வில்வம் மருத்துவ குணங்கள் :

வில்வ இலை மருத்துவ குணங்கள் :

வில்வம் சிவவழிபாட்டில் இன்றிமையாத ஓர் பூஜைக்குரிய இலை ஆகும். ஒரே ஒரு வில்வ தளத்தைச் சார்த்தி சர்வேஸ்வரனை சரணடைந்தால் சகல நன்மைகளையும் சீக்கிரத்தில் சிவன் நமக்கு அளிப்பான் என்பது சைவமத நம்பிக்கை ஆகும்.

வில்வம் கிளைத்து தழைக்கும் ஒரு மரமாகும். உயரமாக வளரும் இந்த மரத்தின் அடிப்பகுதி தடித்துப் பிளவுபட்டு வெண்ணிறம் கொண்டிருக்கும் அடி மரத்தில் முட்கள் இல்லாமல் இளங்கிளைகளில் முட்கள் இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் இருக்கும். ஐந்து இலைகளை உடைய ஓர் இனமும் உண்டு. இலைகள் சாறின்றி பசுமை நிறத்தோடு காணப்படும்.

இலையை கசக்கினால் கற்பூரத்தைப் போல சுகமான வாசம் வெளிப்படும். வில்வப் பழத்தின் உள்ளே மண்ணின் நிறத்தை ஒத்த சதைப் பற்றும் வெண்மையான விதைகளும் விளாம் பழத்தைப் போன்றே தோற்றமளிக்கும். பூக்கள் வெளிப் பச்சையாகவும் வாசனையாகவும் இருக்கும். காய்கள் பச்சை நிறமாகவும் பழுத்ததும் மஞ்சள் நிறமாயும் இருக்கும்.

பழத்தின் உள்ளே மஞ்சள் சிவப்பு நிறம் கொண்ட நார் காணப்படும். பழம் நறுமணமும் இனிப்பு சுவை உடையதாகவும் இருக்கும். வில்வம் வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்க வல்லது. நோய் செய்யும் நுண் கிருமிகளை ஒழிக்கவல்லது. குறிப்பாக பேதி, வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, டைபாய்டு காய்ச்சல் ஆகியவற்றை உண்டாக்கும் நுண்கிருமிகளைத் தவிர்க்க வல்லது.

துரத்த வல்லது. செரிமான கோளாறுகளைச் சீர்செய்ய வல்லது.  இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவைக் குறைக்க வல்லது. ஆயுர்வேத மருத்துவத்தில் வில்வம் பேதியை நிறுத்தவும், அதன் வேர் வலியோடு சிறுநீர் கழிதலை குணமாக்கவும், மரப்பட்டை சர்க்கரை நோயைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் வில்வ இலைகளினின்று பிரிக்கப்பட்ட சத்துப் பொருள் இன்சுலின் எனப்படும் நவீன மருந்துக்கு இணையானது என்றும் ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. வில்வப்பழத்திலிருக்கும் பளபளப்பான சதைப்பற்று உடலுக்கு பலத்தை தரவல்லது. வில்வப்பழம் நாக்கு ரணத்தையும், நாட்பட்ட மல பந்தத்தையும் நீக்கும் நன்மருந்து ஆகும். கேரள மாநிலத்தவர் வில்வமர சமூலத்தை உடலுக்கு குளிர்ச்சி தரும் வண்ணம் தலைக்குத் தேய்த்து குளிப்பதற்கென எண்ணெய் காய்ச்சவும், உள்ளுக்கு உபயோகப்படுத்தவும், லேகியம் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.

இதன் பட்டைக் குடிநீர் நெஞ்சு படபடப்புக்கும் முறை சுரத்துக்கும் கொடுக்கப்படுகின்றது. கண்கோளாறுகளுக்கு இலையைத் துண்டுகளாக நசுக்கி கண்களுக்கு மேற்பற்றாக சேர்த்துக் குடிநீராக்கி குடிப்பர். இதனால் வயிற்றுக் கோளாறுகள் விலகிப் போகும். வில்வப் பூக்களின் தீநீர் விஷத்தைப் போக்க கூடியது.

