விளக்கெண்ணெய்’ (Castor Oil)...

`விளக்கெண்ணெய்’ (Castor Oil)...

இன்றைக்கும் கிராமங்களில் நக்கல், நையாண்டி செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. சில குழந்தைகள் திருதிருவென விழிப்பதைப் பார்த்து, `வெளக்கெண்ண குடிச்ச மாதிரி ஏன் முழிக்கிறே?' என்று கேட்பவர்கள் உண்டு. உண்மையில் `ஆமணக்கு எண்ணெய்’ எனப்படும் விளக்கெண்ணெய் மருத்துவக் குணங்கள் நிறைந்த அற்புதம். கோயில்களில் விளக்கேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முக்கியமானது ஆமணக்கு எண்ணெய்தான். கும்பகோணம் அருகேயுள்ள திருக்கொட்டையூரில் உள்ள திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோயிலில் ஆமணக்குச் செடிதான் தலவிருட்சம். இங்கு வரும் பக்தர்கள் சிவனோடு, ஆமணக்குச் செடியையும் சேர்த்து வணங்குகிறார்கள். ஆமணக்குச் செடியில் `மூலவரான லிங்கம்' தோன்றியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவக் குணம் நிறைந்த விளக்கெண்ணெய் 

``ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெயை, ஆங்கிலத்தில் `Castor Oil’ என்பார்கள். இது, மற்ற எண்ணெய்களைப் போல் அல்லாமல் அடர்த்தி அதிகமாகவும் பிசுபிசுப்புத் தன்மையுடனும் காணப்படும். தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் ஆமணக்குச் செடியை, `கொட்டை முத்துச் செடி’ என்றும் சொல்வார்கள். குத்துச் செடியாக வளரக்கூடிய இதன் இலைகள் முரடாகவும், கொஞ்சம் அகலமாகவும் இருக்கும். செயல்திறன் நிறைந்த ரசாயனப் பொருள்கள் உள்ள இதன் விதைகளில் நச்சுத்தன்மை உண்டு. ஆனால், விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்ட பிறகு அதில் நச்சுத்தன்மை இருக்காது.

4,000 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கெண்ணெயின் மருத்துவக் குணங்களை அறிந்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். குழந்தைகளை அடிக்கடி விளக்கெண்ணெய் குடிக்க வைத்து, மலத்தை வெளியேற்ற வைத்து, வயிற்றை சுத்தமாக வைத்திருப்பார்கள். கிராமப்புறங்களில் இன்றைக்கும் விளக்கெண்ணெயைத்தான் பேதி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். காலையில் சூடான  டீ அல்லது காபியில் விளக்கெண்ணெயைக் கலந்து குடித்தாலே மலம் இளகி தாராளமாக வெளியேறிவிடும். இரவில் நாட்டு வாழைப்பழம் அல்லது பேயன் பழத்தை விளக்கெண்ணெயில் நனைத்துச் சாப்பிட்டால், காலையில் தாராளமாக மலம் கழியும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் விளக்கெண்ணெயை அவித்தல் முறையில் மட்டுமே செய்ய வேண்டும். கொட்டையை செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய் கொடுக்க கூடாது.

சிறுவயதில் குழந்தைகள் காரணமின்றி அழுவார்கள். அதாவது, சூட்டால் ஏற்படும் வயிற்றுவலியால் அழுவார்கள். அப்போது தலை, தொப்புள், உள்ளங்கால் பகுதிகளில் விளக்கெண்ணெயை வைத்தால், அது சூட்டைத் தணிக்கும்; இதனால் குழந்தைகளின் அழுகையும் நிற்கும். கோழைக்கட்டு, இருமல் இருந்தால் இரண்டு பங்கு விளக்கெண்ணெயுடன் ஒரு பங்கு தேன் சேர்த்துக் கொடுத்தால் வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும். தொப்புள் பகுதியில் தினமும் எண்ணெய்விட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். 
இன்றைக்கு கம்ப்யூட்டர், மொபைல் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களை மணிக்கணக்கில் பயன்படுத்துவதால் பலருக்கு கண்களில் வறட்சி ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தொப்புளில் விளக்கெண்ணெய் விடுவது நல்ல பயன் தரும். விளக்கெண்ணெயை உட்கொள்வதால் மலச்சிக்கல் தீரும். வயிறு தொடர்பான கோளாறுகள் நீங்கும், வாய்வுத்தொல்லை அகலும், வயிற்றுப் புண் நீங்கும், வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும், உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். விளக்கெண்ணெய் தேய்த்துக் குளித்தாலும் உடல் சூடு குறையும்.

கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பைப் போக்க விளக்கெண்ணெயைச் சூடாக்கி, அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து தடவலாம்; சிலநாள்களில் சரியாகிவிடும். மூக்கடைப்பு, சளித்தொல்லை, தலைவலியால் அவதிப்படுபவர்கள் விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து, தீயில் எரித்து அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் பிரச்சினை சரியாகும். குழந்தை பெற்ற தாய்மார்களில் சிலருக்கு போதிய அளவு தாய்ப்பால் சுரக்காமலிருக்கும். அவர்கள் மார்பகங்களில் மேல் விளக்கெண்ணெயைத் தேய்த்து வெற்றிலையை தோசைக் கல்லில் போட்டு லேசாகப் பொறுக்கும் சூட்டில் எடுத்துப் போட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்’’