எப்சம் உப்பு பத்தி தெரியுமா?

எப்சம் உப்பு பத்தி தெரியுமா? 

அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க:

சமீபத்தில் ஒரு மூலப்பொருள் பரவலாக எல்லா இடத்திலும் அறியப்பட்டு வருவது என்றால் அது எப்சம் உப்பு. பல்வேறு அற்புதமான விமர்சனங்களைக் கொண்டது தான் இந்த உப்பு. ஆம், இதன் நன்மைகள் ஏராளம் உண்டு.

ஆகவே இந்த அருமையான மூலப்பொருளைப் பற்றி நம்முடைய வாசகர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு பதிவிடப்பட்டுள்ளது. எப்சம் உப்பு என்னும் ஒரு சுவாரஸ்யமான கூறைப் பற்றியும் அதன் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

எப்சம் உப்பு என்றால் என்ன?

இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்ட உப்பு இது என்பதால் 'எப்சம்' உப்பு என்று வழங்கப்படுகிறது. எப்சம் உப்பு ஒரு சுத்தமான கனிம கூறாகும் . இது இயற்கையாக கிடைக்கும் ஒரு பொருள் என்பதால் பலவித மந்திரங்களையும் தன்னிடம் கொண்டுள்ளது இந்த உப்பு. எப்சம் உப்பில் முக்கியமாக மக்னீசியம் மற்றும் சல்பேட் உள்ளது. பலவித கோளாறுகளுக்கு இயற்கையான தீர்வை இந்த உப்பு வழங்குகிறது.

எப்சம் உப்பு பல்வேறு அற்புத நன்மைகளைக் கொண்டுள்ளது. இதனை வீட்டில், தோட்டத்தில் மற்றும் அழகுக் குறிப்புகளில் பலவிதமாகப் பயன்படுத்தலாம். மெக்னீசியம் மற்றும் சல்பேட் ஆகியவற்றை உடல் உடனடியாக உறிஞ்சிக் கொள்ளும் என்பதால் எப்சம் உப்பு பயன்படுத்தி குளிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதால் இந்த குளியலை பலரும் பரிந்துரைக்கின்றனர்.

எவ்வாறு வேலை புரிகிறது?

எப்சம் உப்பில் முக்கியமாக இருப்பது மெக்னீசியம் மற்றும் சல்பேட் ஆகியவை ஆகும். இரண்டும் தத்தமது வழிகளில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஒரு புறம் மெக்னீசியம் உடலில் உள்ள கிட்டத்தட்ட 325 என்சைம்களைக் கட்டுப்படுத்துகிறது, நரம்பு மற்றும் தசை செயல்பாடுகளில் உதவுகிறது, தமனிகள் கடினமாவதைத் தடுத்து, அழற்சியைக் குறைக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த மந்திர உப்பை சிறிதளவு தூவுவதால் பல அற்புத நன்மைகள் கிடைக்கிறது. எப்சம் உப்பு பெரும்பாலும், மருந்து கடைகளில், மளிகைக் கடைகளில் மற்றும் தோட்டத்திற்கான பொருட்கள் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும். இந்த உப்பு பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு விதமும் தனித்தனியாக தயாரிக்கபட்டாலும், வேதியல் ரீதியாக அனைத்தும் சமமாக உள்ளன.

விளைச்சலை அதிகரிக்க:

எப்சம் உப்பு பற்றி நன்மைகள் குறித்த ஆராய்ச்சியில், இந்த உப்பு விளைச்சலை குறிப்பாக தக்காளி, மிளகாய் போன்றவற்றின் விளைச்சலை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. தண்ணீரில் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து கலந்து செடிகளில் சமமாக அந்த நீரைத் தெளிப்பதால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது.

பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்ய

பாத்திரம் கழுவும் சோப் மற்றும் எப்சம் உப்பு சம அளவில் எடுத்து , கறைகள் உள்ள இடத்தில் தடவி, தொடர்ந்து அந்த இடத்தை நன்றாக துடைக்கவும். தூசு படிந்த அழுக்கைப் போக்க எப்சம் உப்பு பயன்படுகிறது.

பாத்திரம் பளபளக்க:

உணவு கருகிய மற்றும் எண்ணெய் பிசுக்கு படிந்த பாத்திரத்திற்கு எப்சம் உப்பு பயன்படுத்தலாம். தீயில் கருகிய ஒரு பானை அல்லது குக்கரை கால் பகுதி எப்சம் உப்பு சேர்த்து தேய்த்து கழுவுவதால் உங்களை ஆச்சரியப்படுத்தும் 'பளிச்' சுத்தம் பாத்திரத்திற்கு கிடைக்கிறது. இதுவரை பயன்படுத்தாத ஒரு புதிய பாத்திரம் போல் அழுக்குகள் நீக்கப்பட்ட பாத்திரம் காட்சியளிக்கும்.

