மாவிலையின் அற்புத பயன்கள்

நீங்கள் அறிந்திராத மா இலையின் அற்புத பயன்கள்

அனைவரும் விரும்பும் சத்துமிகுந்த ஒரு பழம் என்றால் அது மாம்பழம்தான். மாம்பழம் மற்றும் மாங்காய் சாப்பிடுவதற்காகவே கோடை காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களே இங்கு அதிகம். ஏனெனில் இது சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல சத்துக்களும் அதிகம் நிறைந்த பழமாகும். மாங்காய் மட்டுமின்றி அதன் மர இலைகள் கூட ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது என்பது பலரும் அறியாத ஒன்று.

மா இலைகள் பல நோய்களை குணப்படுத்த கூடியவை அதே நேரம் காயங்களுக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படக்கூடியவை. வைட்டமின் சி, ஏ மற்றும் ப நிறைந்துள்ள இந்த இலைகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் இதனை உணவாகவே சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். நாம்தான் இதனை வீட்டு வாசலில் தொங்கவிடுவதோடு நிறுத்திவிடுகிறோம். மா இலையின் பல்வேறு மருத்துவ குணங்களை பற்றி இங்கு காணலாம்.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு மா இலை ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். மா இலையின் கொழுந்து இலைகளில் டானின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது ஆரம்பகால சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும். இந்த இலைகளை காயவைத்து பொடியாக்கி தேநீர் தயாரித்து குடிக்கலாம், அல்லது இரவு முழுவதும் இலைகளை நீரில் ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும். மேலும் இது ஹைபர்கிளேசிமியாவை குணப்படுத்துவதிலும் பயன்படுகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
மா இலையில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஹைப்போடென்சிவ் குணங்கள் உள்ளது. இவை இரத்த நாளங்களை வலிமைப்படுத்தி வெரிகோஸ் நோயை குணப்படுத்துகிறது. கொழுந்து இலைகளை உங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தாலே போதும் உங்கள் உயர் இரத்த அழுத்தம் தானாக குறையும்.

ஓய்வின்மை
பதட்டத்தால் அமைதியற்று சிரமப்படுபவர்களுக்கு மா இலை ஒரு மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும்.
நீங்கள் குளிக்கும் நீரில் சில மா இலைகளை போட்டு ஊறவைத்து பின்னர் குளியுங்கள். இது உங்கள் பதட்டத்தை போக்கி உங்களை புத்துணர்ச்சியாக உணர செய்யும். அதனால்தான் கோவில்களில் தீர்த்தங்கள் மா இலை மூலம் வழங்கப்படுகிறது.

சிறுநீரக கற்கள்
மா இலைகள் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்க கூடியது. தினமும் மா இலை பொடியை நீரில் கரைத்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற்றப்படும்.

சுவாச பிரச்சினைகள்
அனைத்து விதமான சுவாச பிரச்சினைகளுக்கும் மா இலைகள் சிறந்த தீர்வாக இருக்கிறது. குறிப்பாக சளி மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்க பட்டவர்களுக்கு இது மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும். மா இலையை கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து கசாயமாக குடித்தால் சில நிமிடங்களில் இருமல் குணமாகும். மேலும் இது குரல் இழப்பையும் சரி செய்யும்.

வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கை உடனடியாக குணப்படுத்த மா இலையை பயன்படுத்தலாம். மா இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி அதனை நீரில் கலந்து தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடித்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக குணமடையும்.
   
காது வலி
காது வலி என்பது அதிக வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்த கூடிய ஒரு வலியாகும். வீட்டு மருத்துவமான மா இலை இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். மா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறு சிறந்த காது மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் வேலை செய்யும். இந்த சாறை பயன்படுத்துவதற்கு முன் சிறிது சூடுபடுத்தவும்.

காயங்களை குணப்படுத்தும்
காயம் ஏற்பட்டு அந்த இடம் எரிந்தால் அதற்கு மா இலை எளிய நிவாரணத்தை வழங்கும். மா இலையை எரித்து அந்த சாம்பலை காயம் பட்ட இடங்களிலும், எரியும் இடங்களிலும் பூசினால் போதும். இது எரிச்சலை உடனடியாக கட்டுப்படுத்தி காயத்தை குணப்படுத்த தொடங்கும்.

விக்கல்
உங்களுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்தாலோ அல்லது வேறு ஏதேனும் தொண்டை பிரச்சினை ஏற்பட்டாலோ அதனை குணப்படுத்த மா இலை சரியான வீட்டு மருந்தாகும். சில மா இலைகளை கொளுத்தி அந்த புகையை சுவாசிக்கவும். இது உடனடியாக உங்கள் விக்கலை நிறுத்துவதோடு தொண்டை பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

குடலுக்கு நல்லது
சூடான நீரில் சில மா இலைகளை போடவும், பின்னர் இதனை மூடி வைத்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். அடுத்தநாள் காலை இதனை வடிகட்டி இந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை தொடர்ச்சியாக செய்து வரும்போது உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உங்கள் வயிறு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.