கற்ப மூலிகை கோபுரந்தாங்கி...

சிறுநீரக கல் முதல் தலை வழுக்கை வரை எல்லா பிரச்சினைக்கும் தீர்வு தரும் கோபுரந்தாங்கி மூலிகை...

நாம் தினமும் பார்க்கின்ற, வீணாக முளைத்துக் கிடக்கின்ற செடிகள் என்று நாம் கடந்து செல்கின்ற எண்ணற்ற மூலிகைகள் நமக்கு இருக்கும் ஏராளமான உடல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க உதவுபவை என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடுகின்றது. இவற்றில் மிக முக்கியமான ஒன்று மூலிகை தான் கோபுரந்தாங்கி மூலிகை. அந்த மூலிகையின் அற்புதங்களைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

கோபுர தாங்கி :

கட்டடிட இடுக்குகளிலும் பாறைகள் மற்றும் புதர்களுக்குள்ளாகவும் முளைத்துக் கிடைக்கும் செடி இது. இது அழிந்து வரக்கூடிய ஒரு மூலிகையாக தற்போது இருக்கிறது. இந்த மூலிகைச் செடியில் உள்ள விதைப்பையானது நீர் பட்டதும் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது. இந்த மூலிகை சித்த மருத்துவத்தில் சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், தலைமுடி பிரச்சினை மற்றும் புழு வெட்டுக்களைச் சரிசெய்யவும் முதன்மையானதாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அடங்கியுள்ள தாதுக்கள் :

ஏராளமான வைட்டமின்கள், கால்சியம் போன்ற சத்துக்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எக்கியாயிடின் மற்றும் பிளேவன் போன்ற மிகவும் அரிய வகையான தாதுக்களை இந்த மூலிகை கொண்டிருக்கிறது. மேலைநாட்டு மருத்துவ முறையில் வியாதிகள் போக்கும் தன்மைக்காக, இந்த வேதிச்சத்துக்கள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன. அப்படிப்பட்ட அற்புதங்கள் நிறைந்த செடிகளை நம் வீட்டுக்கு அருகிலே இருந்தும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். இன்றைய சூழலில் நாம் பெரும் பிரச்சினைகளாக நினைக்கும் பிரச்சினைகளுக்கு இந்த மூலிகை எப்படி மிகச் சிறந்த மருந்தாக அமைகின்றது என்பது குறித்து மிக விளக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

இரத்தத்தை சுத்திகரிக்க :

மனிதர்களின் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து, உடல் தசை நரம்புகளை வலுவாக்கி, உடலின் ஆற்றல் சக்தியை அதிகரித்து, பலவகையான வியாதிகள் நம் உடலை அண்டாமல் காத்து, உடல் இயக்கத்தை ஊக்கப் படுத்துவதால், மனித உடலையே கோபுரமாக சித்தர்கள் மறை பொருளில் உணர்த்தி, மனித உடலைக் காக்கும் இந்த அரிய மூலிகையை, கோபுரந்தாங்கி என அழைத்தனர். மேலும், சித்தர்கள் அருளிய காய கற்ப மூலிகைகளில் சிறப்பிடம், கோபுரந்தாங்கிசெடிக்கு இருக்கிறது.

​சரும வியாதி :

கோபுரந்தாங்கி மூலிகை பொதுவாக, சிறுநீரை உடலில் இருந்து அதிக அளவில் வெளியேற்றும், சிறுநீரகம் சார்ந்த அனைத்து வித பிரச்னைகளையும் சீர்செய்யும் ஆற்றல் மிக்கது, மேலும், சருமத்தில், தலையில் ஏற்படும் சிரங்கு, விஷப்பூச்சிகளின் கடியால், எச்சத்தால் ஏற்பட்ட புழு வெட்டு எனும் முடி உதிர்தலை தடுக்கும் இயல்புடையதாகும்.
சரும அரிப்பு, சருமத்தில் ஏற்படும் வெள்ளை நிற புழு வெட்டுக்கள், வெண்திட்டுக்கள் ஆகியவற்றுக்கு வாரம் இரண்டு முறையாவது இந்த கோபுரந்தாங்கி இலைகளை மை போல அரைத்துத் தடவி வந்தால் நிச்சயம் உங்களுடைய சருமப் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.

சிறுநீரக பாதிப்புகள் நீங்க கோபுரம் தாங்கி குடிநீர் :

கோபுரந்தாங்கி வேர் முதல் முழுமையான செடி, சிறுகண்பீளை, யானை நெருஞ்சில் இவற்றை சமூலமாக சேகரித்து அவற்றை அலசி நன்கு சுத்தம் செய்து வெயில் இல்லாமல் நிழலிலேயே உலர்த்தி எடுக்க வேண்டும். பின்பு அதேபோல் வெள்ளரிக்காய் விதைகளையும் காயவைத்து, இவை எல்லாவற்றையும் உரலில் அல்லது அம்மியில் நன்றாக இடித்து வைத்துக் கொண்டு, இந்த பொடியை அரை லிட்டர் நீரில் சுட வைத்து, மூன்றில் ஒரு பங்கு, இருநூறு மிலி அளவில் நன்கு சுண்டியதும், அதை காலையும் இரவும் உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தினமும் பருகி வர, சிறுநீரக எரிச்சல், சூடு குணமாகி, சிறுநீர் நன்றாக வெளியேறும். கடுகடுப்பு நீங்கும்.

