உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி..

உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி..

அன்றைய காலக்கட்டத்தில், குடும்பம் என்றால் அது மிகப் பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தது. கோடை விடு முறை வந்தால் தாத்தா பாட்டிகளின்  ஊருக்கு செல்வதே ஒரு தனி கொண்டாட்டம் தான்.  நகரத்தின் இரைச்சலில் இருந்து, கிராமத்தின் அமைதி ஏகாந்தமாக இருக்கும்.  இங்கு தினமும் இரவு எட்டு மணியானாலே ஊர் அடங்கிவிடும். 

ஆனால் கிராமங்களிலோ, கோடைக் காலத்தில் பெரும் பாலான வீடுகள் விடுமுறையைக் கழிக்க வந்த விருந்தினர்களால் நிறைந்திருக்கும் என்பதால், இரவானாலும் வீதியே திருவிழா போல இருக்கும். பாட்டிமார்களும் வராது வந்த தங்கள் பேரப் பிள்ளைகளுக்கு தினம் ஒரு பலகாரம் செய்து தருவார்கள். அத்தனையும் உடல் சூட்டை தணித்து ஆரோக்கியம் கொடுக்கும் பலகாரமாகத்தான் இருக்கும்.

கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், களி, அரிசி பயத்தங் கஞ்சி, மோர், இனிப்புத்  தயிர் என்று பட்டியல் நீளும். இந்த இனிப்புத் தயிர்தான் இன்று லஸ்ஸி என்றழைக் கப்படுவது.  

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும்  ஏற்படும் சிறுநீர்க்கடுப்பு, உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் அருமையான, ஆரோக்கியமான 
உணவு இது. 

கருப்பட்டி வெந்தயக் கஞ்சி எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்...

பச்சரிசி -1 கப், 

தேங்காய் -1, 

பூண்டு -15பல், முட்டை -2 (தேவையெனில்), 

வெந்தயம்- அரை தேக்கரண்டி (குழம்பு கரண்டி),  

கருப்பட்டி - கால் கிலோ

செய்முறை

சுத்தம் செய்து ஊறவைத்த அரிசி யுடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து 
நன்றாகக் குழைய வேகவிடவும். கஞ்சி பதம் வர வேண்டும். தேங்காயைத் துருவி பால் பிழிந்து கொள்ளவும்.  தேங்காய்ப்பாலைக் குழைந்த அரிசி வெந்தயத்தில் ஊற்றவும். மற்றொரு அகலமான  பாத்திரத்தில் கருப்பட்டியைப் போட்டு கொதிக்க வைத்து,  கசடுகளை வடிகட்டவும். வடி கட்டிய கருப்பட்டி நீரை அரிசி  வெந்தய தேங்காய்ப்பால் விழுதில் ஊற்றி ஒன்றாகக் கலந்து கொதிக்க விடவும். (கொதி வந்ததும் முட்டையை உடைத்து நன்றாக அடித்து சேர்க்கவும். முட்டை தேவையெனில் சேர்க்கலாம்) நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். 

உடல் சூட்டைத் தணிக்கும் இந்தக் கருப்பட்டி வெந்தயக் கஞ்சி அனைவருக்கும் ஏற்றது. 

பூப்படைந்த பெண்கள் மாதம் ஒரு முறை குடித்து வந்தால் கருப்பை பலம் பெறும்.