சமைத்து சாப்பிடுவதன் காரணம்...

உணவை நாம் ஏன் சமைத்து சாப்பிடுகிறோம் தெரியுமா?

* சமைத்து சாப்பிடும்போது, உணவில் உள்ள பல்வேறு சுவைகள் மற்றும் உணவு பொருட்களில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து நமது உடலுக்குள் செல்கின்றன. அப்படி கலந்து செல்வதால் உணவில் ஏற்படும் மாறுபாடுகளால் அஜீரணம் தோன்றலாம். முரண்பாடான உணவுச்சேர்க்கையால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமலும் போகலாம்.

நறுமண பொருட்கள் :

* நறுமண பொருட்கள் உணவிற்கு சுவையை தருவதுடன் எளிதில் ஜீரணமாகவும் உதவுகிறது. சத்துக்களை உடலில் எளிதில் கொண்டுபோய் சேர்க்கிறது, அலர்ஜி ஏற்படாமல் பாதுகாக்கின்றது. 

* அதற்காகவே ஏலக்காய், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு ஆகிய எட்டு பொருட்களை குறிப்பிடத்தக்க விதத்தில் சேர்க்கிறோம். இவைகளை உணவின் குணத்திற்கும், சுவைக்கும் ஏற்ப சேர்த்து சமைத்து உண்டால் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தன்மையும் சமச்சீராக இருக்கும்.

* மேற்கண்ட நறுமண பொருட்கள் அனைத்தும் சிறிது கார சுவை உடையவை. ஜீரணத்தை எளிதாக்குவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண் கொல்லிகளையும் அழிக்கும். உணவில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்குகின்றன.

இனிப்பு உணவு :

* இனிப்பு உணவுகளை சமைக்கும்போது நெய் சேர்க்கிறோம். அது சிலருக்கு அஜீரணக்கோளாறை உண்டாக்கும். மேலும் இனிப்பு சுவை கப தன்மையை அதிகப்படுத்தும்.

அசைவ உணவு :

* அசைவ உணவு சமைக்கும்போது பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் இவற்றை கலந்து சமைப்பது மிகச்சிறந்த முறை. மிளகு சிறந்த கிருமிநாசினி. உணவில் உள்ள நச்சுக்களை நீக்கும் சக்தி மிளகிற்கு உண்டு. பூண்டு, இதயத்திற்கு மிக சிறந்த உணவு. ரத்தத்தில் கொழுப்பை சேரவிடாமல் காக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் பூண்டிற்கு உண்டு.

புளிப்புச்சுவை :

உப்பு, காரம், புளிப்புச்சுவை கொண்ட உணவுகளை சமைக்கும்போதும், கிழங்கு வகை உணவுகளை சமைக்கும்போதும் கட்டாயம் பெருங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணம் காரணமாகத் தோன்றும் நெஞ்சுவலி, சாப்பிட உடன் மலம் வரும் உணர்வு, குடல் அழற்சி நோய்களுக்கு பெருங்காயம் மிகச் சிறந்த மருந்து.

காரச்சுவை : 

* உணவில் காரச்சுவைக்காக மிளகாயை பயன்படுத்துகிறோம். இது வெப்ப வகை உணவு ஆகும். அதனால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்புண், மூலம் முதலிய நோய்கள் உண்டாகலாம். மிளகாயின் வெப்பத்தை குறைக்க அதற்கு சம அளவு கொத்தமல்லி விதையை (தனியா) கலந்து பயன்படுத்த வேண்டும். பச்சைமிளகாயை பயன்படுத்தும்போது, கொத்தமல்லி கீரையை சம அளவு சேர்த்துக் கொள்வது நல்லது.

காய்கறி மற்றும் கீரைகள் :

* காய்கறி மற்றும் கீரைகள் சமைக்கும்போது அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும் மஞ்சள் மிகச் சிறந்த கிருமிநாசினி. புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.

உணவுப் பொருட்களை நாம் ஏன் தாளிக்கிறோம் தெரியுமா?

* உணவு பொருட்களில் உள்ள சில வைட்டமின்கள் நீரில் கரையும் தன்மை உள்ளவை. சில கொழுப்பில் கரையும் தன்மை வாய்ந்தவை. உதாரணமாக கேரட், கீரைகளில் உள்ள வைட்டமின்கள் கொழுப்பில் கரையும். இவ்வகை உணவுகளை தாளிக்கும்போது, சிறிது எண்ணெய்யுடன் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போன்ற பொருட்களை சேர்க்க வேண்டும். அவைகளை சேர்த்து தாளிக்கும்போது, அதில் உள்ள நறுமண பொருட்கள் வெளிப்பட்டு எண்ணெய்யுடன் கலக்கும். அதை நாம் சாப்பிட்டால், உணவில் உள்ள வைட்டமின்கள் எளிதாக உடலில் சேரும். குழம்பு மற்றும் சாம்பாருக்கு கடுகுடன் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதுபோல ரசத்திற்கு கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், அந்த உணவுகளை உண்ணும்போது அதிக சுவை கிடைக்கும். சத்துக்களும் உடலில் சேரும்.