வில்வ இலைக் குடிநீர் தீராத வயிற்றுப் போக்கு, காசம், ரத்தக் கடுப்பு முதலியனவற்றை குணப்படுத்தும். வில்வப் பழத்தில் சர்க்கரை கலந்து காலையில் வெறும் வயிற்றுடன் உள்ளுக்கு சாப்பிட வயிற்றுப் போக்கு, மலபந்தம், குடலில் உண்டாகும் பிற கோளாறுகளையும் போக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற அளவு கொடுக்க தீராதஅதிசாரம், வயிற்றுக் கடுப்பு இவைகள் நீங்கும். இலைத் தீநீர் வியர்வையை உண்டாக்கும். காய்ச்சலைத் தணிக்கும். பேதியை நிறுத்தவல்லது.

வயிற்றுப் புழுக்களை வெளித்தள்ள வல்லது. இரைப்பு நோயைப் போக்க வல்லது. புற்றுநோயைத் தடுக்க வல்லது. மனஅழுத்தத்தை தணிக்க வல்லது. சர்க்கரை நோயைத் தடுக்க வல்லது. சீதபேதியைக் குணப்படுத்த வல்லது. ரத்தக் கட்டிகளை கரைக்க கூடியது-. வீக்கத்தை வற்றச் செய்வது, நுண்கிருமிகளை அழிக்க வல்லது., சோர்வைப் போக்கி புத்துணர்வு தரவல்லது, காய்ச்சல் மற்றும் வீக்கத்தை போக்க கூடியது, புண்களை சீழ் பற்றா வண்ணம் ஆற்றக் கூடியது.

தொற்று நோய்க் கிருமிகளைத் துரத்த வல்லது, பசியைத் தூண்டக் கூடியது, வற்றச் செய்வது, இதயத்துக்கு பலம் தருவது, மேல் பூச்சு மருந்தாவது, செரிமானத்தை தூண்ட வல்லது, சளியைக் கரைக்க வல்லது, காய்ச்சலை தணிக்க வல்லது, ரத்தத்தை உறைய வைக்க கூடியது, ஈரலைப் பாதுகாக்க வல்லது, கொழுப்பைக் குறைக்க வல்லது, ரத்தத்தில் மிகுந்த சர்க்கரையை தணிக்க வல்லது, மலமிளக்கியாவது, சளித்தன்மையை உண்டாக்க வல்லது, சத்தூட்டமானது, உள்ளுறுப்புகளைத் தூண்டக் கூடியது, வயிற்றுக் கோளாறுகளைப் போக்க வல்லது.

வில்வத்தில் பொதிந்திருக்கும் சத்துக்கள் : 

வில்வத்தில் ஆல்கலாய்ட்ஸ்:, அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், கார் போஹைட்ரேட்ஸ், கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், கௌமாரின்ஸ், எரிசக்தி, கொழுப்பு சத்து, நார்ச்சத்து, ப்ளேவனாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ் மியூசிலேஜ், நியாசின், பொட்டாசியம். புரோட்டின், ப்சோரர்லென், ரிபோஃப்ளேவின், சிட்டோஸ்டிரால், ஸ்டெரால்ஸ் டேனிக் அமிலம், தயாமின், விட்டமின் ஏ, விட்மின் பி, விட்டமின் சி ஆகிய ரசாயன சத்தூட்ட மருத்துவ வேதிப் பொருட்கள் மிகுந்துள்ளன. 

வில்வம் மருந்தாகப் பயன்படும் விதம் :

வில்வத்தின் வேரை உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொண்டு வேண்டும் போது சிறிது நீர்விட்டு குழைத்து நெற்றிக்கு பற்றாகப் போட தலவலி தணிந்து விடும்.

வில்வம் பழச்சதையை வெயிலில் உலர்த்தி நன்றாகத் தூளாகும் படி அரைத்து வைத்துக் கொண்டு- அதில் மூன்று கிராம் அளவு எடுத்து சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு சாப்பிட சீதபேதி குணமாகும். காலை, நண்பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

வில்வம் பழச்சதை சிறந்த மலமிளக்கியாகும். மேலும் வயிற்றறில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றி புற்று நோய் வராவண்ணம் காக்க கூடியது. நன்கு பழுத்த வில்வப்பழச் சதையை எடுத்து விதைகளை நீக்கி விட்டு பத்து முதல் 15 கிராம் அளவுக்கு சாப்பிட மலச்சிக்கல் உடைந்து நன்கு மலம் வெளியேறும்.

