அரிய வகை மூலிகை...ஆடாதோடை !!!

அரிய வகை மூலிகை...ஆடாதோடை !!!

‘‘ஆடாதோடை குத்துச்செடி (புதர் செடி) வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.

இதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதனை உண்ணாது. ஆடு தொடாத இலை என்பதனால் ஆடு தொடா இலை என்பது மருவி ஆடாதோடை இலை என்று ஆயிற்று. ஒரு சிலர் இதனை ஆடாதொடை இலை என்றும் கூறுவர். ஆடு மாடுகள் நெருங்காது என்பதனால் இதனை தோட்டங்களில் வேலிப்பயிராக நட்டுவிடுவார்கள்.

ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.
- என்று அகத்திய மாமுனியால் போற்றப்பட்ட ஆடாதோடை செடி ஒரு அரிய வகை மூலிகையாகும். 

Adhatoda vasica என்பது இதன் தாவரவியல் பெயராக அறியப்படுகிறது. இச்செடியின் வேறு பெயர் வாசை. இச்செடியின் இலை, பூ, வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. எளிதாக வீட்டு மருத்துவமாக இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத்தில் ஆடாதோடை செடியின் இலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.

ஆடாதோடையின் சிறப்பு நன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது ஆடாதோடை இலை. ஆடாதோடையின் குணத்தை உரைக்க, ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும் என்ற சித்தர் வரிகளால் அறியலாம். பாடும் குழந்தைகளுக்கோ, பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்வார்கள். அவர்கள் ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.

ஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறைஆடாதோடை குடிநீர். குடிநீர் என்றால் குடிக்கும் மருந்து நீர் அதாவது நாம் கஷாயம் என்று சொல்வதன் தூய தமிழ் பெயர்.

கஷாயம் தயாரிக்கும் முறை

உலர்த்திய ஆடாதோடை
இலைகள் - 2-3  
அதிமதுரம் - ஒரு துண்டு, (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஒரு மஞ்சள் நிற வேர். இனிப்பாக இருக்கும். பார்க்க சுக்கு போல் இருக்கும்.) திப்பிலி- இரண்டு,
மிளகு - இரண்டு
மேலே கூறிய பொருட்களை ஒன்றிரண்டாக சிதைத்து (இடித்து) ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீர் அரை டம்ளர் நீராக வற்றியதும் வடிகட்டி அருந்தலாம்.

அருந்த வேண்டிய அளவு

பெரியவர்கள் என்றால் 25-30 மிலி, குழந்தைகளுக்கு என்றால் 5/15 மிலி, குழந்தைகளுக்குத் தரும் போது தேன் அல்லது வெல்லம் சேர்த்துத் தரலாம். இதன் மூலம் காய்ச்சல், இருமல், மார்புச்சளி ஆகியவை குணமாகும். குருதி அழல் எனப்படும் ரத்த அழுத்தம் இதனை அருந்த நன்மை பயக்கும். வழக்கமாக சாப்பிடும் ரத்த அழுத்த மாத்திரைகளுடன் இதனையும் சேர்த்து அருந்த அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும்.

(பிபி மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடலாம்) ஆடாதோடையின் மணப்பாகு
மணப்பாகு என்றால் சிரப் ஆடாதோடை இலைச் சாற்றுடன் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கொதித்து வாசம் வரும் நேரத்தில் பாகுபதம் பார்த்து இறக்கிய பின், ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சளி, இருமல் உள்ளவர்களுக்கு ஒரு டீஸ்பூன் முதல் இரண்டு டீஸ்பூன் வரை எடுத்து ஆறின வெந்நீர் சேர்த்து கலந்து கொடுக்கலாம். இந்த சிரப்பை குழந்தைகளுக்கு 5-10 மிலி வரை கொடுக்கலாம். ஆடாதோடை மணப்பாகு (ரெடிமேட்) சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஆடாதோடையின் சிறப்பு
ஆடாதோடை கோழை அகற்றுவதோடு, புழுக்கொல்லியாகவும், சிறுநீர்ப்பெருக்கியாகவும் செயல்படும்.
தற்போது மழைக்காலம். டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்திட்டுக்கள் (ப்ளேட்லெட்ஸ்) குறைந்துவிடும்.

அவர்கள் நவீன சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் கூடவே இந்த ஆடாதோடை மணப்பாகோ, கஷாயமோ எடுத்துக்கொண்டால் ரத்த திட்டுக்கள் அதிகரிக்கும். டெங்கு நோயாளிகளுக்கு உடலில் பல பாகங்களிலும் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தத் திட்டுக்கள் அதிகரிக்கும் போது ரத்தக் கசிவு கட்டுப்படும்.

இதன் கசப்பு சுவையால் வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும். சிறு குழந்தைகள் பூச்சித் தொல்லையால் சரியாக சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதனை கொடுத்து வந்தால் வயிற்றில் பூச்சித் தொல்லைகள் நீங்கி நன்கு பசி எடுக்கும். குழந்தையின் ஆரோக்யம் மேம்படும்.

இலைகளை வதக்கி மூட்டு வீக்கத்திற்கு சூடு பொறுக்கும் பதத்தில் பற்றிடலாம். ஆடாதோடை இலைச் சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து அருந்த மூக்கில் இருந்து வடியும் ரத்தம் நிற்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறமாக பார்க்க அழகாக இருக்கும். இதனை வதக்கி கண்கள் மீது வைத்தால் கண் எரிச்சல் தீரும். பச்சை இலைகளை நிழலில் உலர்த்தி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.’’