வேலிப்பருத்தி என்ற உத்தாமணி என்ற பிள்ளை வளர்த்தி...

வேலிப்பருத்தி என்ற உத்தாமணி என்ற பிள்ளை வளர்த்தி!!!


இதன் இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். இது நெஞ்சிலே இருக்கின்ற சளியை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.

இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.

நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச் சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.

கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.

இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.

இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.

கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகைகளாகும்.  அத்தகைய மூலிகைகளில் வேலிப்பருத்தி என்ற உத்தாமணியும் ஒன்று.

உத்தாமணி அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது தென்னிந்தியா முழுமையும் காணப்படும்.  வேலி ஓரங்களில்  கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர்.  இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும்.  இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

உத்தாமணி வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.


வேலிப்பருத்தி பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.  அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால்,  கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து  ரத்த அழுத்தம் குறையும்.  இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும்.  இது பற்றி அகத்தியர் பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு அற்புதமான மருந்து என்ற பகுதியில் கூறியுள்ளார்.  வர்ம பரிகார முறையில் இதுவே சிறந்த மருந்தாகும்.  மேலும் உடல் அசதியைப் போக்கும்.  நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும்.  நெஞ்சுலி குறையும்.


சிறு குழந்தைகளுக்கு மார்பெலும்புக்கூடு முன்தள்ளி, நோஞ்சான் போல காணப்படுவார்கள்.  இவர்களுக்கு, வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து  1 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் 1 ஸ்பூன்,  அருகம்புல் பொடி 1 ஸ்பூன்  சேர்த்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால், நோஞ்சான் தன்மை மாறி, உடல் வலுப் பெறுவார்கள்.


குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து நோஞ்சான் போல் காணப்படுவார்கள்.  இந்த வயிற்றுப் புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.  ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.


உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.

உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.

உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து  ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால்  வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.

பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.


சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு  முக்கிய பங்கு வகிக்கிறது.

காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.

இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.

இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம், பொடித்துக் காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.


இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.

5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.


உந்தாமணி, பொடுதலை, நுணா, நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.


தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.


இந்த இலையையும் , கருஞ் சீரகத்தையும் , நொச்சி இலையையும் எடுத்து நல்லெண்ணையில் பதமுடன் காய்ச்சி சனிக்கிழமையன்று ஆண்களும் வெள்ளிக் கிழமையன்று பெண்களும் தலையில் தேய்த்து என்னை முழுக்கு செய்தால் தலை  சம்பந்தப்பட்ட ஒற்றை தலைவலி, இரட்டை தலைவலி , மற்றும் தலை பாரம் ஆகியவை தீரும்