ஒருமுறை குடிக்கலாம்.

உங்கள் வயிறு உப்பிய நிலையில் உள்ளதா? அப்படியெனில் சிறுகுடலில் வாய்வு அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம். இதனால் வயிற்று வலி மற்றும் அடிவயிறு மிகவும் அசௌகரியமாகவும் இருக்கலாம். அதோடு வயிற்று உப்புசம் மலச்சிக்கல், அஜீரண கோளாறு, முறையற்ற குடலியக்கம் போன்றவற்றாலும் ஏற்படலாம். இதிலிருந்து விடுபட, 1 கப் சுடுநீரில் 1 சிட்டிகை சீரகப் பொடி மற்றும் சுக்கு பொடி, உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குளிர வைத்து குடிக்க வேண்டும்.

சீரகம் கைக்குழந்தைகள் சந்திக்கும் வயிற்று வலியில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, 1-2 டீஸ்பூன் சீரக நீரை குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை கொடுத்தால், வயிற்று வலியைத் தடுக்கலாம்.

இரும்புச்சத்து குறைபாட்டினால் வருவது தான் இரத்த சோகை. இதில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. எனவே இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள், சீரகத்தை உணவில் தவறாமல் சேர்த்து வருவது நல்லது. சொல்லப்போனால், 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தில் 4 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டைத் தடுக்க, அன்றாட சமையலில் சீரகப் பொடியை சேர்த்து வாருங்கள்.

சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு நல்லது. இது தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்கும். அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து, சுவைக்கு தேனையும் சேர்த்து கலந்து, தினமும் இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.

சீரகம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இது உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுவதோடு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும். அதோடு சீரகம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரையச் செய்யும். இதன் விளைவாக அதிகப்படியான உடல் எடை குறைந்து, சிக்கென்று மாறலாம்

ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க சீரகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவைக் குறைக்கும். அதற்கு 8 டீஸ்பூன் சீரகத்தை வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் தினமும் குடிக்கும் நீரில் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நினைவாற்றலை மேம்படுத்த உதவுவதோடு, மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும் அதிகரிக்கும். முக்கியமாக சீரகத்தை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், முதுமைக் காலத்தில் வரும் அல்சைமர் நோயைத் தடுக்கலாம். சீரகத்தில் வைட்டமின் பி, ஈ போன்றவை உள்ளது. இவை உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியமானவைகளாகும்.

சீரகம் எலும்புகளுக்கு நல்லது. இதில் எலும்புகளின் வலிமைக்குத் தேவையான சத்துக்களான கால்சியம், வைட்டமின் ஏ, பி12, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளது. இதில் உள்ள ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகள், பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் வராமல் இருக்க வேண்டுமானால், சீரகத்தை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வேண்டுமா? அப்படியானால் அதற்கு சீரகம் உதவும். சீரகத்தில் மெலடோனின் என்னும் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். சீரகம் தூக்கமின்மைக்கும், இதர தூக்க பிரச்சனைகளுக்கும் நல்லது. அதற்கு வாழைப்பழத்தை சீரகப் பொடி தொட்டு, இரவில் தூங்கும் முன் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் சீரக டீ குடிக்கலாம்.