முகத்திற்கு க்ளென்சர்:

வழக்கமாக பயன்படுத்தும் க்ளென்சிங் க்ரீமுடன் அரை ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து கலக்கவும். இந்த க்ரீமை முகத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் எழுந்தவுடன் முகத்தை மென்மையாக மசாஜ் செய்து தண்ணீரால் முகத்தைக் கழுவவும். இதனால் உங்கள் முகம் மயக்கும் விதத்தில் பளபளப்பாக மாறும்.

சரும மாஸ்க்:

முகத்தில் உள்ள பருக்களைப் போக்க எப்சம் உப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட மாஸ்க் நல்ல பலன் கொடுக்கும். இதனைத் தயாரிக்க நமக்குத் தேவையான பொருட்கள், ஒரு முட்டை, அரை ஸ்பூன் பன்தொதேனிக் அமில தூள், ஒரு ஸ்பூன் எப்சம் உப்பு, ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், இரண்டு துளிகள் தைம் எண்ணெய் மற்றும் நறுக்கிய ஒரு பழுத்த தக்காளி . இந்த எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்துத் தயாரிக்கபட்ட விழுதை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்பு மென்மையாக அதனை நீக்கி குளிர்ந்த நீரால் கழுவவும். பருக்கள் குறித்த பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறப்பான தீர்வைத் தரும்.

கால் பாதங்களுக்கு:

கடினமான சருமத்தை மிருதுவாக்க, கால் பாதங்களில் உண்டாகும் துர்நாற்றத்தைப் போக்க மற்றும் வலிகளைக் குறைக்க தற்போது எப்சம் உப்பை பயன்படுத்துவது எளிது. ஒரு அகன்ற பாத்திரத்தில் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக்கி அதில் அரை கப் எப்சம் உப்பு சேர்க்கவும். அந்த நீரில், உங்கள் கால் பாதங்களை ஊற வைக்கவும். விரல்களில் உள்ள பூஞ்சையைப் போக்கவும் இது உதவுகிறது. இந்த நீரில் பளிங்கு கற்கள் சேர்ப்பதால் ஒரு சரியான பாத மசாஜ் கிடைக்கும்.

சருமத்தை தளர்த்த:

எப்சம் உப்பின் ஒரு மிகப்பெரிய பலன், சருமத்தை எக்ச்போலியெட் செய்வது. எப்சம் உப்பை எடுத்து கால் முதல் முகம் வரை மேல்நோக்கி தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து குளிப்பதால், சேதமடைந்த சருமம் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. இது இயற்கயான முறையில் சருமத்தைத் தளர்த்துகிறது.

கூந்தல் அடர்த்தியை அதிகரிக்க:

கூந்தல் அடர்த்தியை உருவாக்குவது எப்சம் உப்பின் ஒரு மிகச் சிறந்த பயன்பாடாகும். எப்சம் எண்ணெய் மற்றும் கண்டிஷனர் சம அளவு எடுத்து தலை முடியில் தடவி இருபது நிமிடம் கழித்து தலையை அலசவும். இதன் முடிவு உங்கள் கண்களை அகலமாக்கும்.

காயம் மற்றும் சுளுக்கிற்கு:

காயம் மற்றும் சுளுக்கை சிறந்த விதத்தில் போக்குவதற்கு, வெதுவெதுப்பான நீரில் இரண்டு கப் எப்சம் உப்பைச் சேர்க்கவும். அந்த நீரில், பாதிக்கபட்ட இடத்தை ஊற விடவும். இரண்டாக பிளவுபட்ட இடத்தை எப்சம் உப்புக் கலந்த நீரில் ஊற வைப்பதால் அந்த பிளவு மறைகிறது.

கால் துர்நாற்றத்தைப் போக்க:

கால் பாதங்களில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க எப்சம் உப்பு உதவுவது இதன் ஒரு சிறப்பான நன்மையாகும். ஒரு ஸ்பூன் எப்சம் உப்பு சேர்க்கபட்ட வெதுவெதுப்பான நீரில் உங்கள் கால் பாதங்களை ஊற விடவும். எந்த ஒரு நாள்பட்ட துர்நாற்றத்தையும் போக்க இந்த சிகிச்சை உதவும். மேலும் உங்கள் பாதங்களை மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.

பக்க விளைவுகள்:

எப்சம் உப்பின் பக்க விளைவுகள் அபாயத்தை தோற்றுவிக்கும் தன்மை கொண்டது. அதனால் தேவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு, தீவிர வயிற்றுப்போக்கு, உயர் கால்சியம் அளவு, சோர்வு, தசை வலிப்பு, தசைபிடிப்பு அல்லது தசை வலி, ஒழுங்கற்ற கண் செயல்பாடு போன்றவை எப்சம் உப்பின் பக்க விளைவால் உண்டாகும் சில பாதிப்புகளாகும். எப்சம் உப்பை உடலின் வெளிப்புறம் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும், இதனை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.