வில்வ இலைகளைத் தீநீராக்கி சுவைக்காக மிளகு மற்றும் உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க மலச்சிக்கல் குணமாகும்.

வில்வ இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சர்க்கரை சேர்த்து கொடுக்க மலச்சிக்கல் மறைந்து போகும்.

ஒரு வில்வபழத்தின் பாதி சதைப்பகுதியை எடுத்து விதை நீக்கிய பின் 50மி.லி குளிர்ந்த பசும்பாலை சேர்த்து சுவைக்காகப் போதிய சர்க்கரை சேர்த்து குடிக்க வெயிலில் செல்வதால் வரும் மயக்கம் தவிர்க்கப்பெறும்.

வில்வ இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி தீநீராக்கி சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்க குடல் புண் குணமாகும்.

வில்வ இலையை இரவு நீரிலிட்டு ஊற வைத்து காலையில் அந்த நீரைக்கொண்டடே வில்வத்தை அரைத்து 15மி.லி அளவுக்கு அன்றாடம் குடித்து வர கனையத்துக்கு பலம் தந்து இன்சுலினை சுரக்கச்செய்யும். இதனால் ரத்தத்தில் மிகும் சர்க்கரை அளவு மட்டுப்படுவதோடு மலச்சிக்கலுக்கும் முடிவு ஏற்படும்.

வில்வ இலைகளை நசுக்கி நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு ஓரிரு சொட்டுக்கள் காதில் விட்டு வர காது நோய்கள் குணமாகும். 

வில்வ இலைகள் சிலவற்றை நீரில்இட்டுக் கொதிக்க வைத்து அன்றாடம் காலையில் குடிப்பதால் ஆஸ்துமா குணமாகும். வில்வ இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி தினமும் 2 வேளை குடித்து வர காய்ச்சல் தணிந்து விடும்.

வில்வ இலைகளை நசுக்கி லேசாக சூடு செய்து பொறுத்துக் கொள்ளும் சூட்டில் கண்களின் மேற்பற்றாக வைத்து ஒரு துணியைக் கட்டி வைக்க கண் நோய்கள் குணமாகும். கண்பார்வை தெளிவு பெறும்.

வில்வம்பழம் புற்று நோயைத் தடுக்க கூடியது. வில்வப்பழத்தை ஒரு மண்டலம் சாப்பிடுவதால் பெண்களுக்கு மார்பகப் புற்று வராமல் தடுக்கப்படும். வந்ததும் கட்டுக்குள் வைக்கப்படும். வில்வபழத்தை கடுகெண்ணெய் இட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பயன்படுத்த உடலில் மற்றும் மூட்டுகளில் ஏற்பட்ட வீக்கமும் வலியும் குறையும்.

வில்வ இலையை விழுதாக அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு உள்ளுக்கு சாப்பிட்டு விட்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்துவர பெரும்பாடு என்னும் அதி ரத்தப் போக்கு குணமாகும்.

வில்வ இலை தளிரை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் ஒத்தடம் கொடுப்பதால் கண் சிவந்து காணுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண்வலி, ஆகியன குணமாகும்.

வில்வ இலையை சூரணித்து வைத்துக் கொண்டு இரண்டு வெருகடி அளவு எடுத்து அந்தி சந்தி என இருவேளை தேனில் குழைத்து உண்டு வர நீர்க்கோர்வை, தலைவலி, சளி, இருமல், தொண்டைக்கட்டு, காசநோய் ஆகிய நோய்கள் குணமாகும்.

வில்வ இலையும் மஞ்சள் கரிசாலை இலையும் சமஅளவு எடுத்து சூரணித்து வைத்துக் கொண்டு இரண்டு வெருகடி அளவு தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். ஈரல் பலம் பெறும்.

பிஞ்சு வில்வக்காயை அரைத்து 5-6 கிராம் வரை எடுத்து எருமைத் தயிரில் கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு குன்மம், சீதக்கழிச்சல் குணமாகும். குழந்தைகளுக்கும் உகந்தது.