சிறுதானியங்களின் சூப்பர் ஸ்டார் !

சிறுதானியங்களின் சூப்பர் ஸ்டார் !

சிறுதானியங்களின் சிறப்புகளைப் பேசும்போதெல்லாம் குதிரைவாலி என்ற பெயரையும் கேள்விப்பட்டிருப்போம்.  

குதிரைவாலி என்பது சிறுதானிய வகையைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் இதனை Barnyard millet என்கிறோம். இதை ஆதிகாலந்தொட்டே மக்கள் அன்றாட உணவில் பயன்படுத்தி வருகின்றனர். உணவுத்துறை நிபுணர்களாகிய நாங்கள் இன்று குதிரைவாலி போன்ற சிறுதானிய வகைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

ஏனெனில், சரிவிகித உணவு என்பதை நாம் மறந்துவிட்டோம். எல்லோருமே இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் உழன்றுகொண்டு இருக்கிறோம். இதன் காரணமாக பல தரப்புகளில் இருந்தும் எத்தனையோ அறிவுரைகள் வருகின்றன. எனவே, உணவுப்பழக்கத்திலும் கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்துக்கு இடையே மாட்டிக்கொண்டு தவித்து வருகிறோம். இதனால் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்ற குழப்பம் வருகிறது.

ஒரு நேரம் பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் இட்லி, தோசை, சாதம் என உண்கின்றனர்; வேறொரு நேரத்தில் இவற்றைத் தவிர்த்துவிட்டு வேறு மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டுமென நினைக்கின்றனர். உதாரணத்துக்கு பேலியோ, கீட்டோ போன்றவற்றைக் குறிப்பிட்டு சொல்லலாம். அதாவது அவரவர் திருப்திக்கு ஏற்றவாறு, உணவு வகைகளைத் தேர்ந்து எடுத்துக் கொள்கின்றனர்.

குதிரைவாலியைப் பொறுத்தவரை அனைத்து தரப்பினரும் எந்தவித தயக்கமும் இல்லாமல் தாராளமாக உண்ணலாம். ஏனெனில் இச்சிறு தானியம் எண்ணற்ற பயன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், இதில் குறைந்த அளவே கலோரி உள்ளது. 25 கிராம் குதிரை வாலியை சமைத்தால் 75 கிராம் முதல் 90 கிராம் வரை உணவு கிடைக்கும். இதிலிருந்து 65 கலோரி வரை பெறலாம். அரிசி மற்றும் கோதுமை உணவுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. இரண்டாவதாக நார்ச்சத்து அதிகம் காணப்படுகிற உணவாகவும் உள்ளது.

எனவே, செரிமான மற்றும் மலச்சிக்கல் பிரச்னை வராது. மேலும், இதய சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கு நார்ச்சத்து மிகவும் ஏற்றதாகும். 25 கிராம் குதிரை வாலியில் 2.4 கிராம் அளவிற்கு நார்ச்சத்து இருக்கும். இன்று துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை உண்ணும் பழக்கத்திற்கு நாம் அடிமையாகி விட்டதால் நார்ச்சத்து இருக்கிற உணவு வகைகளைக் குறைவாக எடுத்துக்கொள்கிறோம். அதை சமன்படுத்த குதிரைவாலியைப் பயன்படுத்துவது அவசியம்.

குதிரைவாலியில் உள்ள ஸ்டார்ச் ரெசிஸ்டென்ஸ்(Starch Resistences) செரிமானத்துக்கு ரொம்பவும் முக்கியம். இது கார்போஹைட்ரேட் செரிப்பதைத் தாமதப்படுத்தும். அவ்வாறு செய்வதால் உடலில் குளுக்கோஸ் அதிகரிக்கும் குறியீடு (Glycemic Index) கட்டுப்படுத்தப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இச்சிறு தானியம் மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது. இச்சிறு தானியத்தில் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்(Micro Nutrients) அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது வைட்டமின் ஏ, பி, சி, டி, கே மற்றும் மினரல்களான இரும்பு, மக்னீசியம், காப்பர் போன்றவை போதிய அளவில் உள்ளது.இன்று பொதுமக்கள் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை. இதன் காரணமாக, நமது உடல் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸுக்காக ஏங்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறது. அதனால், இப்போதைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இதுதான் என்றும் சொல்லலாம்.

இன்றைக்கு மக்கள் 'அசைவ உணவு சாப்பிடுகிறோம், பேலியோ டயட் எடுத்துக் கொள்கிறோம்’ என்கிறார்கள். சரியான அளவில் வைட்டமின்கள், மினரல்களை சரியாக எடுத்துக் கொள்கிறார்களா என்றால் அந்தக் கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஏனெனில் உணவியல் வல்லுனர்கள் பரிந்துரை செய்ததைவிட மிகவும் குறைவாகவே அந்த உணவு முறைகள் உள்ளது. நமது உடல் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸுக்காக ஏங்கும் நிலையை குதிரைவாலி போன்ற பாரம்பரிய சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சரி செய்ய முடியும். இந்த தானியத்தை சிறுதானியங்களின் சூப்பர் ஸ்டார் என்றே குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம்.

குதிரைவாலியை சாப்பிடுவதற்கும் ஒரு முறை இருக்கிறது. இதனை நீண்ட நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதன் பிறகு நன்றாக சமைத்து உண்ண வேண்டும். அதிகம் பாலீஷ் செய்த குதிரைவாலியை சாப்பிடுவதால் பயன் இல்லை. கொஞ்சமாக பாலீஷ் செய்த குதிரைவாலியை சாப்பிட்டால் சத்துக்கள் கிடைக்கும். தினமும் 60 கிராமில் இருந்து 90 கிராம் வரை வாரத்தில் 5 நாட்கள் சாப்பிடலாம். இன்றைய தலைமுறையினர் நேரத்துக்குச் சாப்பிடுவது இல்லை. மேலும் எண்ணெய், மசாலா நிறைய உள்ள உணவுவகைகளைச் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் சாப்பிட்ட உடனே மேல் நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுகின்றனர். குதிரை வாலியில் இத்தகைய பிரச்னை இல்லை என்பதால் க்ளூட்டன் பிரச்னை உள்ளவர்களும் தாராளமாக உண்ணலாம்.

குழந்தைகளுக்கு அவர்களின் உடல் எடை, உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் குதிரைவாலி உணவுகளைத் தரலாம். தாய்மை அடைந்த காலத்தில் ஏற்படுகிற சர்க்கரை நோய், எடை அதிகரித்தல் போன்றவற்றையும் தடுக்கும் ஆற்றல் குதிரை வாலிக்கு உண்டு. எனவே, கருவுற்ற பெண்களும் தினமும் ஒருவேளை இதை சாப்பிடுவது பயன் தரும். மனிதனுடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. ஒரே இடத்தில், பல மணிநேரம் அமர்ந்தவாறு வேலை செய்வது அதிகரித்து, உடல் இயக்கத்திற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டது. நாம் உண்ணும் அளவுக்கு ஆற்றலைச் செலவழிக்கிறோமா என்பது கேள்விக்குறிதான். வெளிப்படையாக சொல்வதென்றால் சாப்பிடுவதற்கு ஏற்ற மாதிரி வேலை செய்வது இல்லை. எனவே, நன்றாகச் சாப்பிடுவதோடு ஆரோக்கியமாகவும் உண்பதும் அவசியம். அதற்கு குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் நிச்சயம் உதவும்.