சிறுநீரகக் கற்களுக்கு :

கோபுரந்தாங்கி குடிநீரை இரண்டு வாரங்கள் தினமும் இருவேளை பருகி வர, சிறுநீரக கற்கள் யாவும் கரைந்து வெளியேறி விடும். கோபுரந்தாங்கி மூலிகை, செம்பு போன்ற உலோகங்களையும், உப்புகளையும் கரைக்கும் ஆற்றல் மிக்கதால், சிறுநீரக கற்களை, விரைவில் சிறு நீரகத்திலிருந்து வெளியேற்றி, சிறு நீரகத்தை காத்து, உடல் நலத்தை சீராக்கும்.

உடல் தசைகள் வலுவாக :

கோபுரந்தாங்கி வேரை நன்கு அலசி, நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பொடியை சிறிது எடுத்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்து நெய்யுடன் கலந்து, தினமும் காலையும் இரவும் என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், உடல் தசைகள், எலும்பு நரம்புகள் நன்கு வலுவேறி, உடல் ஆற்றல் அதிகரிக்கும் அதேபோல. கோபுரந்தாங்கி இலைகள், கொட்டைக் கிரந்தை இலைகள் ஆகிய இரண்டையும் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் போட்டு வேகவிடுங்கள். 100 மிலி அளவு வரும்வரை வற்றச் செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் 48 நாட்கள், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் தசைகள் யாவும் இறுகி, உடல் நலமாகும். ஆயினும், காய கற்பம் எனும் இந்த மருந்தை உட்கொள்ள, சில பத்திய முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என பெரியோர் குறிப்பிடுகின்றனர். இதைக் குடித்தால் ஜிம்முக்குக் கூட போக வேண்டிய அவசியமே இருக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தலை முடிக்கு தைலம் :

கோபுரந்தாங்கி இலைகளை ஐம்பது இலைகள் அளவுக்கு எடுத்துக் கொண்டு, அந்த இலைகளைப் பிழிந்து சாறெடுத்து தனியே வைத்துக் கொண்டு, ஒரு இரும்பு வாணலியில் கால் லிட்டர் நல்லெண்ணெய் விட்டு, சற்று சூடானதும், கோபுரந்தாங்கி இலைச்சாறை எண்ணெயில் கலந்து, இலையின் பச்சை வண்ணம் முழுக்க முழுக்க எண்ணெயில் நன்கு இறங்கும்வரை கொதிக்க வைத்து, பின்னர் இந்த எண்ணெய் ஆறியதும், ஒரு குடுவையில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

தடவும் முறை :

குளிக்க செல்லும்போது, கோபுரந்தாங்கி தைலத்தை தலையில் தடவி, அரை மணி நேரம் நன்கு எண்ணெய் தலையில் ஊறிய பின், தலையை சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பு தேய்த்து நன்கு அலசி குளித்து வந்தால், தலை மற்றும் உடல் சூடு குறைந்து விடும். உடல் குளிர்ச்சி அடைந்து, கண் பார்வை மேம்படும், தலைமுடி உதிர்தல் குணமாகி, தலைமுடி கருமையாக நன்கு அடர்த்தியாகவுமு் செழித்து வளரச் தொடங்கும்.

புழுவெட்டு குணமாக :

சிலருக்கு, தலைமுடி சில இடங்களில், கொத்து கொத்தாக முடி கொட்டி ஆங்காங்கே சொட்டையாக முடி நீங்கி இருக்கும், விஷ ப்பூச்சிகளின் கடியினாலோ அல்லது அவற்றின் எச்சத்தாலோ உண்டாகும் இந்த பாதிப்புகள், மிகப்பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கும். அதை எப்படி மீண்டும் வளரச் செய்வது என்றும் தெரியாது. இதனாலேயே சிலர் வெளியில் செல்வதற்குக் கூட தயங்குவார்கள்.. இந்த புழுவெட்டு பாதிப்புகள் நீங்க, கோபுரந்தாங்கி தைலம் ஒரு வரப்பிரசாதமாகும். கோபுரந்தாங்கி இலைகளை அரைத்துச் சாறெடுத்து தலையில் தேய்த்து குளித்து வர, தலைப் புண், புழு வெட்டு, படை போன்றவை குணமாகி, முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் திரும்பவும், முடி கருகருவென வளர ஆரம்பிக்கும்.

தலை முடி உதிர்வை தடுக்க. :

தலைமுடி உதிர்தல் பாதிப்பு என்பது அதிக அளவில் காணப்படுகிறது, உணவு முறை மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, தூசி மாசுக்கள் இப்படி பல முக்கிய காரணங்கள் இருந்தாலும், சிலரின் முடி உதிர்தலுக்கு தலை மற்றும் உடல் சூடு முதன்மையான காரணமாக இருக்கும். மிக அதிக நெருக்கடியான பணிச் சுமை, குடும்ப சூழல் போன்ற பல காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் மிக அதிக அளவில் தலைமுடியை உதிரச் செய்யும்.

இந்த தலைமுடி உதிர்வை ஆரம்ப காலத்திலேயே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், பிறகு முடியெல்லாம் உதிர்ந்து, வழுக்கை கூட ஆகிவிடும். இவற்றிற்கெல்லாம் சிறந்த தீர்வாக நாம் கோபுரந்தாங்கி மூலிகையைச் சொல்லலாம். கோபுரந்தாங்கி இலைகளில் செய்யும் தைலத்தை தலையில் தேய்த்து, சில மணி நேரங்கள் ஊற வைத்து, அதன் பின்னர் குளித்து வந்தால், தலை மற்றும் உடல் சூடு குறைந்து, உடல் குளுமையாகி, தலைமுடி புத்துயிர்ப்பாக வளர ஆரம்பிக்கும், இந்த தைலத்தை வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும்.